இளம் இயக்குநர்களுக்கு பொறுப்பில்லை! கஸ்தூரிராஜா வேதனை



“எவ்வளவோ படங்கள் இயக்கியிருக்கேன். தொண்ணூறுகளில் வில்லேஜ் சப்ஜெக்ட்டுன்னாலே கஸ்தூரிராஜான்னு பேரு எடுத்திருக்கேன். அப்புறம் தனுஷுக்காக நகரப்புற களத்தில் ‘துள்ளுவதோ இளமை’ எடுத்தப்பவும் வெற்றியை அடைஞ்சேன்.

இப்போ இயக்குகிற ‘பாண்டி முனி’, இதுவரை நான் இயக்கின படங்களிலேயே வித்தியாசமா இருக்கும்.  ஹாரர் த்ரில்லர் வகை படம். ஆனா, என்னோட ஸ்பெஷாலிட்டியான வில்லேஜ் பேக்டிராப்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் லாஞ்சிங் முடித்துவிட்டு பிரசாத் லேபிலிருந்து வெளியே வந்த இயக்குநர் கஸ்தூரிராஜா நம்மிடம் பேசத் தொடங்கினார்.

“பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கிறாரே?”

“சாமிக்கும், பேய்க்கும் நடக்கும் போர்தான் ‘பாண்டி முனி’. 70 வருஷத்துக்கு முன்னாடி நடக்கிற மாதிரி பீரியட். அதுலே அகோரி சாமியார் வேடத்துக்கு ஜாக்கி ஷெராப்தான் சரியா அமைஞ்சார். வழக்கமா பேய்க்கதையில் காட்டுக் கத்தல் இருக்கும். இந்தப் படத்தில் நீங்க அமானுஷ்யமான அமைதியை உணர்வீங்க.

இந்தக் கேரக்டருக்கு இங்கிருக்கிற சில நடிகர்களையும் கேட்டேன். கதையை கேட்டு ஆர்வமானாங்க. ஆனா, கால்ஷீட் உள்ளிட்ட பிரச்சினைகளால் அவங்க செய்ய முடியலை. ஜாக்கி ஷெராபை புக் பண்ணியிருக்கேன்னு சொன்னதுமே அவங்க அத்தனை பேருமே, ‘நல்ல சாய்ஸ்’னு சொல்லி சந்தோஷப்பட்டாங்க.

அவரை யதேச்சையா ஒருமுறை சந்திச்சப்போ, இந்தக் கதையைச் சொன்னேன். உடனே நடிக்கிறேன்னு சொல்லி இன்ப அதிர்ச்சி கொடுத்தாரு. அவர் உள்ளே வந்தப்புறம் கதையை அவருக்காக இன்னும் மெருகேத்தியிருக்கேன். இப்போ படத்தைப் பார்த்தா ஜாக்கி இல்லாம ‘பாண்டி முனி’ இல்லேங்கிற அளவுக்கு முழுக்க ஆக்கிரமிச்சிட்டாரு.”

“மற்ற நட்சத்திரங்கள்?”

“நிகிஷா பட்டேல், மேகாலி நாயகிகளாக நடிக்கிறார்கள். இது தவிர புதுமுக ஹீரோ ஒருவரும் இருக்கிறார். பெராரே, சிவசங்கர், சாயாஜி ஷிண்டே, அம்பிகா, வாசுவிக்ரம் ஆகியோரும் இருக்கிறார்கள்.”

“பேய்ப்படம் கொடுத்தாத்தான் ஹிட்டாகும்னு நெனைக்கறீங்களா?”

“அப்படியில்லை. இந்த பேய்ப்பட சீஸனுக்கு முன்னாடியே இந்தக் கதையை நான் யோசிச்சிட்டேன். எடுக்கிறதுக்கு இப்போதான் நேரம் அமைஞ்சது. இது முழுக்க முழுக்க பேய்ப்படம்னு சொல்ல முடியாது. கடைசி ஒரு ரீலில்தான் பேயையே காட்டுவேன். நிறைவேறாத ஆசைகளுடன் இறந்து போனவரின் ஆத்மா தவிக்கிறது. அந்த தவிக்கும் ஆத்மாவுக்கு எப்படி அமைதி கிடைக்கிறது என்பது ஹைலைட்டா இருக்கும். இந்தப் படத்தோட க்ளைமாக்ஸ் உலக சினிமாவிலேயே சொல்லப்படாதவை. மத்தபடி வழக்கமாக அரைக்கிற மாவையும் அரைச்சிருக்கேன்னு நேர்மையா ஒத்துக்கறேன்.”

“டெக்னீஷியன்ஸ்?”

“சீனியர் கேமராமேன் மதுஅம்பாட் ஒளிப்பதிவு பண்ணுகிறார். காந்த் தேவா இசையமைக்கிறார். பாடல்களை நானே எழுதியுள்ளேன். சண்டை சூப்பர் சுப்பராயன். நடனம் சிவசங்கர் மாஸ்டர். எடிட்டிங் சுரேஷ் அர்ஸ். இப்படி படு ஸ்ட்ராங்கான டெக்னிக்கல் டீமோடுதான் களமிறங்கி இருக்கேன். சப்ஜெக்டுக்கு இவ்வளவு ஹெவியான டீம் தேவைப்பட்டது.”

“எல்லாரும் சினிமாத்துறையே நலிவடைஞ்சுடுச்சின்னு புலம்புறப்போ நீங்க மட்டும் ஆரோக்கியமா இருக்குன்னு சொல்றீங்க...?”

“அன்றும் இன்றும் என்றும் சினிமாத்துறை ஆரோக்கியமாதான் இருக்கும். ஆனா, இந்தத் துறையில் வேலை பார்க்கிறவங்களுக்கு சில பின்னடைவுகள் ஏற்படும். இப்போ சினிமா ஆரோக்கியமா இருக்கு, ஆனா சினிமாத்துறையினர் நலிவடைஞ்சு இருக்காங்க. இந்த வித்தியாசத்தை நீங்க புரிஞ்சுக்கணும். அனுபவம் இல்லாத சிலர் இந்தத் துறையை தவறாக வழிநடத்தியதால் எல்லாருக்குமே பிரச்சினை ஏற்பட்டிருக்கு.

தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் தற்கொலை செய்யுமளவுக்கு ஆயிடிச்சி. தமிழகத்தில் முதல்வராக இருந்தவர்களில் அஞ்சு பேர், சினிமாத்துறையில் பணியாற்றியவர்கள். அவங்களை நாங்க பயன்படுத்திக்கவே இல்லை, பயன்படுத்திக்கிறதுன்னா நேர்மையா எங்களுக்குரிய உரிமைகளைக் கேட்டு பெற்றிருக்க முடியும்.

இங்கே சுயநலம் தலை விரிச்சி ஆடுது. எதுக்கெடுத்தாலும் ஆடம்பரம்தான். ரஜினியை வெச்சு பெரிய படமும் எடுக்கலாம். ஒரு புதுமுகத்தை வெச்சி ரொம்ப சிக்கனமாவும் எடுக்கலாம். எல்லாத்துக்கும் ஸ்பேஸ் இருக்கு. ஆனா, ஒரு படத்தாலே தயாரிப்பாளரில் தொடங்கி தியேட்டரில் பணிபுரிகிற கீழ்மட்டப் பணியாளர் வரை ஏதோ லாபம் பெறணும். ஒரு படத்தை நம்பி எத்தனையோ பேரின் வாழ்வாதாரம் இருக்கு. அந்தப் படத்தில் பணிபுரிபவர்கள் இந்தப் பொறுப்புணர்வோடு வேலை செஞ்சா, யாருக்கும் நஷ்டமோ கஷ்டமோ இல்லை.

கதைக்குத் தேவையே இல்லாத காட்சிகளை லட்சங்களைக் கொட்டி படம் பிடிக்கிறாங்க. ஆனா, எடிட்டிங்கில் எல்லாத்தையும் வெட்டித் தள்ளி குப்பையில் போடுறாங்க. அவங்கவங்க வேலையை அவங்கவங்க செய்யாததுதான் பிரச்சினை.

அதனாலேதான் நூற்றுக் கணக்கான தொழிலாளர்களுக்கு ரெகுலரா வேலை கொடுத்துக்கிட்டிருந்த பெரிய தயாரிப்புக் கம்பெனிகள்கூட படம் எடுக்கிறதையே நிறுத்திட்டாங்க. வருஷத்துக்கு இருநூறு படத்துக்கும் மேலே கொடுக்கிறோம். ஆனா, ரெகுலரா படம் தயாரிப்பவர்கள்னு ஒரு அஞ்சு பேரை சுட்டிக் காட்ட முடியுமா?”

“இப்போ வெறும் லாபத்தை மட்டும் மனசுலே வெச்சு படங்கள் எடுக்கிறாங்களே?”

“நீங்க நேரடியாவே ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ பற்றி என்ன நினைக்கறீங்கன்னு கேட்டிருக்கலாம். நான் தப்பா எல்லாம் எடுத்துக்க மாட்டேன். நல்ல ஹிட்டுன்னு கேள்விப்பட்டேன். நான் இன்னும் அந்தப் படம் பார்க்கலை. அதனாலே கருத்து எதுவும் சொல்ல முடியாது. பொதுவாவே நான் அடுத்தவர்களை விமர்சனம் செய்ய விரும்பமாட்டேன். அவங்கவங்க அவங்கவங்களுக்கான பாதையிலே நடக்கிறாங்க. சரி, தப்புன்னு சொல்ல நாம யாரு? யாருக்கும் பாதிப்பில்லாம இருந்தா சரியென்பதுதான் என் கருத்து.”

“இப்போதைய இளம் இயக்குநர்கள்...”“ஏதாவது எங்கிட்டே இருந்து விவகாரமா எதிர்பார்க்கிறீங்க. உங்க எதிர்பார்ப்பை வீணாக்குவானேன்? பெரும்பாலான இளம் இயக்குநர்களுக்கு பொறுப்பே கிடையாது. இதை வேதனையா சொல்றேன். தயாரிப்பாளரோட கஷ்ட நஷ்டங்களை மனசுலே வெச்சி படம் பண்ணணும். தனிப்பட்ட பேர், புகழ், பணத்துக்காக வேலை செஞ்சா தயாரிப்பாளருக்கும் நஷ்டம்.

சினிமாத்துறைக்கும் கஷ்டம். நான் இருபத்தி மூணு படம் பண்ணியிருக்கேன். அதுலே மூணு படங்கள்தான் நஷ்டம். அதுக்கே இன்னமும் வேதனைப் பட்டுக்கிட்டிருக்கேன். மத்த இருபது படங்களும் தயாரிப்பாளர்களுக்கும், வினியோகஸ்தர்களுக்கும் லாபம் கொடுத்தவைதான். நம்மளை நம்பி பணம் போடுறவங்க கஷ்டப்படக் கூடாதுன்னு நெனைச்சி படம் பண்ணதாலேதான் என்னாலே அப்படி வேலை செய்ய முடிஞ்சது.

இப்போவெல்லாம் தொழில் கத்துக்காமலேயே டைரக்டா டைரக்டர் ஆயிடுறாங்க. உதவி இயக்குநரா வேலை பார்த்து கஷ்ட நஷ்டங்களை அனுபவிச்சாதான் பணத்தோட அருமை தெரியும். டைரக்‌ஷன் என்பது அடிப்படையில் ஃபீல்ட் ஒர்க்தான். ஏசி ரூமுக்குள்ளே உட்கார்ந்துக்கிட்டு டிஸ்கஷன் பண்றது கிடையாது. நாலு இட்லி, ஒரு டீ எவ்வளவுன்னு இப்போ ஃபேமஸா இருக்கிற டைரக்டருங்களை கேளுங்களேன். எத்தனை பேர் சரியா சொல்லுறாங்கன்னு பார்ப்போம்.

ஆனா -ஒரு உதவி இயக்குநரா படிப்படியா மேலே வந்தவன், இந்த மாதிரி சின்னச் சின்ன டீடெயில்களில் கூட தெளிவா இருப்பான். ஒரு நாள் படப்பிடிப்புக்கு எவ்வளவு செலவு ஆகும், எப்படி எப்படியெல்லாம் செலவைக் குறைக்க முடியும்னு யோசிச்சிக்கிட்டே இருப்பான். புரொடக்‌ஷன் மேனேஜருக்கு தேவையில்லாத டென்ஷனைத் தரமாட்டான்.

இப்போ சினிமாவுக்கு வர்ற பசங்ககிட்டே ‘லொகேஷன் சார்ஜ்’ பத்தி கேட்டா, ‘அது அட்மின் டிபார்ட்மென்டுக்குத்தான் தெரியும்’னு அசால்ட்டா சொல்றாங்க.நான் ஆரம்பத்துலே புரொடக்ஷன் மேனேஜராவெல்லாம் வேலை பார்த்துட்டுதான் டைரக்‌ட் பண்ணவே வந்தேன். இந்தத் தொழிலோட ஒவ்வொரு பரிணாமத்தையும் தெரிஞ்சுக்கிட்டு பண்ணினாதான் சரியா வரும்.”

“உங்க மகன்களுடைய வளர்ச்சியை எப்படி பார்க்கிறீர்கள்?”

“நான் இந்த விஷயத்துலே கறாரா இருக்கேன். அவங்க வளர்ந்துட்டாங்கன்னு சொல்லிட்டேன்னா, மிதப்பு வந்துடும். இன்னும் வளரணும்னுதான் எப்பவுமே சொல்லுவேன். வளர்ச்சி மட்டும் பத்தாது. சாதனைகள் செய்யணும். அதுதான் என் ஆசை. ரஜினி படத்தை இன்னிக்கு தனுஷ் தயாரிக்கிறார் என்பது பெருமைதான். தென்னிந்தியாவிலேயே மதிக்கப்படக்கூடிய இயக்குநர்களில் ஒருத்தரா செல்வராகவன் இருக்கிறார் என்பது சந்தோஷம்தான்.

ஆனா, அப்பாவா எனக்கு இது பத்தாது. அவங்க இன்னும் பெரிய பெரிய சாதனைகளைப் படைக்கணும். தேசிய விருதெல்லாம் வாங்கிட்ட தனுஷ், இன்னும்கூட சில தவறான படங்கள் செய்யுறாரு. அதையெல்லாம் அவர் தவிர்க்கணும்.”

- சுரேஷ்ராஜா