நிறைவுற்ற சகாப்தம்:1926-2022



“London Bridge Is Down.”
ஐக்கிய ராஜ்ஜியத்தின் மாட்சிமை பொருந்திய மகாராணி இரண்டாம் எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரியின் இறப்பை குறித்து வெளிப்படுத்திய வரையறுக்கப்பட்ட வார்த்தை இது. அதாவது தங்கள் மகாராணி இறந்துவிட்டால் அதன் பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதற்கு 1960ல் வரையறுக்கப்பட்ட முன்கூட்டிய திட்டமிடலே  ஆப்ரேஷன்
லண்டன் பிரிட்ஜ்.

இதில் மகாராணியின் இறப்பு அவர் குடும்ப உறுப்பினர்களுக்கு முதலில் தெரிவிக்கப்படும். பிறகு ராணியின் தனிச் செயலாளர் பிரதமரிடத்தில் அலைபேசியில் சொல்லும் வார்த்தை “லண்டன் பிரிட்ஜ் இஸ் டவுன்” என்பதே. பிரதமர் அதை அமைச்சரவை செயலாளரிடத்தில் தெரிவிக்க வேண்டும். இவர் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் செய்தியினை கொண்டு சேர்ப்பார். அதன் பிறகே ராணியின் இறப்பு குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு பிபிசி வழியாக மற்ற செய்தி ஊடகங்களுக்கு கொடுக்கப்பட்டு இறுதியாக நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்படும்.

அரசு கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டாலும், ராணி மட்டுமே இறந்திருக்கிறார், இங்கே அரசாட்சி நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது என்பதை குறிக்கும் விதமாய்
பக்கிங்ஹாம் அரண்மனையின் உச்சியில் அரச குடும்பத்தின் கொடி பறந்து கொண்டிருக்கிறது. ராணிக்கு பிறகு இளவரசர் சார்லஸ் மன்னராக பதவியேற்றிருக்கிறார்.

‘Grief Is The Price We Pay For Love’ என்கிற வாசகத்துடன், கருப்பு நிறக் கொடி ராணியின் புகைப்படம் தாங்கி  அரண்மனை நுழைவு வாயிற் கதவினில் கட்டப்பட்டிருக்கிறது. பிரிட்டிஷ் மகாராணி இரண்டாம் எலிசபெத் கம்பீரத்தோடு வீற்றிருந்த அதிகாரபூர்வ லண்டன் இல்லமான பக்கிங்ஹாம் அரண்மனை வளாகத்தைச் சுற்றிலும், ராணியின்  புகைப்படங்களை இணைத்து இறுதி அஞ்சலி வாசகங்கள் தாங்கிய பூங்கொத்துகள் குவிந்து வருகின்றன.

மக்கள் கண்ணீரோடு அரண்மனை வளாகத்தில் நின்று மௌன அஞ்சலி செலுத்தி வருகின்றனர். குவியும் பூங்கொத்துக்களை 12 மணி நேரத்திற்கு ஒரு முறை அரசு அப்புறப்படுத்தி வருகிறது. பக்கிங்ஹாம் அரண்மனையின் இணயதளமும், அரசு நிகழ்ச்சிகளும் முடக்கப்பட்டுள்ளன. பத்து நாட்களை துக்க நாளாக அரசு அறிவித்துள்ளது. தொலைக்காட்சிகள் ராணி குறித்த சிறப்பு செய்திகளை மட்டுமே ஒளிபரப்பி வருகின்றன.

மக்கள் அரண்மனை நோக்கி அலைகடலென திரண்டு வருகின்றனர். ரயில் நிலையங்கள் மக்கள் கூட்டத்தால்  நிரம்பி வழிகிறது. இரவு நேரங்களிலும் சாரை சாரையாய் வரும் மக்களிடம் அவரவர் நாட்டுக் கொடிகள் கைகளில் இருக்கிறது. வார இறுதி என்பதால் பள்ளி முடித்து குழந்தைகளும், கல்லூரிகளை முடித்து மாணவர்களும், அலுவலகப் பணி முடிந்து பொது மக்களும் அரண்மனை வளாகத்தில் தங்கள் ராணிக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பிபிசி., சி.என்.என்., சேனல்-4, ஸ்கை நியூஸ் என லண்டனில் உள்ள அத்தனை மிகப் பெரிய சேனல்களும், தங்களது  24 மணி நேர தற்காலிக ஒளிபரப்பு நிலையங்களை அரண்மனை வளாகத்திலே அமைத்து ராணி குறித்த செய்திகளையும் நேரலை செய்து வருகின்றனர். பொது இடங்களிலும், தேவாலயங்களிலும் ராணியின் புகைப்படத்துடன், ராணி குறித்த இரங்கல் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. 1926ம் ஆண்டு ஏப்ரல் 21ல் ஜார்ஜ் 6ம் மன்னருக்கும் எலிசபெத் ராணிக்கும் மகளாகப் பிறந்தவர் இரண்டாம் எலிசபெத் ராணி. 1947 ஜூன் மாதம் தன் 21 வயதில் க்ரீஸ் டென்மார்க் நாட்டின் இளவரசர் பிலிப்பை காதலித்து தன் கணவராகக் கரம் பற்றினார் ராணி எலிசபெத்.

1952 பிப்ரவரி 6 தன் அப்பா 6ம் ஜார்ஜ் மன்னர் மறைவுக்குப்பின், இரண்டாம் உலகப் போர் முடிந்த ஒரு காலகட்டத்தில், தன் 25 வயதில் இங்கிலாந்து சாம்ராஜ்ஜியத்திற்கே ராணியாகப் பொறுப்பேற்றார். அவர் பதவியேற்றபோது பிரிட்டன் பழைய பிரிட்டனாக இருந்தது. ராணுவத்தில் முறையாகப் பயிற்சி பெற்று பணியாற்றியவர் ராணி. அவர் அரசியாக பொறுப்பேற்ற பிறகு அவர் காலத்திலும் பல்வேறு போர்களில் இங்கிலாந்து பங்குபெற்றது.

 பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பல நாடுகள் இன்று குடியரசாக மாறியுள்ளபோதும், பிரிட்டன் இன்றும் மன்னராட்சி முறைக்கு உட்பட்ட நாடுதான். இவரின் எள்ளுப்பாட்டியான விக்டோரியா மகாராணிதான் தொடர்ச்சியாக 63 ஆண்டுகள் ஆட்சி செய்தவர். அவருக்குப் பிறகு தொடர்ந்து 70 ஆண்டுகள் இலங்கிலாந்து மகாராணியாக ஆட்சியில் இருந்தவர் ராணி இரண்டாம் எலிசபெத். உலக சரித்திரத்தில் பலகாலம் ஒரு நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருந்த அதிக வயதுடைய அரச குடும்பத்து நபர் என்கிற பெருமைக்
குரியவராகிறார் ராணி.

‘என் வாழ்வு முழுவதும் நீளமோ குறைவோ அது எப்படி இருப்பினும் அது மொத்தத்தையும் உங்களுக்கு சேவை செய்யவே அர்ப்பணிக்கிறேன் என உறுதி ஏற்கிறேன்’ என்பதே 25 வயதில் தன் முடிசூட்டு விழாவில் ராணி உதிர்த்த வார்த்தைகள். ராணியின் குடும்பத்தில் சில கசப்பான நிகழ்வுகளும் உண்டு. அதன் பொருட்டு அவர் மீது விமர்சனங்களும் உண்டு. ஆனாலும், அவரின் 70 ஆண்டுகால ஆட்சியில்  எந்த நாட்டின் மீதும் அவர் போர் தொடுக்கவில்லை. எந்த நாட்டின் ஆட்சியையும் கலைக்கவில்லை. எந்த ஒரு அரசாங்கத்திற்கும் விரோதமாக அவர் ஒரு  சின்ன செயல்பாட்டையும் செய்யவில்லை என்பதே மக்கள் அவரை இந்த அளவு கொண்டாடவும் போற்றவும் காரணம்.

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், ஆஸ்திரேலியா, கடனா, நியூஸிலாந்த் உள்ளிட்ட 15 நாடுகள் ராணியின் ஆளுகைக்கு கீழ் வருகின்றன. இந்த நாடுகளுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர்கள் இருந்தாலும் பிரஸிடென்ட் ராணி  அவர்களே. இந்த நாடுகள் அனைத்திற்கும் பிரதமரை ராணியே அறிவிப்பார். இவர் மகாராணியாக பொறுப்பேற்றபோது இருந்த இங்கிலாந்தின் பிரதமர் வின்ஸ்டென் சர்ச்சில் முதல், ராணி இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதமராக பொறுப்பேற்ற லிஸ் டிரஸ் வரை அவரது 70 ஆண்டுகால ஆட்சியில் இடைப்பட்ட காலத்தில் 16 பிரிட்டன்  பிரதமர்களை பொறுப்பில் நியமித்திருக்கிறார் ராணி.

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை உயிர்ப்போடு வைத்திருந்தவர். மன்னராட்சி முறையில் நவீன மாற்றங்களைக் கொண்டு வந்தவர். பிரிட்டிஷ் ஏகாதிபத்திய பேரரசின் மிகப் பெரும் ஆளுமை. பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்ற 50க்கும் மேற்பட்ட நாடுகள் உள்ள காமன்வெல்த் கூட்டமைப்பின் ஒப்பற்ற தலைவர். சமூக மாற்றத்தின் முன்னோடி. அதிகாரம் கைக்கு வந்தபோது அதை ஒரே இடத்தில் குவிக்காமல் ஜனநாயகப்படுத்தியவர்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் முடிவை ஏற்பதும், வானளாவிய அதிகாரம் இருந்தும் அரசியலமைப்பை மீறாமல் செயல்படுவதென எடுத்துக்காட்டாய் இருந்தவர்.அரச குடும்பத்திற்கும் அரண்மனை செலவினங்களுக்கும் தேவைப்படும் நிதிகளை மக்களின் வரிப் பணத்தில் இருந்து வழங்கும் மக்களின் 300 ஆண்டுகால நடைமுறையை மாற்றியவர். பெருவாரியான மக்கள் முகம் சுளிக்கா வண்ணம் வாழ்ந்து காட்டியவர்.

அரச குடும்பத்து வழக்கப்படி அதிகம் பேசமாட்டார். அதிர்ந்தும் பேசமாட்டார். ஆனால் நகைச்சுவை உணர்வு கொண்டவராக அறியப்படுகிறார். உலகின் எந்தத் தலைவருக்கும் இல்லாத வானளாவிய அதிகாரம் ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு உண்டு. உலகில் எங்கு வேண்டுமானாலும் செல்ல ராணிக்கு பாஸ்போர்ட் தேவையில்லை. மகாராணியாக அதிக நாடுகளுக்கு பயணம் செய்த சாதனைக்கு சொந்தக்காரராகவும் ராணி இருக்கிறார்.

ஓட்டுநர் உரிமமும் இவருக்குத் தேவையில்லை. சில நேரம் மாறுவேடத்தில் இவர் நகர் வலம் செல்வதாகவும் இங்கிலாந்து மக்களிடம் தகவல் உண்டு. ராணியின் உடை நாகரீகம் மற்றும் அவரின் உடை வடிவமைப்பைக் கண்டு ரசிக்கவே அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் உண்டு. ஒருமுறை அரசுமுறை பயணமாக இங்கிலாந்து சென்ற சவுதி அரசர் அப்துல்லாவை ஸ்காட்லாந்தில் உள்ள தன்னுடைய பால்மோரல் எஸ்டேட்டிற்கு, தன்னுடைய ரேஞ்ச் ரோவர் காரை தானே ஓட்டி விருந்துக்கு அழைத்துச் சென்றுள்ளார் ராணி. அப்போது சவுதியில் பெண்கள் கார் ஓட்ட அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வரலாற்றில் அழிக்க முடியாத இந்த தருணத்தை நாங்கள் எங்கள் நாட்டின் ராணிக்காக அவர் லெஹசியை காப்பாற்றுவதற்காகவே அவர் வாழ்ந்த அரண்மனையின் வளாகத்தில் நின்று மௌன அஞ்சலி செலுத்தி வருகிறோம். அவரது ஆன்மாவிடத்திலும் நல்வாழ்க்கை வாழ்வதற்கான உறுதிமொழியை எடுத்துச் செல்கிறோம் என்கின்றனர் லண்டன் மக்கள்.

ஒட்டு மொத்த நாடும் தங்கள் அனுதாபத்தை ராணிக்கு தெரிவித்து வருகிறது. ஸ்காட்லாந்தில் தன்னுடைய பால்மோரல் எஸ்டேட்டில் இறந்த ராணியின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக எடுத்துவரும் நிகழ்வு தற்போது நடைபெற்று வருகிறது.  

அவர் ஐக்கிய சாம்ராஜ்ஜியத்தின் மகாராணி மட்டுமல்ல... சகோதரியாக... மனைவியாக... அம்மாவாக... பாட்டியாக வாழ்ந்தவர். பெண்களுக்கு பெருமை தரக்கூடியவர். நமது சமகாலத்தில் வாழ்ந்து மறைந்த வரலாற்றின் உண்மை நாயகி ‘ராணி இரண்டாம் எலிசபெத்’ அவர்களுக்கு நமது அஞ்சலி.

மகேஸ்வரி நாகராஜன்