கிரிஷ்ணம்



குருவாயூரப்பன் மகிமை!

டீன் ஏஜ் மாணவன் ஒருவன் மரணத்தோடு போராடி அதை வெல்லும் கதையே ‘கிரிஷ்ணம்.நாயகன் அக்‌ஷய் கிருஷ்ணன், பார்ன் வித் சில்வர் ஸ்பூன் ஃபேமிலியைச் சேர்ந்தவர். கல்லூரி மாணவரான அவர் தன் சக கல்லூரி மாணவி ராதிகாவைக் காதலிக்கிறார்.
ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்த நாயகி முதலில் மறுத்து பிறகு காதலுக்கு சம்மதிக்கிறார். இந்தச் சூழலில் கல்லூரிகளுக்கிடையிலான நடனப் போட்டிக்கு அக்‌ஷய் பயிற்சி எடுக்கிறார். பயிற்சியின்போது அக்‌ஷய் காயமடைகிறார். மருத்துவப் பரிசோதனையில் உள்ளுறுப்புகள் செயலிழக்கும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் பயமுறுத்துகிறார்கள்.

பிழைக்கும் சாத்தியக்கூறுகள் குறைந்துகொண்டே போகும் தருணத்தில் நாயகனின் அப்பா மட்டும் குருவாயூரப்பன் மீது நம்பிக்கை வைக்கிறார். அது கண்மூடித்தனமான நம்பிக்கையாக இருந்தாலும் மனம் தளராமல் இருக்கிறார். கடைசியில் ஒரு அற்புதம் நிகழ்கிறது. அது என்ன என்பதே மீதிக் கதை. நிஜ வாழ்க்கையில் அனுபவப்பட்ட கதையின் நாயகன் அக்‌ஷய் கிருஷ்ணாவே படத்திலும்  கல்லூரி மாணவனாக நடித்திருக்கிறார்.

ஒரு தேர்ந்த நடிகரைப் போல அத்தனை பாவங்களும் காட்ட வாய்ப்பு. அதை அவரும் நன்றாகப் பயன்படுத்தியுள்ளார். நிஜ அனுபவசாலியே பாத்திரமேற்றுள்ளார் என்பதை அறியும் போது அவர் மீது கூடுதல் அனுதாபம் ஏற்படுகிறது.

காதலி ராதிகாவாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா உல்லாஸ் சுமாரான முகத்தோற்றம். ஆனால் சூப்பரான நடிப்பை வழங்கியுள்ளார். தந்தையாக நடித்திருக்கும் சாய்குமார், ஒரு நோயாளி மகனின் தந்தையாக மனப்புழுக்கத்தையும் பாசப்போராட்டத்தையும் ஆரவாரமில்லாமல் வெளிக்காட்டியுள்ளார். சாந்தி கிருஷ்ணா அழகான பாசமுள்ள அம்மாவாக வருகிறார். மகனுக்கு நேர்ந்தது அசாதாரண ஆபத்து என்பதை அறிந்து தவிக்கும் தவிப்பை அபாரமாக வெளிப்படுத்தியுள்ளார்.

பாடல்கள் பரவாயில்லை ரகம் என்றாலும் பின்னணியில் அதை சமன் செய்து விடுகிறார் இசையமைப்பாளர் ஹரிபிரசாத். படத்தின் கதை நிஜத்தில் நிகழ்ந்தது என்பதால் ஆவணப் படமாக மாறிவிடும் ஆபத்து உள்ளது. அந்த விபத்து நிகழ்ந்துவிடாமல் காட்சிகளைச் சுவாரஸ்யப்படுத்தியுள்ளார் இயக்குநர் தினேஷ் பாபு. அவரே ஒளிப்பதிவு என்பதால் காட்சிகள் நேர்த்தி.

‘குருவாயூரப்பன் மகிமை’ என்கிற பக்திக் கதையை எடுத்துக்கொண்டு, போரடிக்காத திரைக்கதை, அளவான வசனங்கள், அழகான ஒளிப்பதிவு என்று திரை வடிவம் கொடுத்து படமாக்கிய விதத்தில் இயக்குநர் தினேஷ் பாபு வெற்றி பெற்றிருக்கிறார்.