சாதிப்பார்களா பெண் இயக்குநர்கள்?

எச்சரிக்கை: இங்கு வெளியாகியிருப்பவை நடிகை மரியம் ஜக்காரியாவின் புகைப்படங்கள். அவருக்கும் இந்தச் செய்திக்கும் தொடர்பில்லை. பெண் இயக்குநர்களை உயர்வாக சொல்லும் இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள அனைவரது படங்களும் கிடைக்காததாலேயே இந்த ஏற்பாடு. மற்றபடி வேறு எந்த நோக்கமும் இல்லை.

‘தமிழ் சினிமாவில் பெண் இயக்குநர்கள் அத்திப் பூத்தாற்போல அவ்வப்போது வந்தார்கள்... சென்றார்கள்...’ என்ற கருத்தே பொத்தாம் பொதுவாக வைக்கப்படுகிறது. ஆனால், அது உண்மையில்லை. எல்லா காலகட்டத்திலும் பெண் இயக்குநர்கள் தமிழ் சினிமாவில் இருந்திருக்கிறார்கள். தரமான படைப்புகளை தந்தும் இருக்கிறார்கள்; தந்து கொண்டும் இருக்கிறார்கள். மற்ற துறைகள் பெண்களை நுழையவே அனுமதி மறுத்த காலத்தில், பெண்களை சரிக்கு நிகர் சமானமாக அனுமதித்தது சினிமாதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மவுனப் படங்கள் பேசத் தொடங்கிய காலத்தில் தமிழ் சினிமாவின் முதல் நாயகி டி.பி.ராஜலட்சுமி. இவர், பிற்காலத்தில் தன்னை ஒர் இயக்குநராக அடையாளப்படுத்திக் கொண்டார். இவர் இயக்கிய முதல் படமான ‘மிஸ் கமலா’வுக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. முதன் முதலில் படமான சமூக நாவலும் இதுதான். பானுமதி ராமகிருஷ்ணா ‘சண்டிராணி’ படத்தின் மூலம் இயக்குநரானார். இருவருமே தயாரிப்பாளராகவும் தங்களை உயர்த்திக் கொண்டவர்கள்.

அதற்கு பிறகு பல பெண் இயக்குநர்கள் வந்தாலும் சிலரே கவனத்தை ஈர்த்தார்கள். நடிகை விஜயநிர்மலா 40 படங்கள் வரை இயக்கினார். அதில் இரண்டு தமிழ் படங்களும் அடங்கும். நடிகை லட்சுமி ‘மழலை பட்டாளம்’ மூலம் இயக்குநரானார். ஆனால், அதன் பிறகு ஏனோ படம் இயக்கவில்லை. நடிகை ஸ்ரீப்ரியா பல படங்களை தயாரித்தார். ‘நட்சத்திரம்’ உள்ளிட்ட சில படங்களை இயக்கினார். ‘புதிய ராகம்’ படத்தை இயக்கிய ஜெயசித்ரா, தன் மகன் நடிப்பில் ‘நானே என்னுள் இல்லை’ என்ற படத்தை சமீபத்தில் இயக்கினார். இதற்கிடையில் சில தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கினார்.


இவர்கள் காலகட்டத்தில் நடிகை அல்லாத சில பெண் இயக்குநர்களும் இருந்தார்கள் அவர்களில் முக்கியமானவர் ஜெயதேவி. சில படங்களில் இவர் நடித்திருந்தாலும் இயக்கமே இவருக்கு பிரதானமாக இருந்தது. தமிழில் அதிக படங்கள் இயக்கிய ஒரே பெண்மணி இவர்தான். 25 படங்களுக்கு மேல் இயக்கியிருக்கிறார். குஷ்பு நடித்த ‘பவர் ஆஃப் உமன்’தான் இவர் கடைசியாக இயக்கிய படம்.

இவர்களுக்கு அடுத்த காலகட்டத்தில் வந்த பெண் இயக்குநர்களில் பெரும்பாலானவர்கள், நடிகைகளே. கேமரா உமனாக வாழ்க்கையை ஆரம்பித்த சுஹாசினி, ‘இந்திரா’ மூலம் இயக்குநரானார். சாதிப் பிரச்சினைகளை சாடிய படம் இது. இவருடன் பணியாற்றிய கேமராவுமன் விஜயலட்சுமி, ‘சிகரம்’ உட்பட பத்து படங்களை இயக்கியிருக்கிறார். நடிகை ரேவதி, ‘மித்ரு மை பிரண்ட்’ என்ற ஒரே ஆங்கில படத்தின் மூலம் சர்வதேச அளவில் புகழ் பெற்றார். அதன்பிறகு ‘பிகிர் மிலேன்த்தா’ என்ற இந்திப் படத்தை இயக்கினார். சமீபத்தில் அவர் இயக்கிய குறும்படம் தேசிய விருதைப் பெற்றிருக்கிறது.

இவர்களது காலகட்டத்துக்குப் பிறகுதான் புதிய சிந்தனைகளுடனும், புதிக கதை களங்களுடனும் பெண் இயக்குநர்கள் வந்தார்கள். அதற்காக இதற்கு முந்தைய இயக்குநர்கள் திறமை குறைவானவர்கள் என்று அர்த்தமில்லை. அவர்கள் அந்தந்த காலகட்டத்தில் நிலவிய திரைப்பட சூழலை கருத்தில் கொண்டு தங்கள் படங்களை கொடுத்தார்கள். பெரும்பாலும் செண்டிமெண்ட், காமெடி, பாடல்களை மையமாக கொண்ட படங்களாக அவை இருந்தன. விஜயநிர்மலா கமர்ஷியல் படங்களை கொடுத்தார். தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னட மொழிகளில் தயாரான ‘ராம் ராபர்ட் ரஹிம்’ இதற்கு ஒரு உதாரணம்.

ஜானகி விசுவநாதன் ‘குட்டி’ படம் தந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ‘துரோகி’ என்ற கமர்ஷியல் படம் தந்து பெண் இயக்குநர்களாலும் ஆண் இயக்குநர்களுக்கு இணையாக வர்த்தகரீதியான படங்களை தர முடியும் என்பதை நிரூபித்தார் சுதா. வட சென்னை மக்களின் வாழ்க்கையை யதார்த்தமாக சொன்னார் ‘வெப்பம்’ அஞ்சனா. இயக்குநர் மதுமிதா, ‘வல்லமை தாராயோ’, என்ற மனவியல் ரீதியான படத்தையும், ‘கொல கொலயா முந்திரிக்கா’ என்ற காமெடி படத்தையும் தந்தார். ‘திருதிரு துறுதுறு’ என்ற படத்தின் மூலம் பரபர திரைக்கதையை கையாண்டார் நந்தினி. ‘கண்ட நாள் முதல்’ பிரியா.வி. நம்பிக்கையை விதைத்திருக்கிறார். தன் கணவருடன் இணைந்து ‘ஓரம்போ’, ‘வ - குவார்ட்டர் கட்டிங்’ படங்களை கொடுத்து அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் காயத்ரி. ‘சிருங்காரம்’ படத்தின் மூலம் தேசிய விருதுகளை அள்ளிய சாரதா ராமநாதன், இப்போது ‘புதிய திருப்பங்கள்’ படத்துடன் திரும்பவும் வருகிறார். சிறுவர் சிறுமிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் அண்டர்கிரவுண்ட் தாதாக்கள் பற்றி துணிச்சலாக சொல்ல இருக்கிறார். சூப்பர் ஸ்டாரின் மகள் ஐஸ்வர்யா தன் கணவர் தனுஷ் நடிக்க ‘3’ படத்தை இயக்கியிருக்கிறார். அடுத்த மகள் சவுந்தர்யா முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டாரை இயக்கும் பெருமிதத்துடன் லண்டன் பறந்திருக்கிறார். பெண்ணியவாதியாக அறியப்படும் நடிகை ரோகிணி, ‘பம்பரம்’ என்ற படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுக்கிறார்.

கட்டுரையின் முதல் பத்தியில் குறிப்பிட்டதைப்போல பெண் இயக்குநர்களால் நிறைந்ததுதான் தமிழ் சினிமா. ஆனாலும் நல்ல படங்கள் கொடுத்த பெண் இயக்குநர்கள் அடுத்தடுத்து படங்கள் இயக்கவில்லையே ஏன்... தமிழ் நாட்டில் பெண்கள் இயக்குநராவது கடினமா, இயக்குநராக நீடிப்பது கடினமா... போன்ற கேள்விகளுக்கான விடைகள்தான் கிடைக்கவில்லை. ஒருவேளை அடுத்து வரும் பெண் இயக்குநர்களின் படைப்புகள் இதற்கு பதிலாக இருக்கலாம்.
- மீரான்