கோடம்பாக்கம் இயக்குநர் ஜெகன்



டைட்டில்ஸ் டாக் 67

எல்லோர் மனதிலும் சினிமா ஆசை இருக்கும். இந்த ஜெகன் மட்டும் அதிலிருந்து எப்படி தப்பிக்கமுடியும். குமாரபாளையத்தில் இருந்து நானும் என் நண்பன் சுகவனமும் சினிமா ஆசையில் சென்னைக்கு வந்தோம். நானும் என் நண்பனும் கோடம்பாக்கத்தில் ஒரு அறை எடுத்து தங்கினோம்.

அந்தக் காலத்தில் சென்னையில் போக்குவரத்து நெரிசல் குறைவு. காற்று மாசும் குறைவு. எங்கு செல்வதாக இருந்தாலும் சைக்கிள்தான் எங்கள் வாகனம்.
உதவி இயக்குநராக சேருவதற்கே ஐந்து வருடம் கஷ்டப்பட்டேன். அந்த கஷ்டங்களை எல்லாம் சொல்லி பக்கங்களை வீணடிக்க விரும்பவில்லை. நேரடியாக விஷயத்துக்கு வர்றேன்.

இயக்குநர் சேரன் சாரிடம் ‘பாரதி கண்ணம்மா’ படத்தில் உதவி இயக்குநராக வேலைக்கு சேர்ந்தேன். ஐந்தாண்டுகளாக உதவி இயக்குநராக இருந்த என் நண்பன் அந்த வருடம் படம் இயக்கும் முயற்சியில் இருந்தான். அச்சமயத்தில் எதிர்பாராவிதமாக ஒரு விபத்தில் இறந்துவிட்டான். நண்பனின் இழப்பு எனக்கு மிகப் பெரிய சோகத்தைத் தந்தது. தன் மகன் பெயரை ‘இயக்குநர் சுகவனம்’ என்று போஸ்டரிலும் திரையிலும் பார்க்க ஆவலாக இருந்த அவன் குடும்பத்துக்கு அது பெரிய இடியாக இருந்தது.

என்னளவில் நண்பன் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல முடிவு எடுத்தேன். என்னுடைய முதல் படத்துக்கு ‘கோடம்பாக்கம்’ என்று டைட்டில் வைத்தேன். கதைப்படி ஓர் உதவி இயக்குநர் எப்படி இயக்குநராகிறார் என்று திரைக்கதை அமைத்தேன். கிட்டத்தட்ட நானும் சுகவனமும் சென்னையில் பெற்ற அனுபவங்களைக் காட்சிகளாக எழுதினேன். படத்தில் வரும் ஹீரோ கேரக்டருக்கு சுகவனம் என்று அவனுடைய பெயர் வைத்தேன்.

என் நண்பன் தன்னுடைய படத்துக்கு ‘நேயர் விருப்பம்’ என்ற டைட்டிலை ஃபிக்ஸ் பண்ணி வைத்திருந்தான். அதே டைட்டிலை இன்-பிலிமில் காண்பித்து கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: சுகவனம் என்று போட்டேன். சுகவனத்தை இழந்த குடும்பத்துக்கு ‘கோடம்பாக்கம்’ படம் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. என் நண்பன் குடும்பத்துக்குப் பொருளாதார ரீதியாக உதவ முடியவில்லை என்றாலும் ‘கோடம்பாக்கம்’ என்ற படத்தின் மூலம் அவன் கனவை நனவாக்க முடிந்தது. அது எனக்கு ஆத்ம திருப்தியாக இருந்தது.

கோடம்பாக்கத்தில் எல்லாம் கற்று முடித்துவிட்டேன் என்று சொல்லமாட்டேன். ஏன்னா, இப்போதும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன். என்னுடைய வெற்றியாக நான் கருதுவது என் நினைவுகளும் ஆடியன்ஸ் நினைவுகளும் ஒன்றாக இருக்கிறது என்பதுதான். ஒரு கதையில் எந்த சீனுக்கு ஆடியன்ஸ் சிரிப்பாங்க, எந்த சீனுக்கு அழுவாங்க என்று காட்சிகளை வைப்பேன். என் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ரசிகர்களின் மனநிலையும் இருப்பதை எனக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கிறேன்.

நான் இயக்கிய ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’, ‘என் ஆளோட செருப்ப காணோம்’ ஆகிய மூன்று படங்களிலும் ரசிகனின் மனநிலையோடு நானும் டிராவல் பண்ண முடிந்தது. ‘புதிய கீதை’யில் மக்களிடம் கம்யூனிகேட் பண்ணும்  விஷயத்தில் கொஞ்சம் தவறிவிட்டேன். இன்றளவும் மக்கள் மனதுக்கு ஏற்ப ‘ஸ்கிரீன் மூட்’ என் கன்ட்ரோலில் இருக்கிறது என்று நினைக்கும் போது அது எனக்கு மனநிறைவைக் கொடுத்துள்ளது. மற்றபடி கோடம்பாக்கத்தில் நான் பெற்றது என்று எதுவும் இல்லை, நிறைய கடன்தான் இருக்கு.

என்னைப் பொறுத்தவரை சினிமாவாக இருந்தாலும் சரி, வேறு ஒரு துறையாக இருந்தாலும் சரி... கடுமையாக உழைத்தால் வெற்றி நிச்சயம். இன்றைய காலக்கட்டங்களில் கடின உழைப்பு மட்டுமே ஜெயிக்க உதவாது. ஸ்மார்ட்டாகவும் இருக்கணும். கடின உழைப்பு, ஸ்மார்ட் ஒர்க் இருந்தால் வெல்வது சுலபம்.

அப்போது இருந்த கோடம்பாக்கத்துக்கும் இப்போது இருக்கும் கோடம்பாக்கத்துக்கும் தொழில் ரீதியாக நிறைய வித்தியாசங்கள் வந்துவிட்டன. அப்போது ஏராளமான பேர் சினிமா கனவோடு வந்தாலும் ஒருசிலரால் தான் இயக்குநராக ஆக முடிந்தது.ஆனால் -
இப்போது மாரத்தான் ஓட்டம் போல் ஆயிரக்கணக்கில் ஓடுகிறார்கள். கொஞ்சம் பேர்தான் குறும்படம் எடுக்கிறார்கள். யாரோ ஒருவர் எதிர்பாராத வெற்றியைக் கொடுக்கிறார். பத்தாயிரம் பேரோடு ஓடி ஜெயிப்பது என்பது சவாலான காரியம்.

டிராக்கில் பத்து பதினைந்து பேர் ஓடும் 100 மீட்டர் பந்தயம் என்றால் ஜெயிக்க வாய்ப்பிருக்கிறது. சினிமா என்பது மாரத்தான்.அப்போதைய நடைமுறையை விட இப்போதைய நடைமுறைகளால்தான் சினிமா ஆரோக்கியமாக இருக்கிறது என்று தனிப்பட்ட விதத்தில் கருதுகிறேன்.

அப்போது அசோசியேட் இயக்குநர்களின் டாமினேஷன் அதிகம் இருக்கும். அசோசியேட்டுக்கு அதிகம் மரியாதை கொடுக்கணும். இயக்குநருடன் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும். இப்போது அப்படி இல்லை.

சமீபத்தில் என் உதவியாளருக்கு கொஞ்சம் டார்ச்சர் கொடுத்தேன். உடனே அவர், ‘‘சார் என்ன வேலைன்னு மட்டும் சொல்லுங்க, செய்து முடிக்கிறேன். அதுக்காக 24 மணி நேரமும் உங்க கூட இருக்கணும் என்று நினைக்காதீங்க. வேலையைக் கொடுங்க செய்து முடிக்கிறேன். தேவையில்லாமல் என் சுதந்திரத்தில் தலையீடு பண்ணாதீங்க’’ என்றார். நான் உதவியாளராக இருந்தபோது, இயக்குநரிடம் இப்படியெல்லாம் பேசியிருக்கவே முடியாது.

9 டூ 9 ஜாப் சிஸ்டம் இப்போது பொதுவாக இல்லை. ஐடி உள்ளிட்ட கார்ப்பரேட் துறைகளில் ஒர்க் அட் ஹோம் என்ற சிஸ்டம் இருக்கிறது. அதுபோல சினிமாவும் மாறிவருகிறது. வேலை நடந்தால் சரி என்று நாங்களும் ஒப்புக் கொள்கிறோம்.சில வருடங்களுக்கு முன்பு லிபர்டி பார்க் போன்ற ஓட்டல்களில் கதை விவாதம் நடக்கும். இப்போது வாரத்துக்கு ஓரிரு முறை ஒரு காப்பி ஷாப்பில் ஒன்றுகூடி டிஸ்கஷன் பண்ணுகிறார்கள். வாட்ஸ் அப்பில் அப்டேட் பண்ணுகிறார்கள்.

முன்பு ஒரு உதவி இயக்குநருக்கு தமிழ் கையெழுத்து நன்றாக இருக்கணும். இப்போது தமிங்கிலத்தில் டைப் அடிக்கும் வசதி வந்துவிட்டது.  அப்போ ஒரு படம் தோல்வி அடைந்துவிட்டால் அத்துடன் அந்த தயாரிப்பாளரோ,  இயக்குநரோ சொந்த ஊருக்கு கிளம்பிப் போகும் சூழல் இருந்தது. இப்போது அப்படி அல்ல.

நண்பர் சுரேஷ் காமாட்சி ‘கங்காரு’  படத்தை தயாரித்ததில் பல கோடி நஷ்டம் அடைந்தார். அந்த சமயத்தில் என்னுடைய ஸ்கிப்ரிட் கொடுத்தேன். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அந்த படம்தான் ‘மிக மிக அவசரம்’. நாங்கள் நினைத்த பட்ஜெட்டில் நிறைவாக படம் எடுத்தோம். இப்போது வெற்றி மாறன் கையில் ரிலீஸுக்காகக் காத்திருக்கிறது.

இப்போது பெரிய இயக்குநர்களின் படங்களுக்குத்தான் அதிக தியேட்டர்ஸ் கிடைக்கிறது. சின்ன இயக்குநர்களுக்கு சேட்டிலைட், அமேசான், வெப் சீரிஸ் போன்ற இன்டர் நெட் சோர்ஸ் இருக்கிறது. ஏதோ ஒரு வகையில் இழப்பை சரிக்கட்டுவதற்கான சாத்தியக் கூறுகள் இப்போது உள்ளது.  
என்னைப் பொறுத்தவரை அப்போதுள்ள சினிமாவை விட இப்போதைய மாரத்தான் கோடம்பாக்கம் ஸ்டைல் சினிமாதான் பிடித்திருக்கிறது.

இயக்குநர் என்பது என் கனவாக இருந்தது. இயக்குநர் ஆனபிறகும் அந்தக் கனவு தொடர்கிறது. அதைத் தாண்டி மலையாள நடிகர் சீனிவாசன் மாதிரி எனக்கான கதைகளைத் தேர்வு செய்து எனக்குத் தகுந்த மாதிரி ஒரு கேரக்டரில் நடித்து கோடம்பாக்கத்தில் நடிகனாகவும் ஜொலிக்க விரும்புகிறேன்.இங்கு பேரு  மட்டும் போதாது; சோறும் வேண்டும்.

தொகுப்பு: சுரேஷ்ராஜா

(தொடரும்)