நானே பாட்டி! பேத்தி!!



‘காளி’யில் விஜய் ஆண்டனியின் காதலியாக நடித்த ஷில்பா மஞ்சுநாத்தான் இப்போது டாக் ஆஃப் கோலிவுட். ‘பேரழகி’ படத்திலும் பேரழகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சுத்தமான தமிழில் பேசுகிறார். பேரழகியை யதேச்சையாக ஷாப்பிங் மால் ஒன்றில் மடக்கினோம்.

“நடிப்பு சின்ன வயசு கனவா?”

“இல்லை. என்னை டாக்டராகவோ, என்ஜினியராகவோ ஆக்குவதுதான் அப்பாவின் கனவு. எனக்கோ படிப்பைவிட விளையாட்டில்தான் ஆர்வம். தேசிய அளவில் வாலிபால் விளையாடியிருக்கேன். சும்மா டைம் பாஸுக்காக மாடலிங் செய்தேன். அதுதான் என்னை இப்போ சினிமாத்துறைக்கு கொண்டு வந்திருக்கு. எதை செய்தாலும் அதை தீவிரமாக செய்யவேண்டும் என்பது என் பண்பு. தியேட்டர் பெர்ஃபாமன்ஸ், ரோட்ஷோ என்று செய்து என்னுடைய நடிப்புத் திறமையை கூர்தீட்டிக் கொண்டிருக்கிறேன்.”

“உங்க ஃபிரெண்ட்ஸெல்லாம் ‘காளி’ பார்த்துட்டு என்ன சொல்றாங்க?”

“சிலருக்குப் பிடிச்சிருக்கு; சிலருக்குப் பிடிக்கலை. நான் ஏற்கனவே கன்னடம், மலையாளப் படங்கள் செஞ்சிருக்கேன். இதுவரைக்கும் மாடர்ன் காஸ்ட்யூமில் என்னைப் பார்த்தவங்க, ‘காளி’யில் புடவை கட்டி வந்ததைப் பார்த்து அசந்துட்டாங்க. பலதரப்பட்ட விமர்சனங்களைத் தாண்டி என்னை ஒரு நடிகையா நானே பார்த்தது ‘காளி’யில்தான்.”

“பெண் இயக்குநர் கிருத்திகா டைரக்‌ஷனில் நடித்த அனுபவம்?”

“நடிப்பே தெரியாதவர்களிடம் கூட நல்ல நடிப்பை வாங்கக்கூடிய திறமைசாலி. காம்ப்ரமைஸ் என்கிற பேச்சுக்கே அவங்ககிட்டே இடமில்லை. ரொம்ப ஃப்ரெண்ட்லியானவங்க. ஆனாலும், அவங்க எதிர்பார்க்கிறதை வாங்குற வைக்கும் விடவே மாட்டாங்க. பெரிய ஃபேமிலியைச் சேர்ந்தவங்க. ஆனா, அதோட அடையாளம் அவங்க நடை, உடை, பாவனைகளில் கொஞ்சம்கூட தெரியாது. கடுமையான உழைப்பாளி.”

“விஜய் ஆண்டனி?”

“ரொம்பவுமே இயல்பான மனிதர். மத்தவங்க விஷயத்தில் மூக்கை நுழைக்க மாட்டார். அவருண்டு, அவர் வேலையுண்டுன்னு இருப்பார். ஜூனியர், சீனியர் பாகுபாடு காட்டாமல் எல்லோரிடமும் ஒரே மரியாதையை வெளிப்படுத்துவார். அவர் ஒரு மல்ட்டி டாஸ்க் பர்சனாலிட்டி. ‘காளி’யில் நடிச்சிக்கிட்டே ‘அண்ணாதுரை’க்காக எடிட்டிங், மியூசிக்குன்னு இயங்கிக்கிட்டிருந்தார்.”

“இப்போ நடிச்சிக்கிட்டிருக்கிற ‘பேரழகி’, எப்படி வந்திருக்கு?”

“எனக்கு நானே பாட்டியா நடிக்கிறேன். எப்படின்னு படம் வந்தப்புறம் பாருங்க. படம் பற்றி இப்போதே நிறைய பேசினா, ரிலீஸின்போது பெப் இருக்காது. இது தவிர கன்னடத்திலும் என் நடிப்பில் இரண்டு படங்கள் ரிலீஸுக்கு ரெடியா இருக்கு.”

“சென்னை செட் ஆயிடிச்சா?”

“பெங்களூரில் இருக்குறப்போ சென்னை பத்தி நான் நெகட்டிவ்வாகத்தான் நிறைய கேள்விப்பட்டேன். ஆனா, இங்கே வந்தப்புறம்தான் சென்னை மக்கள் எவ்வளவு சிநேகமானவர்கள் என்பதை தெரிஞ்சுக்கிட்டேன். முரட்டுத்தனமான அன்பு. பசிக்கலைன்னு சொன்னாகூட வலுக்கட்டாயமா சாப்பிட வைக்கிறாங்க. அவங்க மொழி மேல ரொம்ப பற்று கொண்டவங்க. ‘சென்னைக்கு வந்துட்டீங்க இல்லே? தமிழில் பேசுங்க’ன்னு சொல்லி, பார்க்கிறவங்கல்லாம் தமிழ் கத்துக் கொடுக்கிறாங்க.

பிரதிபலனே பார்க்காமல் உதவுறாங்க. சென்னை மக்களோட அன்பான உபசரிப்பைப் பார்த்துட்டு, சீக்கிரத்துலே சென்னையிலே செட்டில் ஆகணும்னு ஆசை வந்துடிச்சி.”“நீங்க பெங்களூர் பொண்ணு. காவிரிப் பிரச்சினை பத்தி என்ன நினைக்கறீங்க?”

“எந்த ஊரு பொண்ணா இருந்தாலும் மக்களுக்கு தவிச்ச வாய்க்கு தண்ணி கிடைக்கணும்னுதான் நினைப்பாங்க. விவசாயிகள், உலகத்துக்கே சோறு போடுறவங்க. அவங்களுக்கு எந்த துன்பமும் வரக்கூடாதுன்னுதான் எல்லாருமே நினைக்கணும். காவிரி நீர், விவசாயத்துக்கும் குடிக்கிறதுக்கும் போகிறதைவிட தொழிற்சாலைகளுக்குத்தான் அதிகமா போகுது. காவிரி மட்டுமில்லை, எல்லா நதிகளோட நிலைமையும் இதுதான். நீங்களும் நானும் பேசி ஒண்ணும் நடக்காது. இது முழுக்க அரசியல் சதுரங்கம்.

நாம ஓட்டு போட்டு பிரதிநிதிகளை சட்டமன்றத்துக்கும், நாடாளுமன்றத்துக்கும் அனுப்புறோம். அவங்க நம்ம குரலைத்தான் அங்கேயெல்லாம் எதிரொலிக்கணும். நாம தெருவுலே நின்னு நமக்குள்ளே பேசிக்கிறதுலே அர்த்தமில்லை. நம்மோட குரலை நம்ம பிரதிநிதிகள் பேசவேண்டிய இடங்களில் பேசுறாங்களான்னு கண்காணிக்கணும். அப்படி பேசாதவங்களை மக்கள் புறக்கணிக்கணும்.

காவிரிப் பிரச்சினையை மக்களோடதுன்னு நெனைக்காம தங்களோட ஈகோ பிரச்சினையாக சிலர் கருதுகிறார்கள். நியாயப்படியும், நம்மோட அரசியலமைப்பு சட்டத்தின்படியும் இதுக்கு தீர்வு காணவேண்டும். கர்நாடகம், தமிழகம் இரண்டிலும் வாழ்பவர்கள் இந்தியர்கள்தான்.

இந்திய விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாதுன்னு ஒற்றைப் பார்வையிலே இதை அணுகணும். மக்களுக்கு என்ன போராடிக்கிட்டே இருக்கணும்னு ஆசையா? எதுக்கு போராடுறாங்களோ அந்தப் பிரச்சினை தீர்ந்ததுன்னு அவங்கவங்க அவங்கவங்களோட வேலையைப் பார்த்துக்கிட்டு அமைதியா இருக்கப் போறாங்க.”

- சுரேஷ்ராஜா