கதாநாயகன்



கிட்னியை காப்பாற்றிக் கொள்ளும் நாயகன்!

சாலையைக் கடக்க பயம், நாயைக் கண்டால்  பயம்,  பொது இடத்தில் நடக்கும் அடிதடியை வேடிக்கை பார்க்கக்கூட பயம் என்று வாழும் இளைஞன், ‘போட்டுட்டு’ தாக்கும் கதாநாயகனாக உருவெடுப்பதே கதை. தனக்கேற்ற கதையை தேர்ந்தெடுத்து நடிக்கும் நாயகன்கள் பட்டியலில் இருக்கும் விஷ்ணு விஷால், அதே ரூட்டில் பயணித்திருக்கிறார்.

படத்தின் தயாரிப்பாளரும் அவரே. பயந்து சாகும்போதும், துணிந்து தாக்கும்போதும் இருவேறு முகம் காட்டி அசத்துகிறார். அவருக்கும் ஆனந்த்ராஜ், அருள்தாஸ் ஆகியோருக்குமிடையே நடக்கும் காமெடி சம்பவங்கள் மனம்விட்டு சிரிக்க வைக்கின்றன.

அவரும் சூரியும் செய்யும் சேட்டைகள் இன்னும் ஒருபடி மேலே. காதலிக்காக அலைவது, காதலியை அலட்சியப்படுத்துவது, ஆனந்தராஜிடம் மாட்டிக்கொண்டு திணறுவது என தனது அத்தனை ஏரியாக்களிலும் அதற்கேற்ற நடிப்பை சிறப்பாக வழங்கியிருக்கிறார் விஷ்ணு விஷால்.

ஒரேயொரு காட்சியில் வந்தாலும், ஒரு தேர்ந்த கலைஞனால் தனது இருப்பை வெளிச்சம் போட்டுக் காட்டமுடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் இரண்டு காட்சிகளில் வரும் விஜய சேதுபதி. ஓஷோவின் கருத்துகளை அவரது மாடுலேஷனில் கேட்கும்போது அழகோ அழகு.

காதல்காட்சிகளில் மட்டும் நடித்துக்கொடுத்தால் போதும் என்று சொல்லிவிட்டதால், அந்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார் கேத்தரின் தெரசா. அந்த பெட்ரூம் காட்சியில் மிரட்டுகிறார்.

துபாய் ரிட்டர்ன் பாயாக வரும் ஆனந்தராஜின் காமெடி வில்லத்தனம் கலகலப்பு. மகிழ்ச்சியாக இருக்கும்போது,
பிரியாணி மாஸ்டரின் தலையில் முத்தம் கொடுப்பது, கோபப்பட்ட நிலையில் சியர்ஸ் பெண்ணின் பின்புறத்தில் விளாசுவது என அத்தனை காட்சிகளிலும் அசத்துகிறார் ஆனந்தராஜ்.

கிட்டத்தட்ட வடிவேலுவின் இடத்தைப் பிடித்துவிட்டார் சூரி. நண்பனின் காதலுக்காக ஐடியா கொடுத்து சொதப்பும் காட்சிகளில் சிரிக்க வைத்து, வலியப் போய் சிக்கிக்கொண்டு கிட்னியை இழக்கும் காட்சியில் பரிதாபத்தை அள்ளுகிறார்.ஏரியா கவுன்சிலர் கம் டுபாக்கூர் தாதாவாக வரும் மொட்டை ராஜேந்திரன் சிரிப்பு மூட்டிக்கொண்டே  இருந்தாலும், விஷ்ணு மற்றும் நண்பர்களுக்காக வில்லனை எதிர்க்கும் காட்சியில் குணச்சித்திரனாக பிரகாசிக்கிறார்.

அம்மா கதாபாத்திரத்தில் வழக்கம்போல ஜொலிக்கிறார் சரண்யா பொன்வண்ணன்.  கேத்தரின் வீட்டுக்குச்சென்று பெண் கேட்கும் காட்சியிலும், அவரது அப்பாவிடம் மகளின் திருமணப் பத்திரிகையைக் கொடுத்துவிட்டு தெனாவெட்டாக பேசும் காட்சியிலும் தனது நடிப்பு முத்திரையை பதிக்கிறார்.

முரட்டுக்கண்களும் மிரட்டல் பேச்சுமாக வலம் வரும் அருள்தாஸ், வில்லச் செயலிலும் விலா  நோக சிரிக்க வைக்கிறார். தாதா சிங்கம் பிடித்துப்போட்ட சுருட்டை அணைப்பதற்கு மல்லுக்கட்டும் இடம் அதிரடி.நாயகியின் அப்பாவாக வரும் ரஜினி நடராஜ், பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஸ்ரீதரனின் படத்தொகுப்பு தேவையான நிறைவைத் தருகிறது. ஜெ. லக்ஷ்மணின் ஒளிப்பதிவு சிறப்பான பங்களிப்பு.  ஷான் ரோல்டனின் இசையில் “சண்டேன்னா பாட்டில் எடு... இப்டின்னா அப்டிங்குது, அபடின்னா இப்டிங்குது....”, “தினமும் உன் நினைப்பு உன் நினைப்பு பேபி....” பாடல்கள் ராக ரசனைக்கு விருந்து.

“ஏழையா இருக்கறவன்லாம் கோழையா இருக்கணும்னு அவசியம் இல்ல...”, “அடிக்கிறவன் மட்டும் தைரியசாலி இல்ல... அநியாயத்தை பார்த்து தட்டிக் கேட்டு அடி வாங்கறவனும் தைரியசாலி ஆம்பளதான்” உள்ளிட்ட  பன்ச் டயலாக்குள் ரசிக்க வைக்கின்றன. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து, குடும்பத் துடன் பார்க்கும் வகையில் பொழுதுபோக்குப்படமாக இயக்கியிருக்கிறார் த.முருகானந்தம்.