சூர்யா புல்லட் ஓட்ட கற்றுக் கொடுத்தார்!ஜோதிகா ரொமான்ஸ்



‘36 வயதினிலே’ படத்துக்குப் பிறகு ஜோதிகாவின் அடுத்த படமான ‘மகளிர் மட்டும்’ ரீலிஸுக்கு ரெடி. புரோமோஷன் பரபரப்பில் இருந்தவரைப் பிடித்தோம்.‘‘நான் ரீ-என்ட்ரி ஆன ‘36 வயதினிலே’வுக்குப் பிறகு ஏராளமான கதைகள் வந்தது. ‘குற்றம் கடிதல்’ இயக்குநர் பிரம்மா என்னை சந்தித்து பேசியபோது, மூன்று கதைகள் சொன்னார். அதில் ‘மகளிர் மட்டும்’ கதையை டிக் பண்ணினேன்.

ஒரு சாலை பயணத்தில் ஒரு மருமகள் தன்னுடைய மாமியாரையும் அவருடைய நண்பர்களையும் எப்படி பார்த்துக்கொள்கிறார் என்பதுதான் கதை. பெண்களைச் சார்ந்துதான் டோட்டல் கதையும் நகரும். சமூகத்தைப் பொறுத்தவரை பெண்கள் இப்படித்தான் இருப்பார்கள், அவர்களுடைய வேலை இது மட்டும்தான் என்று ஒரு வரைமுறையை வைத்திருப்போம். அதை உடைப்பது போன்று என் கேரக்டர் அமைந்திருக்கும்.

பெண்கள் அவர்களுடைய சுதந்திரத்தை போராடிப் பெறத் தேவையில்லை;  துணிச்சலுடன் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் படத்தோட மெசேஜ். இவ்வளவு ரசனையோடும் உணர்வுபூர்வமாகவும் எப்படி ஒரு ஆணால் சிந்திக்க முடிந்தது என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஹேட்ஸ் ஆப் பிரம்மா.

உண்மையில் இந்தப் படத்தில் ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியா ஆகியோரோடு இணைந்து நடிக்கும் போது கொஞ்சம் பயமாக இருந்தது. எங்கள் நான்கு பேருக்கும் முதல் நாள் படப்பிடிப்பு ஒரு படகில் வைத்து நடைபெற்றது. அப்போது என்னால் சரியாக வசனத்தை பேசி நடிக்க முடியவில்லை. அப்போது அவர்கள் மூவரும்தான் என்னை இயல்பு நிலைக்குக் கொண்டுவந்தார்கள்.

இந்தப் படத்தில் ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா பொன்வண்ணன் ஆகிய மூவரிடம் நிறைய கற்றுக்கொண்டேன். இந்தப் படத்தில் புல்லட் ஓட்டி நடிக்க வேண்டிய ஒரு காட்சி இருந்தது. எனக்கு சூர்யா இரண்டு நாட்கள் புல்லட் ஓட்ட பயிற்சி அளித்தார். அதன் பிறகு மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷீபா என்ற பயிற்சியாளர் எனக்கு முறைப்படி புல்லட் ஓட்ட பயிற்சி அளித்தார்.

சமீபத்தில் என் மகள் தியாவை பள்ளிக்கு புல்லட்டில் அழைத்துச் சென்று டிராப் செய்தபோது அவளுக்கு பெருமையாக இருந்தது. மகன் தேவ்வுக்கு சூர்யா தான் எப்போதும் ஹீரோ. ‘நாச்சியார்’ படத்தின் மூலம் நான் தேவ்வுக்கு ஹீரோவாக தெரிவேன் என்று நம்புகிறேன்.
தொடர்ந்து படங்கள் பண்ணுவதால் தற்போது சூர்யாவோடு ரெகுலராக ஜிம்முக்கு சென்று வருகிறேன். அந்த வகையில் என்னோடு நடித்த சக நடிகைகளை விட ஐந்து வயதாவது இளமையாகத் தெரிவேன் என்று நம்புகிறேன்.

பெண் எழுத்தாளர்களுக்கு யாரும் தற்போது முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இயக்குநர் சுதா கொங்காராவுக்கு மாதவன் வாய்ப்பு கொடுத்தது நல்ல விஷயம். அவர் வாய்ப்பு கொடுத்ததால் தான் ‘இறுதிச்சுற்று’ என்று ஒரு படம் வெளிவந்து வெற்றிபெற்றது. இந்த நிலை மாற வேண்டும். பெண் எழுத்தாளர்கள், யாரும் அறியாத ஹீரோஸ்.’’

- சுரேஷ்ராஜா