ஜூலை காற்றில்



கல்யாணக் குழப்பம்!

வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் நாயகன் அனந்த்நாக். ஐந்து நாள் வேலை, வார இறுதியில் ஜாலி என்றிருக்கிறார். நண்பனின் திருமணத்தில் நாயகி அஞ்சு குரியன் அவருக்குப் பழக்கமாகிறார். அப்படியே காதலாக மாறுகிறது. இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயமாகிறது. சில காரணங்களால் நிச்சய ஒப்பந்தத்திலிருந்து விலகுகிறார் நாயகன்.  அதன்பின் இன்னொரு நாயகி சம்யுக்தா மேனனைச் சந்திக்கிறார். அது காதலாக மாறுகிறது. இம்முறை நாயகி திருமணத்திற்கு மறுக்கிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படம்.

நாயகன் அனந்த்நாக், இப்போதுள்ள இளைஞர்களின் பிரதிநிதி போலச் சித்தரிக்கப்படுகிறார். காதல், மோதல், பிரிவு, கோபம் ஆகிய எல்லா உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்தியுள்ளார். நாயகி அஞ்சு குரியன் நல்வரவு. அவருடைய கதாபாத்திரமும் சரியாக இருக்கிறது. இன்னொரு நாயகி சம்யுக்தா பெண் சுதந்திரத்தை விரும்புகிறவர். கவர்ச்சியிலும் அந்த சுதந்திரத்தை பார்க்க முடிகிறது. நாயகனின் நண்பராக வருகிற சதீஷ் வழக்கத்துக்கு மாறாக சிரிக்க வைக்கிறார்.

ஜோஷ்வா ஸ்ரீதரின் இசையில் பாடல்கள் இனிமை. சேவியர் எட்வர்ட்ஸ் கதையை மீறாமல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இயக்குநர் கே.சி.சுந்தரம், இளைஞர்களின் மனப்போக்கை மையமாக வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார். திரைக்கதையில் இருக்கும் ஆழம், மேக்கிங்கிலும் இருந்திருந்தால் ஜூலைகாற்று இதமாக இருந்திருக்கும்.