கதை நாயகி



வடசென்னை மக்களை ரொம்பப் பிடிச்சிருக்கு!

மும்பையிலிருந்து தமிழ் பேச கோலிவுட்டில் கால் பதிக்க வருகிற  நடிகைகளின் முதல்  அஸ்திரம் கவர்ச்சி. வாய்ப்புகளின் வாயிற் கதவை விரியத் திறந்து வைக்க அதுவே அவர்களின் ஆயுதம். விதிவிலக்காக வந்திருக்கிறார்  கலையரசி... ஸாரி... கேத்தரின் தெரசா. ‘மெட்ராஸ்’ பட நாயகி. வடசென்னையின் ஹவுசிங் போர்டு குடியிருப்புப் பெண்  கலையரசியாகவே வாழ்ந்து கவனம் ஈர்த்தவர்.

கலையரசியைப் போலவே பாசாங்கில்லாத சிரிப்பிலும் பேச்சிலும் மனதைப்  பற்றுகிறார் கேத்தரின்.
‘‘ஒருசில விஷயங்கள்ல நானும்  ‘மெட்ராஸ்’ கலையரசி மாதிரிதான். ரொம்ப ஸ்ட்ராங். பயங்கர இன்டிபென்டென்ட். அதனாலதானோ என்னவோ அந்த கேரக்டருக்கு இவ்ளோ பாராட்டு... தேங்க்ஸ்  டு தமிழ் சினிமா...’’ - பாராட்டு பொக்கேக்களுக்கு மத்தியில் பூவாகப் பூரிக்கிற கேத்தரின், துபாய் பொண்ணு! ‘‘அப்பா ஃபிரான்க் மரியோ அலெக்ஸாண்டர், அட்வர்டைசிங் அண்ட் மார்க்கெட்டிங்ல இருக்கார். அம்மா தெரசா, ஹோம் மேக்கர். ஒரே ஒரு தம்பி கிரிஸ்டோஃபர்,  செகண்ட் இயர் டிகிரி பண்றான்.
பிளஸ் டூ முடிச்சதும் படிக்கிறதுக்காக பெங்களூரு வந்தோம். பி.எஸ்சி. பயோடெக் படிச்சேன். நான் எப்பவுமே புதுசு புதுசா எதையாவது ட்ரை பண்ணுவேன்.  டான்ஸ், பாட்டு, ஐஸ் ஸ்கேட்டிங், பப்ளிக் ஸ்பீக்கிங், பியானோ வாசிக்கிறதுனு நான் பண்ணாத விஷயங்களே இல்லை. நான் என்ன பண்ணினாலும் அம்மாவும்  அப்பாவும் பயங்கரமா என்கரேஜ் பண்ணுவாங்க.

பெங்களூரு வந்ததும், காலேஜ் போயிட்டு வர்றதைத் தவிர எனக்கு வேற வேலையில்லை. செம போர்... அப்பதான் மாடலிங் ஐடியா வந்தது. ஹாபிக்காகவும்  பாக்கெட் மணிக்காகவும் மட்டும்தான் மாடலிங் ஆரம்பிச்சேன். நடிக்கிற ஐடியாவெல்லாம் அப்ப சத்தியமா இல்லை. ஆனாலும், மாடலிங்தான் என்னை
சினிமாவுக்கு அறிமுகப்படுத்தி வச்சது...’’ - மலையாள வாடையில்லாத ஆங்கிலத்தில் அழகாகப் பேசுகிறார் சேச்சி.

‘ஷங்கர் ஐபிஎஸ்’னு ஒரு கன்னடப் பட ஆஃபர்... ‘நீ நடிக்கிறதுல எங்களுக்கு நோ அப்ஜெக்ஷன். ஆனா, கதையைக் கேட்டு, உன் கேரக்டரை கவனமா செலக்ட்  பண்ணு’னு அம்மாவும் அப்பாவும் சொன்னாங்க. அடுத்தடுத்து கன்னடம், தெலுங்கு, மலையாளம்னு வரிசையா படங்கள் பண்ணிட்டிருந்தேன். என் மேனேஜர் மூலமா ‘மெட்ராஸ்’ ஆஃபர் வந்தது. டைரக்டரை மீட் பண்ணினேன். போட்டோ ஷூட் பண்ணினாங்க. கதையையும் என்  கேரக்டரையும் சொன்னார். மொத்த டீமுக்கும் ஆக்டிங் ஒர்க்ஷாப் நடந்தது. அப்புறம் நார்த் மெட்ராஸ், வியாசர்பாடியில  ஹவுசிங் போர்டு ஏரியாவுல 40 நாள் ஷூட்டிங்... அந்த என்விரான்மென்ட்... அந்த மக்கள்னு எல்லாமே வித்தியாசமா இருந்தது. ‘மெட்ராஸ்’ மாதிரி ஒரு படமும்  கலையரசி மாதிரி ஒரு கேரக்டரும் எனக்கு ரொம்பவே புதுசு. நான் ஏற்கனவே சொன்ன மாதிரி புதுசு புதுசா ட்ரை பண்ண நினைக்கிற என் கேரக்டருக்கு, இது  எக்சைட்டிங் எக்ஸ்பீரியன்ஸ்னுதான் சொல்லணும்...’’ என்கிறவருக்கு வடசென்னையையும் அங்கே வாழ்கிற மக்களையும் ரொம்பவே பிடித்துவிட்டதாம்!

‘‘சென்னையில என் ஃபேவரைட் ப்ளேஸாவே மாறிடுச்சு நார்த் மெட்ராஸ். ஒருநாள் லேட் நைட் ஷூட்டிங் போயிட்டிருந்தது. நானும் கார்த்தியும் எங்க  டயலாக்கை மறந்துட்டோம். ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்திட்டிருந்த மக்கள், பின்னாலருந்து டயலாக்கை கத்திச் சொன்னதும் எங்களுக்கு சிரிப்பு வந்திருச்சு. ஷாட் முடிஞ்சு, டைரக்டர் பேக்அப் சொன்னதும், அதே கிரவுட், ‘ஒன்ஸ்மோர்’னு  கத்தினாங்க. அந்த இன்னஸன்ஸை ரொம்பவே ரசிச்சேன்...’’ - நினைத்து நினைத்து சிரிக்கிறவர், முதல் பட ஸ்டைலில் ஹோம்லி ஹீரோயின் இமேஜை தக்க  வைத்துக் கொள்வாரா? அல்லது கிளாமர் பந்தயத்துக்குத் தயாராகி விட்டாரா?

‘‘கலையரசியே கிளாமரான பொண்ணுதான். கிளாமர் வேற... வல்கர் வேற... அந்த வித்தியாசம் எனக்குத் தெரியும். எனக்கு படத்துல என் கேரக்டர் முக்கியம்...  ஒட்டுமொத்தமா அந்தப் படம் எப்படிப்பட்டதுங்கிறது முக்கியம்... எனக்கு அதுல என்ன சேலஞ்ச் இருக்குங்கிறது முக்கியம். மாடர்ன் கேரக்டர்ல நடிக்கிறதுல  எனக்கு நோ அப்ஜெக்ஷன். எல்லா கேரக்டர்ஸையும் ட்ரை பண்றதுதான் ஒரு நல்ல ஆக்டருக்கு அழகு...’’ - தத்துவம் பேசுகிறவர், அடுத்து அதர்வா ஜோடியாக  ‘கணிதன்’, ‘மஞ்சப்பை’யின் தெலுங்கு வெர்ஷன் ‘எர்ராபஸ்’, ‘ருத்ரமாதேவி’ என 3 படங்களில் பிஸி. ‘‘புதுசு புதுசா எதையாவது ட்ரை பண்ணுவேன். டான்ஸ், பாட்டு, ஐஸ் ஸ்கேட்டிங், பப்ளிக் ஸ்பீக்கிங், பியானோ வாசிக்கிறதுனு நான் பண்ணாத விஷயங்களே  இல்லை!’’

கேத்தரின் தெரசா