பப்பாளி



வழக்கமாக அப்பா, மகன் கதைகளில் டன் கணக்கில் பாசத்தைக் கொட்டி படம் எடுப்பார்கள். ஆனால் இது வேற மாதிரி கதை. பெரிய ஓட்டல் அதிபராக வேண்டும் என்று  அப்பா கனவு காண்கிறார். ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும் என்று மகன் கனவு காண்கிறார். யாருடைய கனவு பலித்தது என்பது மீதிக்கதை.

வீட்டுக்கு அடங்காத பையன் ரோலுக்கு கச்சிதமாக பொருந்துகிறார் செந்தில். காதலி யிடம் கலாய்க்கும் போதும் சரி, வருங்கால மாமியாரிடம் சதாய்க்கும் போதும் சரி நக்கல், நையாண்டியில் பின்னி எடுத்திருக்கிறார். ஆனால் ஐ.ஏ.எஸ் பரீட்சைக்கு பாதி படத்துக்கு மேல் முயற்சி செய்வதுதான் கேரக்டருடன் ஒட்டவில்லை. இஷாராவுக்கு சொல்லுமளவுக்கு பெரிய ரோல் இல்லை. ஆனால் அவருடைய வசீகரமான தோற்றம் ரசிகர்களை முணுமுணுக்க வைக்கிறது.

மொத்தப் படத்தையும் தாங்கிப் பிடிக்கும் ஜாக்கியாக சிங்கம்புலி வருகிறார். டைமிங்காகவும், ரைமிங்காகவும் பேசி சிரிக்க வைக்கிறார். மாமியார் கேரக்டரில் வரும் சரண்யா, தள்ளுவண்டிக்காரராக வரும் இளவரசு ஆகியோரின் நடிப்பில் யதார்த்தம் தாண்டவமாடுகிறது. விஜய் எபிநேசர் இசையில் பாடல்கள் ஓ.கே. ஒரு மனிதனுக்கு படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை சீரியஸாக சொல்லாமல் சிரிப்பு மருந்து கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஏ.கோவிந்தமூர்த்தி.