நெருங்கி வா முத்தமிடாதே



பெட்ரோல் தட்டுப்பாடு இருக்கும் ஒரு சூழ்நிலையில் திருச்சியிலிருந்து காரைக்காலுக்கு டீசலை கள்ளத்தனமாக சப்ளை செய்யும் அசைன்மென்ட்டை ஷபீரிடம் கொடுக்கிறார் ஒரு அரசியல்வாதி. ஆனால் இந்தியாவுக்கே கேடு விளைவிக்கப் போகும் அந்த டீசல் காரைக்கால் சென்றதா, இல்லையா?

அப்பாவுக்கும் ஹீரோவுக்கும் கருத்து வேறுபாடு. அது ஏன்? பிரபல பாடகியான அம்மாவை மகள் வெறுக்கிறார். அதற்கு காரணம் என்ன? தாழ்த்தப்பட்ட பையனும் உயர் ஜாதி பெண்ணும் காதலிக்கிறார்கள். காதலர்களின் கதி என்ன? ஒரு கதையை சொல்வதாக இருந்தாலே நிறைய சமார்த்தியம் வேண்டும். இப்படி ஒரே படத்தில் நான்கு கதைகளைச் சொல்லி படமெடுத்திருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

நாயகன் ஷபீர், நாயகி பியா, பியாவின் அம்மாவாக நடித்திருக்கும் விஜி, அரசியல்வாதியாக நடித்திருக்கும் ஏ.எல்.அழகப்பன், தம்பிராமையா உட்பட படத்தில் நிறைய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். எல்லோருமே தங்கள் பங்கை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். பாலசரவணனின் காமெடி படத்துக்கு திருஷ்டி.

 வினோபாரதியின் ஒளிப்பதிவு ரசிகர்களை கட்டிப்போடுகிறது. நான்கு கதைகளை எடுத்துக் கொண்டு அவற்றை ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தியிருப்பதால் எதுவும் முழுமை பெறாமல் அந்தரத்தில் தொங்குவது பெரும் பலவீனம். லட்சுமி ராமகிருஷ்ணனின் கடுமையான உழைப்புக்கு ஒரு சல்யூட்.