இறந்தும் இருக்கிறார் பாலகுமாரன்!



சிறுகதைகள், நாவல்கள் என இடையறாது பயணப்பட்டபோதும், தமிழ் சினிமாவில் வசனத்துறையின் சிறப்பான இடத்தைப் பிடித்து தனிமுத்திரை பதித்திருக்கிறார் எழுத்தாளர் பாலகுமாரன்.

 கவிதை, சிறுகதைகள், நாவல்கள், ஆன்மிகத் தேடல் என புகழில் உயர்ந்தபோதும், சினிமாவில் பெயர் பொறிக்க வேண்டும் என்கிற ஆவல் அவருக்கு இருந்தது. நட்பு வட்டங்களில் உள்ள சினிமா இயக்குநர்களுக்கு கதை வசனத்தில் அவ்வப்போது உதவி செய்து வந்தாலும், தனி ஆளாகத் தெரிவதற்கு தகுந்த ஒரு வாய்ப்பைத் தேடிக்கொண்டே இருந்தார்.

இயக்குநர் கே. பாக்யராஜ் ‘முந்தானை முடிச்சு’ படத்துக்கான கதை விவாதத்தில் இருந்த நேரம் அது. ‘சினிமா கதை விவாதங்களைப் பற்றிய நுணுக்கங்களைத் தெரிந்துகொள்ள விரும்புவதாகவும், தனக்கு உதவமுடியுமா?’ என்றும் பாக்யராஜிடம் கேட்கிறார். வரவேற்ற பாக்யராஜ் பாம்குரோவ் ஹோட்டலுக்கு வரச்சொல்கிறார்.

இரண்டு நாட்கள் கலந்துகொண்ட பாலகுமாரன் மூன்றாவது நாளில் பாக்யராஜைத் தொடர்புகொண்டு, தனக்கு எதுவுமே பிடிபடவில்லை; சினிமா சரிப்பட்டுவராது என்று  சொல்கிறார். அதன்பிறகு இயக்குநர் பாலசந்தரிடம் உதவியாளராக இரண்டு படங்களில் பணியாற்றுகிறார்.

சில நாட்களில் திடீரென்று கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்  பாலகுமாரன் என முடிவு செய்து ஒரு படம் தொடங்கப்படுகிறது. மனைவியுடன் சென்று பாக்யராஜைச் சந்தித்து ஆசீர்வாதம் வாங்கி அடுத்தகட்ட பணிகளில் ஈடுபடுகிறார் பாலகுமாரன்.

பாக்யராஜை மீண்டும் சந்திக்கிறார். சினிமா வாய்ப்பு கைநழுவிப் போய்விட்டதாகக் கூறுகிறார். அந்த நேரத்தில் ‘இது நம்ம ஆளு’ படத்துக்கான பணிகளில் இருக்கிறார் பாக்யராஜ். டைரக்‌ஷன் பொறுப்பை பாலகுமாரனுக்கு வழங்குகிறார். சினிமாத்துறையில் இரு வேறுபட்ட விமர்சனங்களுக்கு மத்தியில் அந்தப்படம் பாலகுமாரனுக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது.

கண்ட, கேட்ட எதையுமே கதைகளில் பயன்படுத்திக்கொள்ளும் பழக்கம் கொண்டவராக இருந்தார். துடிப்பான உதவி இயக்குநர், படிப்பாளி என்ற வகையில் பார்த்திபனுடன் அவருக்கு நல்ல பழக்கம் இருந்தது. அந்த நேரத்தில் தனக்கும்  அப்பாவுக்குமான பாச உறவுகளைப் பகிர்ந்திருக்கிறார் பார்த்திபன். அந்தச் சம்பவங்களை வைத்து, ‘உன்னைக்கொடு என்னைத்தருவேன்’ என்ற தலைப்பில் பத்தே நாட்களில் நாவலாக பதிவு செய்திருக்கிறார் பாலகுமாரன்.

’‘நாயகன்’ படத்தில் பேரன் கேட்கும், ‘நீங்க நல்லவரா, கெட்டவரா?’ என்கிற கேள்விக்கு, கமல் அளிக்கும் ‘தெரியலையேப்பா’ என்ற ஒற்றைவரி பதில் வசனம் பாலகுமாரனுக்கு கைதட்டலைக் குவித்தது. அதே படத்தில் இடம்பெற்ற ‘அவங்கள நிறுத்தச்சொல், நான் நிறுத்தறேன்’ இன்னமும் நினைவுகூறப்படுகிறது.

ஷங்கரின் ‘ஜென்டில்மேன்’ படத்துக்காக எழுதிய ‘போற வழி தப்பா இருக்கலாம், ஆனா, போய்ச் சேருற இடம் கோவிலா இருக்கணும்’, ‘முகவரி’யில் ‘தங்கம் கிடைக்கிற வரைக்கும் தோண்டணும், வெற்றி கிடைக்கிற வரைக்கும் போராடணும்’, ‘புதுப்பேட்டை’யில் ‘இவ்ளோ துட்டுக்கு ஆசைப்பட்டா, அப்புறம் இவ்ளோ அசிங்கம் வந்து சேரும்’ ஆகிய வசனங்கள்  பாலகுமாரனைச் சிறந்த வசனகர்த்தாவாக அடையாளம் காட்டின. ‘பாட்ஷா’வின் ‘நான் ஒரு தடவை சொன்னா...’ பற்றி தனியாக சொல்லத் தேவையில்லை.

ஷங்கரின் ‘காதலன்’, சிம்புவின் ‘வல்லவன்’ போன்ற படங்களில் அவரவரின் வேண்டுகோளுக்காக திரையில் தோன்றியிருக்கிறார் பாலகுமாரன்.
சமீபத்தில் மறைந்த பாலகுமாரனைப் பற்றி கவிஞர் வைரமுத்துவிடம் கேட்டார்கள். அவர் சொன்ன பதில்தான் பொருத்தமானது.“பாலகுமாரன் இறந்திருக் கிறாரே? என்று கேட்கிறீர்கள். ஆம். அவர் இறந்தும் இருக்கிறார்.”

- நெல்லை பாரதி