நாட்டுக்காக சிறை சென்ற பாட்டுக்காரர்!



பாடகராக இவரது உச்சரிப்பில் குறை சொன்னவர்கள் எல்லாம், இசையமைத்த  வாத்தியத்துக்கு வளைந்து போனார்கள். ஆந்திரத்து சவுதபல்லி கிராமத்தில், ஏழ்மையில் வாடியவர் கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ்.

ஹரிகதை குழுவில் மிருதங்கம் வாசித்து வந்த அப்பா சூர்யநாராயணா, இவரது பதினொரு வயதில் காலமாகிவிட்டார். இசையில் நாட்டம் இருந்ததால், விஜயநகரம் இசைக்கல்லூரியில் படித்தார். சத்திரம், சாவடிதான் தங்குமிடம். பிரசாதமும் அன்னதானமும்தான் வயிற்றை நிரப்பின.

இருபது வயதில் பட்டம் பெற்றார். இசைத்திறமைக்காக ஒரு தம்பூரா பரிசும் பெற்றார். 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் கலந்து கொண்டு, ஒன்றரை ஆண்டு சிறையில் இருந்தவர், திரும்பி வந்து நாடகங்களில் பின்பாட்டுப் பாடியும், நடித்தும் பிழைப்பை ஓட்டினார். பாடலாசிரியர் சமுத்ராலா ராகவாச்சார்யா மூலம் சினிமா வாய்ப்பு வந்தது.

சென்னைக்கு வந்த கண்டசாலா 'சீதாராம ஜனனம்', 'தியாகய்யா' படங்களில் சிறு வேடங்களில் தோன்றினார். சிலநாட்களில் இசைமேதை சி.ஆர். சுப்பராமனின் தொடர்பு கிடைத்தது. அவரது உதவி யாளராக வேலைசெய்தார்.

எம்.ஜி.ஆர் நடித்த ‘பைத்தியக்காரன்' படம் மூலம் சினிமா பாடகராக அறிமுகமானார் கண்டசாலா. 'குயில்போல இசைபாடும் குலமாமணியே...' என்ற அந்தப்பாடலை எம்.ஜி.ஆருக் காக இவரும், டி.ஏ மதுரத்துக்காக பெரியநாயகியும் பாடினார்கள். தான் தயாரித்த 'லைலா மஜ்னு'வில் கண்டசாலா பாடக் கூடாது  என்கிறார் பானுமதி.

அவர்தான் பாடவேண்டும் என்று அடம்பிடித்து, இடம்கொடுக்கிறார் இசையமைப்பாளர் சுப்பராமன். பானுமதியும் கண்டசாலாவும் இணைந்து பாடிய பாடல்கள் வரவேற்பை பெற்றன. 'நவஜீவனம்' படத்தில் எஸ்.வரலட்சுமியுடன் சேர்ந்து இவர் பாடிய 'ஈடில்லா காதலர் பாரினில் நாமே...' பாடல் வானொலி நேயர்களால் பலத்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

'மனதேசம்' படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் இசை யமைப்பாளர் ஆனார் கண்டசாலா. அந்தப் படத்தில்தான் என்.டி.ராமாராவ் அறிமுகம் ஆனார். தெலுங்குப் படங்கள் மொழிமாற்றமாகி, தமிழுக்கு வந்த போது சுப்பராமன் இசையில் நிறைய பாடினார் கண்டசாலா.

 நாகிரெட்டி, சக்ரபாணி தயாரித்த 'பாதாள பைரவி' படத்துக்கு இசையமைத்த கண்டசாலா தேர்ந்தெடுத்த பி.லீலாவை, வேண்டாம் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள். 'அமைதியில்லாதென் மனமே...', 'என்னதான் உன் பிரேமையோ...' என்று கண்டசாலாவும் பி.லீலாவும் இணைந்து பாடிய பாடல்கள் தயாரிப்பாளர்களை திருப்தியடையவும், ரசிகர்களை மகிழ்ச்சியடையவும் வைத்தன.

பாட்டும், இசையமைப்பும் நல்லபடியாக போய்க் கொண்டிருந்த நிலையில், 'பரோபகாரம்' படத்தை தயாரித்தார். அதில் ஒரு உபகாரமும் இல்லை.'ஜோடி  மாட்டுக்குள்ளே ஜோரான ரகளை...' என்று அவர் பாடியது மட்டும் எடுபட்டது.

நாகேஸ்வர ராவ் தயாரித்த 'எங்கவீட்டு மகாலட்சுமி' படத்தில், உடுமலை நாராயணகவி எழுதி, மாஸ்டர் வேணு இசையமைத்த 'ஆடிப்பாடி வேலை செஞ்சா அலுப்பிருக்காது' பாடலை சுசீலாவுடன் இணைந்து பாடினார் கண்டசாலா. உச்சரிப்பை குறைசொன்னாலும், பாடலுக்கு வரவேற்பு கிடைத்தது.

எஸ்.ராஜேஸ்வரராவ் விலகியதால், 'மாயா பஜார்' படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதில் பி.லீலாவுடன் இவர் பாடிய 'ஆகா இன்ப நிலாவினிலே...'வுக்கு சரியான வரவேற்பு கிடைத்தது. 'தேவதாஸ்' படத்தின் தமிழ், தெலுங்கு இரண்டிலும் நாகேஸ்வர ராவுக்கு பின்னணி பாடினார் கண்டசாலா. தமிழில் இடம்பெற்ற 'உலகே மாயம்... வாழ்வே மாயம்...' காலம் கடந்தும் கவனத்துக்குள் நிற்கிறது.

 'அலிபாபாவும் நாற்பது திருடர்களும்' படத்தின் 'உல்லாச உலகம் உனக்கே சொந்தம்...' பாடலும் இவர் பெயர் பேசும்.  கண்டசாலாவுக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கப்பட்டது. எஸ்.பி. பாலசுப்ரமண்யம் ஏற்பாட்டில் ஹைதராபாத்தில் இவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தானத்தின் ஆஸ்தான பாடகராகவும் கவுரவம் பெற்றவர் கண்டசாலா.

நெல்லைபாரதி