கிச்சன் டிப்ஸ்



*மாங்காய் தொக்கு, இஞ்சித் தொக்கு எதைச் செய்தாலும் அதில் கொஞ்சம் எலுமிச்சைச் சாறு பிழிந்தால் தொக்குகள் கெடாமல் ரொம்ப நாட்களுக்கு அப்படியே இருக்கும்.
*இட்லி பொடி தயாரிக்கும்போது வெள்ளை எள் சிறிதளவுடன் ஒரு ஸ்பூன் கொத்தமல்லி விதையையும் வறுத்து மற்ற சாமான்களுடன் பொடி செய்தால் பொடி வாசனையாக இருக்கும்.
*தக்காளி குருமா செய்யும் போது சிறிது வெங்காயத்தை பச்சையாக அரைத்து ஊற்றினால் குருமா சுவை அதிகமாகும்.

- தஞ்சை ஹேமலதா, தஞ்சை.

*பாயசத்திற்கு நிலக்கடலையை மெலிதாக நறுக்கி, நெய்யில் வறுத்துப் போட, முந்திரிப் பருப்புப் போலவே சுவையாக இருக்கும்.
*மண் பாண்டம், அல்லது மண் குவளையில் தயிருக்கு உறை உற்றினால் தயிர் கெட்டியாக இருக்கும். உடலுக்கு நல்லது.
*தக்காளிப் பழங்களை மிக்ஸியில் அரைத்து, சாம்பாரில் கலந்தால் சாம்பார் சிவப்பாகவும், ருசியாகவும் இருக்கும்.
*குழம்பில் உப்பு அதிகமாக போய் விட்டால் சிறிதளவு அரிசிப் பொரியை குழம்பில் தூவினால் அதிகப்படியான உப்பு அரிசிப் பொரியினால் ஈர்க்கப்பட்டு விடும்.

- எஸ்.ராமலட்சுமி, சிவகங்கை.

*இரவு சாதம் மீந்து விட்டால் சிறிது பாசிப் பருப்பை வேகவிட்டு சாதத்தில் சிறிது நீர் சேர்த்து வெந்த பாசிப்பருப்பைப் போட்டு நன்றாக வேகவிட்டு, நெய்யில் பெருங்காயம், மிளகு, சீரகம், இஞ்சி வறுத்துப் போட்டு உப்பு, கறிவேப்பிலை சேர்த்து பொங்கலாக (மிளகு பொங்கல்) சாப்பிடலாம்.
*கறிகளில் தேங்காய்க்கு பதிலாக நெற் பொரியை வெறும் வாணலியில் வறுத்தும் சேர்க்கலாம். உடலில் கொழுப்பு சேராது.
*வடு மாங்காய் ஊறுகாயில் மீறும் நீரை கொத்தவரங்காய், பாகற்காய், சுண்டக்காய் இவைகளை கட் செய்து ஊறவைத்து, வெயிலில் காய வைத்தால் வற்றலாகும். மிகவும் ருசியாக இருக்கும். எண்ணெயில் பொரிக்காமல் தண்ணீரில் நனைத்துப் பிழிந்து குழம்பில் போட்டால் வாசனை கம கமக்கும்.

- மாலதி நாராயணன், சென்னை.

*ரவை, சம்பா ரவை, சேமியா உப்புமாக்களுக்கு இறக்கி வைத்த பின் சிறிது எலுமிச்சை சாறு கலந்து பரிமாறினால் சூப்பர் சுவையுடன் இருக்கும்
*இஞ்சியை வதக்கி, உப்பு, புளி, சிறிது வெல்லம் சேர்த்து அரைத்து தொக்கு செய்து சாப்பிட்டால் உடம்புக்கு, செரிமானத்துக்கு நல்லது. கொரோனா
சமயத்தில் உடம்புக்கு மிகமிக நல்லது.
*வாழைத்தண்டில் பாசிப்பருப்பு சேர்த்து கூட்டு செய்யலாம். இது தவிர அவியல் போல் தயிர் சேர்த்தும் கூட்டு செய்யலாம்.
- கே.சாயிநாதன், சென்னை.

*பிரண்டையை சுத்தம் செய்யும் முன் கைகளில் தேங்காய் எண்ணெய் தடவிக் கொண்டால் கைகளில் அரிப்பு ஏற்படாது.
*நிலக்கடலை பருப்பை வறுத்து கரகரப்பாக பொடித்து வைத்துக் கொண்டால் முருங்கை கீரை பொரியல் செய்து இறக்கும் போது தூவினால் மிகவும் சுவையாக இருக்கும்.
*பொட்டுக் கடலை சட்னி செய்யும் போது அதில் நான்கு முந்திரி சேர்த்து அரைத்தால் நன்றாக இருக்கும்.

- சசிகலா, தருமபுரி.

*உளுத்தம் பருப்பு அரை டம்ளர் வெந்நீரில் ஊறவைத்து (அரை மணி நேரம்) தேவையான உப்பு, மிளகாய், பெருங்காயம் சேர்த்து மிக்சியில் அரைக்கவும். வாணலியில் ஒரு புரட்டு புரட்டினால் கெட்டியாக இருக்கும். கெட்டியாக கரைத்த அரிசி மாவில் இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக  எண்ணெயில் போட்டு எடுத்தால் அவசர போண்டா ரெடி. சிறு குழந்தைகள் விரும்புவர்.
*இட்லி தோசை மிளகாய் பொடி செய்யும் போது, இறக்கியவுடன் முழு பொட்டுக் கடலை கால் டம்ளர் போட்டுக் கிளறினால் எண்ணெய் இருக்காது. மிக்சியில் அரைக்க எளிது.

- பானுமதி வாசுதேவன், மேட்டூர்.

பச்சை சுண்டைக்காய் துவையல்

தேவையானவை: பச்சை சுண்டைக்காய் - 1 கப்,  கடுகு - 2 ஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 ஸ்பூன், பெருங்காயம், காய்ந்த  மிளகாய், புளி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் சமையல்  எண்ணெய் சிறிதளவு விட்டு கடுகு பொரிந்ததும், உளுத்தம் பருப்பு, காய்ந்த  மிளகாய், பெருங்காயத்தை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு மீண்டும்  சிறிதளவு எண்ணெய் விட்டு பச்சை சுண்டைக்காயை கருகாமல் வதக்கி எடுத்துக்கொள்ளவும். ஆறியபின் உப்பு, புளி, மிளகாய், பெருங்காயம், உளுத்தம் பருப்பு,  சுண்டைக்காய் போன்றவற்றை மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.

சுண்டைக்காயை  எண்ணெயில் வதக்கி விடுவதால் கசப்பு தெரியாது. மணமாக இருக்கும். இதனுடன்  கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்தும் அரைக்கவும். வெங்காயம், பூண்டு  சேர்த்தும் அரைத்துக் கொள்ளலாம். இது இட்லி, தோசை, சப்பாத்தி, தயிர்சாதம்  போன்றவற்றிற்கு தொட்டுக் கொள்ளலாம். சுடு சாதத்தில் நெய்(அ) நல்லெண்ணெய்  சேர்த்து பிசைந்து சாப்பிடலாம். மருத்துவ குணம் உள்ள சுண்டைக்காய் உடலுக்கு  மிகவும் நல்லது.

- ரேணுகா பாலாஜி, விழுப்புரம்.