பக்க விளைவுகள் இனி இல்லை!



‘‘இளம்பெண்கள்,  கருக்குழாய் அடைப்புள்ளவர்கள், கருக்குழாயில் கர்ப்பம் தரித்துக் கலைத்தவர்கள்  போன்றவர்களுக்கு  ‘ஐ.வி.எஃப். லைட்’ சிகிச்சை  பொருத்தமானது!’’

கருத்தரித்தல் சிகிச்சைகளில் ‘ஐ.வி.எஃப்.’ ஒரு மைல்கல். வாடகைத்தாய் முறைக்கு மனம் ஒப்பாத தம்பதிகளின் கடைசி நம்பிக்கைகளில் இந்த சிகிச்சையும்  ஒன்று. நம்பிக்கை அளிக்கிற அதே நேரம், இந்த சிகிச்சைக்கான செலவு, குறைவான வெற்றி வாய்ப்பு, பக்க விளைவுகள் எனப் பல எதிர்மறையான  விஷயங்களுக்கும் குறைவில்லை. ‘ஐ.வி.எஃப்’ சிகிச்சை குறித்த அத்தனை பாதக விஷயங்களையும் களைகிற வகையில் வந்திருக்கிறது ‘ஐ.வி.எஃப் லைட்’  என்கிற புதிய சிகிச்சை. பெயருக்கேற்ற படி, இலகுவான, லேசான இந்த சிகிச்சையின் சிறப்புகள் பற்றிப் பேசுகிறார் மகப்பேறு  மருத்துவர் ஜெயராணி.


‘‘ஒரே ஒரு கருமுட்டை உருவாகும் இடத்தில் பல முட்டைகளை உருவாகச் செய்து, கருவாக்கும் முறையை ‘ஐ.வி.எஃப்.’ என்கிறோம். இந்த முறையில் வெற்றி  வாய்ப்பினை அதிகரிக்கச் செய்ய, அதிக முட்டைகளை வளரச் செய்ய வேண்டியிருக்கும். அதாவது 8 முதல் 10 முட்டைகள் உருவாகச் செய்வோம். இதற்கென  பிரத்யேக மருந்துகள், ஊசிகள் கொடுக்கப்படும். இப்படி நிறைய கருமுட்டைகளை வளரச் செய்வதால் சில பக்க விளைவுகள் உண்டாவதையும் தவிர்க்க

ஈஸ்ட்ராடியால் மற்றும் புரொஜெஸ்ட்ரோன் ஆகிய ஹார்மோன்கள் அதிகமாகி, கருவாக்கும் தன்மையைப் பாதித்து, அதன் தொடர்ச்சியாக கரு ஒட்டி வளரும்  தன்மை தோல்வியடையும் வாய்ப்புகள் அதிகமாகும். அதாவது, கருவின் தரம் நன்றாக இருந்தாலும், அது கர்ப்பப்பையின் உள்சுவரில் ஒட்டி வளரும் தன்மை குறையும்.
வெளிநாடுகளில் ‘ஐ.வி.எஃப்.’ சிகிச்சை செய்கிற போது, ஒரே ஒரு முட்டையை வைத்துதான் சிகிச்சை அளிப்பார்கள். இந்த சிகிச்சையில் ஒன்றுக்கு மேலான  குழந்தைகள் பிறக்கும் வாய்ப்புகள் அதிகம் என்பதால், அதைத் தவிர்க்க அங்கே ஒரு முட்டைதான் உபயோகிக்கப்படும். நம்மூரில் நிலைமை வேறு.

நிறைய முட்டைகளை உருவாக்கி சிகிச்சை ‘ஐ.வி.எஃப்.’ சிகிச்சையில் உள்ள மிகப்பெரிய சாதகம் என்றால் ஒரே முறையில் இதில் நிறைய முட்டைகளை உருவாக்க முடிவதுதான். அதனால் உபயோகித்த முட்டைகள் போக மீதத்தை உறைய வைக்கலாம். ஒருவேளை சிகிச்சை வெற்றிபெறவில்லை என்றால், ஏற்கனவே உறைய வைத்திருக்கிற
முட்டைகளை மட்டும் எடுத்து மறுபடி கருவாக்கத்துக்குப் பயன்படுத்தலாம்.

இந்த சிகிச்சையில் பாதகங்களுக்கும் குறைவில்லை. சிகிச்சைக்கான செலவில் 50 சதவிகிதம் ஊசிக்கானது. ஒரு நாளைக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும்.  கருமுட்டை வளர்ச்சியைத் தூண்டும் இந்த சிகிச்சையில், சினைப்பைகள் பெரிதாகலாம். ‘ஓவேரியன் ஹைபர் ஸ்டிமுலேஷன்’ (ளிபிஷி) என்கிற பிரச்னை  வரலாம். வயிற்று உப்புசம், வாந்தி, வயிற்றுப் போக்கு, லேசான எடை அதிகரிப்பு, வயிற்று வலி, நீர் கோர்த்துக் கொண்ட உணர்வு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு இது  காரணமாகலாம். இயற்கைக்கு மாறான இந்த சிகிச்சையில் நீண்ட கால பின் விளைவுகள் ஆபத்தானவை.

இப்படியான எல்லா பிரச்னைகளையும் தீர்க்கக் கூடியதுதான் ‘ஐ.வி.எஃப் லைட்’. சாதாரண ‘ஐ.வி.எஃப்’ போல, இதில் அதிக அளவு ஊசிகள் போடப்படுவதில்லை.
அதனால் அளவுக்கதிக முட்டை உற்பத்தியும் இருக்காது. எனவே, ஹார்மோன்கள் அதிகமாகி, அவை உண்டாக்கும் பிரச்னைகளும் தவிர்க்கப்படும். உருவாகும்  முட்டைகள்
தரமானவையாகவே இருக்கும் என்பதால்,  கருவாக்கம் தோல்வியடைகிற வாய்ப்பும் குறையும். அடிக்கடி ‘ஐ.வி.எஃப்’ செய்து தோல்வியை சந்தித்தவர்களுக்கு இந்த சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. இதில்  அதிகபட்சமாக 3 முதல் 4 முட்டைகள் மட்டுமே  உருவாக்கப்படும். கருமுட்டை வளர்ச்சி  தூண்டப்படுவதால் உண்டாகிற எந்த சிக்கல்களும், பக்க விளைவுகளும் இதில் இருக்காது.

முக்கியமாக ‘ஐ.வி.எஃப். லைட்’ சிகிச்சையின் செலவு, சாதாரண ‘ஐ.வி.எஃப்’ சிகிச்சை செலவில் பாதிதான். ஒரே முறையில் ஏகப்பட்ட முட்டைகளை உருவாக்கி,  தேவையற்றதை உறையச் செய்து, தேவைப்படும் போது உபயோகிக்கிற முறை மட்டும் இதில் சாத்தியமில்லையே தவிர, மற்றபடி பாதுகாப்பான, பக்க  விளைவுகளற்ற, குழந்தைப்பேறுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள இந்த சிகிச்சை, செலவுக்கு பயந்து ஐ.வி.எஃப்பை தவிர்க்கிற பலருக்கும் கவலை போக்கும். இளம்பெண்கள், கருக்குழாய்  அடைப்புள்ளவர்கள், கருக்குழாயில் கர்ப்பம் தரித்துக் கலைத்தவர்கள் போன்றவர்களுக்கு இந்த சிகிச்சை பொருத்தமானது...’’

- அதிதி