காதல் கசக்குதய்யா



காதலுக்கு வில்லனாகும் வயசு!

ஐடி துறையில் வேலை செய்யும் நாயகன் துருவாவை நாயகி மாணவி வெண்பா துரத்தி துரத்திக் காதலிக்கிறார். ஆரம்பத்தில் வெண்பாவின் காதலை நிராகரிக்கும் துருவா பிறகு அவரது காதலை ஏற்றுக்கொள்கிறார். வயது வித்தியாசம் உள்ள இந்தக் காதல் ஜோடி சில பிரச்சனைகளை சந்திக்கிறது. படிக்கும் வயதில் உள்ளவர்கள் காதலிப்பது சரியா தவறா என்பதை லேசாக அலசிவிட்டு சுபம் போட்டு முடித்திருக்கிறார்கள். 

நாயகனுக்கான அனைத்து அம்சங்களும் பொருந்தியவராக இருக்கிறார் துருவா. காதலனாக நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்துகிறார்.புதுமுகம் வெண்பா கண்களை உருட்டி, காதல் பாஷை பேசியிருக்கிறார். காதலைச் சொல்ல ஏங்குவதும், காதலனுக்காக உருகும் காட்சிகளும் அருமை. படம் முழுவதும் வந்து மனதில் நிறைகிறார்.

பாலாஜி சுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு அருமை. தரண் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை படத்துக்கு கூடுதல் பலம். வித்தியாசமான கருவை  நம்பி எடுத்திருக்கிறார் துவாரக் ராஜா. சில காட்சிகள் பழகியது போல் இருந்தாலும், இரண்டாம் பாதியை சுவாரஸ்யமாக சொல்லி படத்தை கரை சேர்த்திருக்கிறார்.