நெருப்புடா



தியாக தீபம்!

சின்ன வயதிலிருந்தே தீயணைப்பு வீரர்களின் தியாகச் சேவையால் ஈர்க்கப்பட்ட விக்ரம் பிரபு, தீயணைப்பு வீரராக வரவேண்டும் என்கிற லட்சியம் கொண்டவர். தன்னைப்போலவே அதே லட்சியத்துடன் இருக்கும் நான்கு நண்பர்களுடன் சேர்ந்து, தனியார் தீயணைப்பு வண்டியைப் பயன்படுத்தி, அந்த ஏரியாவில் ஏற்படும் தீ விபத்துகளின்போது சேவை செய்கிறார்.

அவர்களது சேவையைக்கண்டு வியந்த மண்டல தீயணைப்பு அதிகாரி, தேர்வு எழுதினால், நீங்களும் அரசாங்கத்துறையில் தீயணைப்பு வீரர்களாக வரலாம் என்று சொல்லி தேர்வெழுத வழிகாட்டுகிறார். தேர்வுக்கு முதல்நாள் நண்பர்களுள் ஒருவர் ரவுடியிடம் மாட்டிக்கொண்டு கொலைப்பழிக்கு ஆளாகிறார். ரவுடியின் பாஸிடமிருந்து நண்பர்கள் தப்பித்தார்களா? தேர்வு எழுதி தீயணைப்புத் துறையில் வேலைக்குச் சேர்ந்தார்களா என்பதே கதை.

விக்ரம் பிரபுவின் கம்பீரத்தோற்றம் இந்தக் கதாபாத்திரத்துக்கு கனம் சேர்க்கிறது. நண்பனுக்கு ஏற்பட்ட பழியை தன்மீது போட்டுக்கொள்வது, மண்டல அதிகாரியிடம் காட்டும் நேர்மை, காதல், சண்டை என படம் முழுக்க நடிப்பை பற்றவைத்துக்கொண்டே இருக்கிறார். “ஒரு உயிரை எடுக்கறதில்ல எங்களோட வேலை.

உயிரைக் காப்பாத்தறது” என்ற வசனத்தின் மூலம் தீயணைப்புத்துறைக்கு பெருமை சேர்க்கிறார். மருத்துவம் படிக்கும் மாணவியாக வரும் நிக்கி கல்ராணி, விக்ரம் பிரபுவின் வீரத்தாலும் ஈரத்தாலும்  ஈர்க்கப்பட்டு காதலால் கசிந்துருகுகிறார்.

ஏரியா கவுன்சிலர் கம் டுபாக்கூர் தாதாவாக வரும் மொட்டை ராஜேந்திரன், பல இடங்களில் சிரிக்க வைக்கிறார்.மண்டல அதிகாரியாக நடித்திருக்கும் நாகி நீடு, சிறப்பான பங்களிப்பை செய்திருக்கிறார். ஆடுகளம் நரேன் அறைக்குள்ளேயே நடமாடி சவால்விடும் கமிஷனர் கதாபாத்திரத்தில் வந்துபோகிறார்.

மதுசூதனராவின் வில்லத்தனத்தில் மிரட்டல் இருக்கிறது. கடைசிக்காட்சியில் வரும்  திருநங்கை  கதாபாத்திரம் எதிர்பாராத திருப்பம். ஒரே காட்சியில் வந்து செத்துப்போனாலும், படம் முழுக்க கதையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார் வின்சென்ட் அசோகன்.

ஷான் ரோல்டனின் பின்னணி இசை படத்துக்கு வளம் சேர்க்கிறது.  ‘ஆலங்கிளியே...’ மற்றும் தீயணைப்புத்துறையின் பெருமை பாடும் ‘கருக்கு கல்லாங்கோலு ‘பாடல்கள்  சிறப்பு. ஆர்.டி  ராஜசேகரின் ஒளிப்பதிவு படம் முழுக்க பற்றியெரிகிறது. படத்தொகுப்பாளர் தியாகு பக்குவமாக பணி செய்திருக்கிறார்.

சூப்பர் சுப்பராயன் மற்றும் திலீப் சுப்பராயன் அமைத்த சண்டைக்காட்சிகளில் உண்மையாகவே அனல் பறக்கிறது. அடுத்தடுத்து ட்வீஸ்ட்டுகளை வைத்து, பரபர திரைக்கதையுடன் விறுவிறுப்பாக இயக்கியிருக்கிறார் அசோக்குமார்.