வாழும் வரை வளமுடன்!



இந்தியாவில் உள்ள வளர் இளம் குழந்தைகளில் 50 சதவிகிதத்தினர் ரத்தசோகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனராம். காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட மற்ற  நோய்களைப் போல ரத்தசோகை வெளிப்படையாகத் தெரியாது. மறைந்து நின்று கொல்லும் எதிரியைப் போல பீடிக்கப்பட்ட நபரின் செயல்பாடுகளை  முடக்கிவிடக்கூடிய ஆபத்து நிறைந்தது ரத்தசோகை.

பதின் வயதுப் பெண்களுக்கு மட்டுமல்ல... இந்தியா போன்று வறுமையும் ஏழ்மையும்  சுகாதாரக் குறைவான சூழலும் உள்ள அநேக வளரும் நாடுகளில் இந்தப் பிரச்னை பொதுவான ஒன்றாகவே இருக்கிறது.  ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே வகையான உணவுப் பொருட்கள்தான் இருக்கின்றன. ஒரே வகையான உணவுதான் வீடுகளில்
சமைக்கப்படுகிறது. சமைத்துத் தருபவர்கள் முழுக்க முழுக்கப் பெண்களே. இருப்பினும், எப்படி பெண்கள் மட்டும் ஆரோக்கிய குறைவான, சத்துக் குறைவான  நோய்களுக்குத் தள்ளப்படுகிறார்கள்?

உடனடியாக மனதில் தோன்றும் காரணம் இரண்டாயிரம் ஆண்டுகால பின்னணி கொண் டது. ஆதிகாலம் தொடங்கி பெண்ணே ஆணுக்கு உணவு வழங்குபவளாக  இருக்கிறாள். பச்சை மாமிசம் சாப்பிட்ட காலம் தொட்டு, இன்று ‘நாண்’ சுட்டுப்போடும் காலம் வரை ஆணின் வயிற்றைக் குளிரச் செய்யும் பணியை பெண்ணே  கவனிக்கிறாள். பிறருக்குக் கொடுக்கும்போது அல்லது பிறரை கவனிக்கும்போது இயல்பாகவே அவர்களை முழுமையாக கவனிக்கும் அக்கறை தோன்றும்.  அதுவும் குடும்பத்தின் அச்சாணியாக, தலைவனாக இருக்கும் தந்தையை, கணவனை, மகனை கவனிக்கும்போது அக்கறைக்கும் அன்புக்கும் குறை இருக்குமா?  பெண்களால் பராமரிக்கப் படும் ஆண்களின் ஆரோக்கியத்துக்கு குறை ஒன்றும் நேர்வதில்லை. ‘ஆண்களுக்கு நோயே வருவதில்லை’ என்று இதன் பொருளல்ல.  சத்துக் குறைபாட்டால் வரும் நோய்கள் பெரும்பாலும் ஏற்படுவதில்லை.

குடும்பத்துக்கே உணவு படைக்கும் ஒரு பெண்ணால் தன்னுடைய உடலுக்குப் போதுமான உணவைச் சாப்பிட்டுக் கொள்ள  முடியாதா? யார் தடுத்துவிடப் போகிறார்கள்? சாப்பிடுவதற்குக் குடும்பக் கட்டுப்பாடுகளோ, ‘உண்டி சுருக்குதல் பெண்டிற்கு அழகு’ போன்ற அறிவுரைக்  கட்டுப்பாடுகளோ இன்றைக்குப் பெரும்பாலும் இருப்பதில்லை. பிறகு ஏன் பெண்கள் ரத்தசோகை போன்ற நோய்களில்  வீழ்கின்றனர்?

பெண்களுக்கு ரத்தத்திலேயே தனக்குத் தேவையான முழுமையான உணவை எடுத்துக் கொள்வதைப் பற்றிய தயக்க உணர்வு இருந்து வருகிறது. ஆரோக்கியம்  பற்றி இந்தத் தலை முறைப் பெண்களுக்குக் கொஞ்சம் விழிப்புணர்வு இருப்பதால் அவர்களை இதில் சேர்த்துக் கொள்ள வேண்டாம். வீட்டில் இருந்து  குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளும் தலைமுறையைச் சார்ந்த பெண்களுக்கே, இன்றுவரை இந்தத் தயக்க உணர்வு இருக்கிறது. கொஞ்சம் அதிகமாக  சாப்பிட்டுவிட்டாலும், குடும்பத்தினர் யார் உணவையோ தட்டிப் பறித்த குற்றவுணர்வுக்கு ஆளாகிவிடுகிறார்கள்.  

எந்த சத்தான உணவுப்பொருளைப் பார்த்தாலும் அதை வீட்டில் உள்ள ஆண்களுக்கும் ஆண் குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டும் என்பதில் கவனமாக  இருப்பார்கள்.
சட்டென எதையும் எடுத்து மனசு வந்து சாப்பிட்டு விடமாட்டார்கள். முன்பெல்லாம் கல்யாண வீடுகளில் வைக்கப்படும் இனிப்பு, வடை, அப்பளம் போன்ற  தின்பண்டங் களைக் கூட பந்தியில் வைத்த உடனே சாப்பிடும் பெண்களைப் பார்க்கவே முடியாது. புடவைத் தலைப்பில் முடிந்து வைத்தோ, முன்தயாரிப்பாக  அதற்கென்று கொண்டு வரும் தாள்களிலோ சுற்றி வைத்துக் கொள்வார்கள். வீட்டுக்கு வந்து தங்களுடைய குழந்தைகளை கூப்பிட்டுக் கொடுத்தால்தான் அவர்கள்  முகத்தில் மகிழ்ச்சியே வரும். குடும்பத்தில் எல்லாரும் அந்த விசேஷத்தில் சாப்பிட்டாலும் இதைப் பெண்கள் செய்வார்கள். ‘பிள்ளைகள் கொஞ்ச நேரம் கழித்துச்  சாப்பிடுமே’ என்ற ஆசை.
முந்தானையில் முடிந்துகொண்டு வருவதைப் பற்றிய கூச்ச உணர்வோ, தயக்கமோ பெண்களுக்கு இருந்ததில்லை. ஏறக்குறைய எல்லாருமே அப்படி செய்ததால்  யாரும் யாரையும் குற்றவுணர்வுக்கு ஆளாக்கியதில்லை. இது ஓர் உதாரணம் மட்டுமே. இப்படி பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தைப் பற்றிக் கவலைப்படாமல், குடும்பத்தின் ஆண்  உறுப்பினர்களுக்காக விட்டுக்கொடுப்பது தியாகமாகவும் அவர்களின் அடையாளமாகவும் இருந்து வருவதால், அதை நம் சமூகத்தின் பெண்கள் எல்லாருமே  விருப்பத்துடன் செய்கிறார்கள். அவர்களுக்கு அதில் எந்த முணுமுணுப்பும் இல்லை.

ஆண்களின் ஆரோக்கியத்துக்குக் கிடைத்த வரமாக, வீடுகளில் இன்றும் நடைமுறையில் இருக்கும் உணவு பரிமாறுதலைச் சொல்லலாம். ஆண்கள் எவ்வளவு  ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்பதை உணவு பரிமாறப்படும் கணத்தில் புரிந்து  கொள்ள முடியும். சாப்பிட வரும் ஆணுக்குத் தட்டைக் கழுவி வைத்து, அவனின்  முகக்குறிப்பில் இருந்தே விருப்பத்தை அறிந்து, ‘போதும்’ என்றாலும் இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்று வயிறு நிறையும் வரை உணவு பரிமாறி,  சாப்பிட்டத் தட்டிலேயே கையை கழுவிக் கொள்ளச் செய்யும் பெண்கள் இன்றுவரை இருக்கவே செய்கிறார்கள்.

ஆணும் பெண்ணும் வேலைக்குச் செல்லும் குடும்பங்களில் இன்று சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடுவது, அவரவரே எடுத்து வைத்துக் கொள்வது, உணவு மேஜையில்  உணவை வைத்துவிட்டு அவரவர் வசதியான நேரத்துக்குச் சாப்பிட்டுக் கொள்வது என்று வந்துவிட்டாலும், குடும்பத்தின் ஆண் சாப்பிடும்போது, ‘இன்னும் ஒரு  தோசை வாங்கிக்கிறீங்களா?’, ‘கொஞ்சம் சாம்பார் போடட்டுமா?’ போன்ற கேள்விகள், உள்ளே வேறு ஏதோ வேலையில் இருக்கும் பெண்ணிடம் இருந்து  ஒலிக்கவே செய்யும். பெண்களின் ஆழ்மனதுக்குள் தன்னுடைய ஆணின் உணவுத் தேவையை தான் நிறைவு செய்ய வேண்டும் என்ற உணர்வு இருக்கவே  செய்கிறது.

வாழ்நாளில் ஒரு பெண் தாயின் அருகாமையில் இருக்கும் காலத்தில் தனக்குப் பரிமாறப்பட்ட உணவைத் தவிர்த்து, வளர்ந்து பெரியவளான பிறகு, வேறெங்கும்  தனக்கு உணவு பரிமாறும் சூழலைச் சந்திப்பதில்லை. ‘இன்னும் கொஞ்சம் வைத்துக் கொள்கிறாயா?’ என்ற அக்கறையான குரலைக் கேட்பதில்லை. ‘பசிக்குதா’?,  ‘சாப்பிடுறயா?’ என்ற அன்பான குரலை அனுபவிப்பதில்லை (அப்படியே கேட்டாலும் அது வீட்டில் இருக்கும் இன்னொரு பெண்ணின் குரலாகத்தான் இருக்கும்).  கொலைப் பசி என்றாலும் அவளே வேகவேகமாக இரண்டு தோசை சுட்டு, தொட்டுக் கொள்ள ஒன்றுமில்லாமல் சாப்பிட்டு, பின் நிதானமாக மற்றவர்களுக்கு  சுவையான சட்னி, சாம்பாருடன் தோசை சுட்டுப் போட வேண்டும். நம் சமூகத்தில் குடும்பம் ஒரு பெண்ணை உட்கார வைத்துப் பரிமாறிச் சாப்பிட வைத்துப்  பார்த்ததே இல்லை.

அதனால்தான் உணவு விடுதிகளில் குடும்பத்துடன் சாப்பிட வரும் பெண்களை எனக்கு மிகவும் பிடிக்கும். சென்னை போன்ற பெருநகரங்களில் இரவு நேரங்களில்  நிரம்பி வழியும் உணவு விடுதிகளைப் பார்க்கையில், ‘இவர்கள் எல்லாம் வீட்டில் சமைக்கவே மாட்டார்களா? கும்பல் கும்பலாக ஓட்டலில் உட்கார்ந்து  சாப்பிடுகிறார்களே...’ என்று முன்பெல்லாம் தோன்றும். இப்போது, உணவகத்தில் ஒருவர் பரிமாற பெண்கள் உட்கார்ந்து சாப்பிடுவதைப் பார்க்கும்போது,  ‘பரவாயில்லை... இங்காவது அவர்களுக்கு அந்த வாய்ப்புக் கிடைக்கிறதே’ என்று சந்தோஷப்பட்டுக் கொள்கிறேன். ‘அந்தப் பரிமாறுதலில் அன்பும் அக்கறையும்  இருக்கிறதா’ என்ற சந்தேகங்களைக் கடந்து, ‘குறைந்தபட்சம் நடக்கிறதே’ என ஆறுதல் கொள்ளலாம்.

அங்கேயும் சில பெண்கள் குழந்தைகளுக்கும் கணவருக்கும் பங்கு வைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தால் சிரிப்பாகத்தான் இருக்கும். எத்தனை நூற்றாண்டுப்  பழக்கம்? அவ்வளவு எளிதாகப் போய்விடுமா! சமூகத்தின் வேர்கள் பெண்களின் மனதில் ஆழமாக இறங்கியுள்ளன... ‘தானும் தன்  குடும்பமும் நன்றாக இருக்க வேண்டுமென்றால், குடும்பத் தலைவனான ஆண் நலமாக இருக்க வேண்டும். ஆணின் நலத்தின் மூலமே குடும்ப நலனைப்  பாதுகாக்க முடியும்’ என்று.

தன்னுடைய தேவைகளை சுருக்கிக் கொண்டு தான் குடும்பத்தின் நலனைப் பராமரிக்க முடியும் என்று பெண்கள் நம்புவது வேடிக்கையானது. தானும்  குடும்பத்தின் அச்சாணிதான் என்ற புரிதலின்மையில் எழுவதுதான் இந்த தியாக குணம். ஒருபக்கம் சாய்ந்து நிற்கும் எல்லா தராசும் நியாயமற்றவையே... அவை  அன்பின் பெயரால் இருந்தாலும். பசியில் வாடும் ஓர் இணை மான்கள்  கையளவே தேங்கியிருக்கும் நீர்நிலையைப் பார்க்கின்றன. அங்கிருக்கும் நீர் ஒருவர் பருகி தாகம் தணிப்பதற்கு மட்டுமே போதுமானது. ‘ஆண் மான் பருகட்டும்’  என்று பெண் மானும், ‘பெண் மான் பருகட்டும்’ என்று ஆண் மானும் நீரைப் பருகுவதைப்போல பாவனை செய்கின்றன. இறுதியில் இரண்டுமே நீரைப் பருகாமல்  இறந்து போகின்றன. இந்தக் காதல் ஓவியத்தை நம் சங்க இலக்கியம் காட்டுகிறது. மான்களுக்குப் பதில் அந்தப் பாடலில் ஓர் ஆண்-பெண் இணை
காட்டப்பட்டிருந்தால் பெண் ஆணுக்கு எப்படியாவது அந்த நீரைப் புகட்டிவிட்டுதான் செத்துப் போயிருப்பாள்.

பெண் தன்னை உருக்குலைத்துக் கொள்வதால் அவளுக்கும் பயனில்லை. அவள் மிக நேசிக்கும் குடும்பத்துக்கும் பயனில்லை. குடும்பத்தில் இருக்கும் 5  பேருக்கோ, 4 பேருக்கோ நடக்கும் உணவுத் தேடல் பெண்களுக்கும் சேர்த்துத்தானே? ‘உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே’ என்று திருமூலர் பாடிய வரி  பெண்ணுக்குப் பொருந்தாதா என்ன? பெண் தன் ஆரோக்கியத்தைப் பேணிக் காப்பதை முதல் கொள்கையாக வைத்திருக்க வேண்டும். திருமணமாகி குழந்தைப் பெற்றுக்கொள்வது வரையே பெண்ணுக்கு ஆரோக்கியத்திலும்  அழகிலும் அக்கறை இருக்கும். இரண்டு குழந்தைகள் பெற்றெடுத்து, அவர்கள் வளர்ந்த பிறகு பெண்கள் தங்களின் தோற்றத்தில் கூட கவனம் செலுத்துவதில்லை.  ‘பெருநகரங்களில் படித்து வேலைக்குப் போகும் பெண்கள் எல்லாம் 60 வயதிலும் எவ்வளவு அலங்காரத்துடன் வெளியில் வருகிறார்கள் தெரியுமா?’ என்று காதில்  விழும் அங்கலாய்ப்புகளில் வெளிப்படும் பெண்களின் எண்ணிக்கை 10 சதவிகிதத்துக்கும் குறைவு என்பதால், நான் அவர்களை கணக்கில் எடுத்துக்  கொள்ளவில்லை.

அப்படி தன் தோற்றத்தில் வயது கூடிய பின்னும் கவனம் செலுத்தும் பெண்கள், இன்று வரை விமர்சனத்துக்கு ஆளாவதைப் பார்க்கலாம். ‘ரெண்டு புள்ளையைப்  பெத்துட்டு, இப்பப் போய் பூத மாவ பூசிக்கினு புதுப்பொண்ணு கணக்கா நிக்கறா? எதுக்குப் பூவ பின்னல்ல தொங்க விட்டுக்கிட்டுப் போறா? மடிப்புக் கலையாம  பொடவை கட்டுறா...’ என்று பெண் தன் தோற்றத்தின் நேர்த்திக்கு செய்து கொள்ளும் எல்லாம் விமர்சனத்துக்கு உள்ளாகும். இன்றும் கிராமங்களில் நடுவயது  தொட்ட பெண்கள் தினம் காலையில் குளித்து, தலையில் கொஞ்சம் அதிகமாக பூ வைத்துக் கொண்டாலும், புடவைக்கு ஊக்குப் போட்டுக் கட்டினாலும்,  மொத்தத்தில் அழுது வடியும் முகத்துடன் இல்லாமல் இருந்தால், அவர்கள்தான் குழாயடியிலும் வயல் வரப்புகளிலும் ரேஷன் கடைகளிலும் பாடுபொருள்.

‘கிராமத்துப் பெண்கள் கூட சிவப்பழகில் மயங்கி கையில் ஃபேர்னஸ் க்ரீம்கள் வைத்திருக்கிறார்கள்’ என்ற குற்றச்சாட்டுகள் உண்மையானால் நிச்சயம் நாம்  மகிழ்ச்சியடையலாம். கூடும் வெளிநாட்டு கம்பெனியின் விற்பனைக்காக அல்ல... ‘குறைந்தபட்சம் பெண்கள் தங்களின் தோற்றத்தின் மீது அக்கறை கொண்டு
விட்டார்களே’ என்று. கூடவே தோற்றத்தின் அழகை மிளிரச் செய்வது ஆரோக்கியமும் அளவான உடலும்தான் என்ற புரிதலையும் பெண்கள் வளர்த்துக் கொள்ள  வேண்டியிருக்கிறது.

உலகியல் வாழ்வை அனுபவிக்க அடிப்படையாக இருக்கும் உடலை பெண்கள் தங்கள் பெரும் சொத்தாக, அரிய பொக்கிஷமாகக் கருத வேண்டும்.  திருமணத்துக்குப் பிறகும் குழந்தைப் பேறுக்குப் பிறகும் உடலை பழைய நிலையில் வைத்திருக்க ஆர்வம் காட்ட வேண்டும். மேடிட்ட வயிறும் பருத்தப்
பின்புறங்களுமாக மிரட்டும் புதுவகை உடலமைப்போடு இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை.

பிறந்த ஒவ்வோர் உயிரினத்துக்கும் இறக்கும் வரை அதனுடைய ஆரோக்கியம் முக்கியம். அந்த ஆரோக்கியமே வாழ்வதற்கான உற்சாகத்தையும் தகுதியையும்  கொடுக்கிறது. இது பெண்களுக்கும் பொருந்தும். நமது உடல்... நமது நம்பிக்கை!

தன்னுடைய தேவைகளை சுருக்கிக்கொண்டுதான் குடும்பத்தின் நலனைப்  பராமரிக்க முடியும் என்று பெண்கள் நம்புவது வேடிக்கையானது. தானும் குடும்பத்தின் அச்சாணி தான் என்ற புரிதலின்மையில் எழுவதுதான் இந்த தியாக  குணம். மான்களுக்குப் பதில் சங்கப் பாடலில் ஓர் ஆண்-பெண் இணை காட்டப்பட்டிருந்தால் பெண் ஆணுக்கு எப்படியாவது அந்த நீரைப் புகட்டிவிட்டுதான் செத்துப் போயிருப்பாள்.

(நிறைய பேசுவோம்...  நிறைவாகப் பேசுவோம்!)