12 மணி நேரம் பாடிய ஒரு பாட்டு!



பாட்டுச்சாலை

இசைத் துறையில் தனது மகள் முன்னுக்கு வரவேண்டும் என்றால் சென்னைக்குச் செல்வதே சாலச்சிறந்தது என்ற முடிவுடன் ஆசிரியர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, எர்ணாகுளத்திலிருந்து குடும்பத்துடன் சென்னைக்கு வந்தவர் குஞ்சன் மேனன். இப்படியொரு பாசக்கார அப்பாவின் அந்த மகள் பொரயத் லீலா என்கிற பி.லீலா.

கேரளாவில் இருக்கும்போதே மணி பாகவதர், வடக்கஞ்சேரி ராம பாகவதர் ஆகியோரிடம் முறைப்படி சங்கீதம் கற்றுக் கொண்ட லீலா, சென்னைக்கு வந்ததும் பத்தமடை கிருஷ்ணய்யர், மருத்துவக்குடி ராஜகோபால அய்யர் ஆகியோரிடம் இசைப்பயிற்சி பெற்றார்.

அது 1944ஆம் ஆண்டு. சென்னை வித்வத் சபையில் ராகம், தானம், பல்லவியில் போட்டி. பாலக்காடு மணி அய்யர், ஜி.என்.பி ஆகிய ஜாம்பவான்கள் நீதிபதிகளாக இருந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு வென்றார் லீலா.கே.ஆர்.ராமசாமி- மேனகா நடித்த ‘கங்கணம்’ படத்தில் பத்பனாப சாஸ்திரி இசையில் நான்கு பாடல்களைப் பாடி  12ஆம் வயதிலேயே பாட்டுச்சாலையில் பயணத்தைத் தொடங்கினார் லீலா.  தொடர்ந்து ‘பில்ஹணா’ படத்தில் வாய்ப்பு வந்தது. இசைமேதை சுப்பராமன் தன்னிடம் இசை பயின்ற லீலாவை பல படங்களில் கோரஸ் பாட வைத்தார்.

‘பக்தகபீர்‘ கன்னடப்படத்தில் ஒரு பாடல் கொடுத்தார்.  இவரது இசையில் லலிதா-பத்மினி நடனமாடும் ‘மோகினி’ படத்தில் ‘ஆகா இவர் யாரடி...’ என்ற பாடலை கே.வி.ஜானகியுடன் இணைந்து பாடினார் லீலா. சுப்பராமன் கீரவாணி ராகத்தில் அமைத்த ‘ஓரிடந்தனிலே...’ என்ற பாட்டு ‘வேலைக்காரி’ படத்தில் இடம்பெற்றது. லலிதா- பத்மினி ஆடிய அந்தப்பாடலை லீலா பாடியிருந்தார்.

‘திகம்பர சாமியார்’ படத்தில் ஜி.ராமநாதன் இசையில் இவர் பாடிய ‘நாதர் முடி மேல் இருக்கும் நல்ல பாம்பே...’ பாடல் பலரையும் மயக்கியது. ‘சர்வாதிகாரி’ படத்தில் அஞ்சலிதேவிக்காக இவர் பாடிய ‘கண்ணாளன் வருவார்...’ என்ற பாடல் எக்கோ எஃபெக்ட் இல்லாத 1951லேயே அந்த எஃபெக்ட்டுடன் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.

‘மருதநாட்டு இளவரசி’யில் வி.என்.ஜானகிக்காக எம்.எஸ்.ஞானமணி இசையில் ‘தாயே தயாபரி...’ என்று பிரார்த்தனையில் உருகிய லீலா, ‘தேவகி’ படத்தில் அவருக்காக ஜி.ராமநாதன் இசையில், திருச்சி லோகநாதனுடன் இணைந்து ‘பேரின்பமே வாழ்விலே...’ என்று டூயட் பாடினார்.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தயாரித்த ‘மணமகள்’ படத்தில் பத்மினிக்காக எம்.எல்.வசந்தகுமாரியும் லலிதாவுக்காக லீலாவும் பாடுவதாக சுப்பராமன் முடிவு செய்தார். கச்சேரி மேடை ராணி வசந்தகுமாரியுடன் தன்னால் போட்டி போட்டுப் பாடமுடியாது என்றார் லீலா. வசந்தகுமாரியே தைரியம் சொல்லி பாடவைத்திருக்கிறார். ‘எல்லாம் இன்ப மயம்...’ என்கிற அந்தப்பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது.

‘பாதாள பைரவி’ படத்தில் கண்டசாலா இசையில் அவருடன் இவர் இணைந்து பாடிய ‘அமைதியில்லாதென் மனமே...’, ‘என்னதான் உன் பிரேமையோ...’ பாடல்களில் லீலாவின் குரல்வளத்துக்கு அங்கீகாரம் கிடைத்தது.தியாகராஜ பாகவதர் நடித்த ‘ராஜமுக்தி’யில் லீலா பாடுவதாக இருந்து, கருத்து வேறுபாடு காரணமாக விலகிவிட்டார். பாகவதரின் அடுத்த படமான ‘அமரகவி’யில் ‘செடி மறைவிலே ஒரு பூங்கொடி...’ என்ற பாடலைப் பாடினார்.

‘புதுயுகம்’ என்ற சொந்தப் படத்தை தயாரித்த ஜி.ராமநாதன் அதில் லீலாவுக்கு மூன்று பாடல்களைக் கொடுத்தார். கண்டசாலாவுடன் லீலா பாடிய பூவில் வண்டு...காதல் கொண்டு  பாடல் வரவேற்பைப் பெற்றது. எஸ்.ராஜேஸ்வரராவ் இசையில், ‘மிஸ்ஸியம்மா’ படத்தில் இவர் பாடிய ‘எனை ஆளும் மேரி மாதா...’, ‘தெரிந்துகொள்ளணும் பெண்ணே...’ ‘மாயமே நான் அறியேன்...’ பாடல்கள் லீலாவுக்கு பெயர்வாங்கிக் கொடுத்தவை.

ஜி.ராமநாதன் இசையில் இவர் ‘மதுரை வீரன்’ படத்தில் பாடிய ‘வாங்க மச்சான் வாங்க...’, பல ரசிகர்களை வசீகரித்தது. ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில்  நாட்டியப் போட்டிப் பாடலான ‘ராஜா மகள் புது ரோஜா மலர்...’

பாடலை வைஜயந்திமாலாவுக்காக ஜிக்கியும் பத்மினிக்காக லீலாவும் பாடியிருந்தார்கள்.  பாடலுக்கு அமோக வரவேற்புக் கிடைத்தது. எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையில் ‘அன்னையின் ஆணை’ படத்தில் ‘நீயே கதி ஈஸ்வரி...’, ஜி.ராமநாதன் இசையில் ‘உத்தமபுத்திரன்’ படத்தில் ‘காத்திருப்பான் கமலக் கண்ணன்...’,

கே.வி.மகா தேவன் இசையில் ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ படத்தில் டி.எம்.எஸ் மற்றும் குழுவினருடன் பாடிய ‘தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்...’, ‘பாகப்பிரிவினை’ படத்தில் டி.எம்.எஸ் கூட்டணியில் பாடிய ‘தாழையாம் பூ முடிச்சு...’, ‘புள்ளையாரு கோயிலுக்கு...’,

‘தேரோடும் எங்கள் சீரான மதுரையிலே...’, இதே கூட்டணி ‘இரும்புத்திரை’யில் இணைந்த ‘நெஞ்சில் குடியிருக்கும்...’, ‘நல்லவன் வாழ்வான்’ படத்தில் ‘குற்றால அருவியிலே குளிச்சதுபோல் இருக்குதா...’ என தேன் குரலால் ரசிகர்களைக் கவர்ந்தார் லீலா.

‘தங்கப்பதுமை’ படத்தில் பத்மினி பாடுவதாக அமைந்த ‘வாய் திறந்து சொல்லம்மா..’ பாடலை காலை 9 மணிக்கு ஆரம்பித்து இரவு 9 மணிக்கு பாடி முடித்திருக்கிறார். எம்.எஸ்.விஸ்வநாதனால் வெகுவாக பாராட்டப்பட்ட பாட்டு அது.

நீண்ட இடைவெளிக்குப் பின் இளையராஜா இசையில் ஸ்ரீவித்யாவுக்காக ‘கற்பூரமுல்லை’ படத்தில் பாடினார். இவருக்கு 1992ல் ‘கலைமாமணி’ விருது கிடைத்தது.  குழந்தை இல்லையே என்ற குறை இவரை வாட்டியெடுத்தது. நோய்வாய்ப்பட்டு மரணம் அடைந்தார் லீலா.

அடுத்த இதழில்...
இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன்!

நெல்லைபாரதி