சினிமாவுக்கு கதை எழுத கத்துக்கலாம்! மாணவன் 4



ஒன்லைன் வொண்டர்!

முரண்தான் கதையின் அடிப்படையே என்று கடந்த வாரம் சொன்னோம். நிறைய பேருக்கு இன்னமும் ‘முரண்’ என்கிற சொல்லின் அர்த்தம் சரியாகப் புரியவில்லை என்கிறார்கள்.தமிழின் முதல் பிளாக்பஸ்டர் ஹிட்டான பாகவதர் நடித்த ‘ஹரிதாஸ்’ படத்தில் வைக்கப்பட்ட முரண் என்னவென்று பார்ப்போம்.

ஹரிதாஸ் ஆடம்பரமானவர். போலியான சொகுசுவாழ்க்கையை விரும்பி, தன் மனைவியைக் கைவிட்டு, சின்னவீட்டோடு குஜாலாக இருக்கிறார். பணம் கரைந்து பஞ்சப் பராரியாக ஆனபின், அவரை சின்னவீடு கைவிட, மனம் திருந்துகிறார். தன்னுடைய பெற்றோருக்கும், இறைவனுக்கும் சேவை செய்து வாழ்க்கையின் எஞ்சிய காலத்தை அர்த்தமுள்ளதாக வாழும் முயற்சியை மேற்கொள்கிறார்.

அடிப்படையில் நல்லவரான ஹரிதாஸிடம் படத்தின் தொடக்கத்தில் வெளிப்பட்ட பகட்டான மனோபாவமும், அதை வெளிக்காட்ட அவர் வாழும் சொகுசான வாழ்வும்தான் படத்தின் முரண். ‘ஒருவனுக்கு ஒருத்தி’ கோஷம் ஓங்கி ஒலித்த அந்தக் காலகட்டத்தில் மனைவியைத் தள்ளிவைத்து, மாற்றாளை நாடுபவனுக்கு என்ன கதி ஆகுமென்று ‘ஹரிதாஸ்’ நடத்திய பாடம், திரைக்கதையில் வலுப்பெற்று அப்படத்தை இன்றுவரை யாரும் வெல்லமுடியாத மகத்தான வெற்றிப்படைப்பாக மாற்றியது.

இதே முரண்தான் ‘ரத்தக்கண்ணீர்’ திரைப்படத்திலும் எடுபட்டது. அடிப்படையில் இரண்டும் ஒரே கருவினைச் சுமந்த கதைகள்தான் என்றாலும் வேறுபட்ட கதாபாத்திரங்கள், மாறுபட்ட களம் என்பதன் அடிப்படையில் ஒன்றையொன்று ஒப்பிட்டுப் பார்க்க முடியாத அளவுக்கு தனித்தன்மை கொண்டவையாக விளங்குகின்றன.
நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்பார்கள்.

அந்த குடும்பம் புறச்சூழலால் (அதாவது இரண்டாம் உலகப் போரின் விளைவாக) சிதறினால் என்ன ஆகும் என்கிற கேள்விக்கு விடையே தமிழ்த் திரையுலகின் சாதனை திரைப்படமான ‘பராசக்தி’. குணசேகரனாக அறிமுகமான சிவாஜி, கலைஞரின் எழுத்தாணியில் பிறந்த அக்னி கக்கும் ஆவேச வசனங்கள், இன்று கேட்டாலும் தித்திக்கும் பாடல்கள் என்பதெல்லாம் அந்த ஒன்லைனரை அழகு படுத்தும் ஆபரணங்களே. ஏதோ காரணத்தால் குடும்பம் சிதறுவது, அதனால் குடும்ப உறுப்பினர்களின் வாழ்வில் ஏற்படும் பாதிப்பு என்கிற இந்த ஒருவரி முரண் நம் வி.சேகர் காலம் வரை சக்கைப்போடு போட்ட கருதான்.

குடும்பம் என்றில்லை; கணவன்  மனைவி பிரிவு, சகோதரர்கள் பிரிவு, நண்பர்கள் பிரிவு என்று சிதறுதேங்காயை பொறுக்கி சிறப்பான திரைக்கதையால் நாம் எத்தனையோ திரைப்படங்களை சிம்மாசனத்தில் ஏற்றி வைத்திருக்கிறோம். சமீபத்தில் வெளியான ‘கபாலி’ படத்தின் மையமே கூட, ரஜினிகாந்த் இறந்துவிட்டதாகக் கருதிய தன் மனைவியையும் குழந்தையையும் உயிரோடு இருக்கிறார்கள் என்பதை அறிந்து தேடுவதுதானே? கேங் வார், மலேசியத் தமிழர்கள் பிரச்னை என்பதெல்லாம் அந்த கதைக்கருவை சுவாரஸ்யமாக்க சுற்றி பின்னப்பட்ட சமாச்சாரங்கள்தானே?

இணைந்திருக்கும் இருவரோ, பலரோ பிரிகிறார்கள். அவர்கள் பிரிவதற்கான காரணம் என்று ஒன்றை வெயிட்டாகப் பிடித்துவிட்டால் கதை சமைந்துவிடும். அந்தக் காரணம்தான் முரண்.இதுவரை யாரும் பிடிக்காத முரணை ஓர் இயக்குநர் பிடித்துவிட்டால், ரசிகர்கள் அந்தப் படத்தை தங்கத் தாம்பாளத்தில் வைத்துத் தாங்குவார்கள். அரசாங்கமே கூட தங்கத்தாமரை விருது கொடுக்கும் என்பதற்கு நல்ல உதாரணம் ‘காதல் கோட்டை’.

அகத்தியனின் எழுத்து இயக்கத்தில் அஜீத், தேவயானி நடிப்பில் வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் வில்லன் என்று தனியாக யாருமில்லை.
ராஜஸ்தானில் வேலை பார்க்கும் அஜீத்தையும், ஊட்டியில் இருந்தபடியே சென்னையில் வேலை தேடும் தேவயானியையும் ஒரு ரயில் இணைக்கிறது.

ரயிலில் தன்னுடைய சான்றிதழ்களை தேவயானி தொலைத்துவிடுகிறார். அவை அஜீத்தின் கையில் கிடைக்கிறது. அதில் இருக்கும் தொலைபேசி எண்ணை வைத்து தேவயானியை தொடர்பு கொள்கிறார். சான்றிதழ்களை அஞ்சலில் அனுப்பி வைக்கிறார். இருவருக்கும் தொலைபேசி வாயிலாகவே நட்பு மலர்ந்து, தீவிரமான காதலாகிறது.

ராஜஸ்தானில் வேலையை இழக்கும் அஜீத், சென்னைக்கு வருகிறார். இந்தத் தகவலை தேவயானியிடம் சொல்ல முற்படும்போது, அவர் வழக்கமாக பேசும் தொலைபேசியான மணிவண்ணனின் கடை டெலிபோன் முடக்கப்பட்டிருக்கிறது. அதற்குக் காரணம், டெலிபோன் பில் கட்ட பணத்தை எடுத்துப் போகும் பையன், கையாடல் செய்து எஸ்கேப் ஆகிறான். இதனால் காதலர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள முடியவில்லை.

‘ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமலேயே காதல்’ என்று அதுவரை தமிழ் சினிமா பார்த்திராத முரணை, ரசிகர்கள் நம்பும் வகையில் முன்வைத்ததாலேயே மிகப்பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்ததோடு, ஜனாதிபதி விருதும் பெற்றார் அகத்தியன்.மேற்கண்ட பத்தியை நன்றாக வாசியுங்கள். ‘ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமலேயே காதல்’ என்பது மாதிரி, இதுவரை சொல்லப்படாத லைனை ஒருவரியிலேயே பிடித்துவிட்டால் நாம் சினிமாவில் வெற்றிகரமான கதையாசிரியர் ஆகிவிடலாம்.

இம்மாதிரி நிறைய உதாரணங்கள் உண்டு. தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத வசூல் சாதனையான ‘எந்திரன்’ படத்தின் ஒன்லைன் என்ன? ‘இயந்திரமான ரோபோவுக்கு உலக அழகியான ஐஸ்வர்யா ராய் மீது காதல்’. அவ்வளவுதானே?

தமிழில் பெரும் வெற்றி கண்ட திரைப்படங்களின் கதையை இம்மாதிரி ஒன்லைனராக எழுதிப் பாருங்கள். குறைந்தது ஐம்பது படங்களின் கதையையாவது ஒன்லைனராக மாற்றிப் பார்த்துவிட்டால் தமிழ் சினிமாவின் ‘சக்சஸ் ஃபார்முலா’வை நாம் கண்டுபிடிக்க ஆரம்பித்து விடலாம்.

நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு சினிமாவின் ஒன்லைனையும், ஒரு டயரியில் சும்மா எழுதிக்கொண்டே வாருங்கள். அந்தந்த படங்களின் வெற்றி, தோல்விக்கான காரணங்கள் எவையென்று நீங்கள் சிந்திக்க இது உதவும். மக்கள் எதை ஏற்றுக் கொள்கிறார்கள், எதை நிராகரிக்கிறார்கள் என்பதை எடைபோடும் ஸ்பெஷல் பார்வை நமக்குக் கிடைத்துவிடும்.

(கதை விடுவோம்)