நாய்க்கடிக்கு பயந்துகொண்டே நடித்தேன்! பப்ளிக் ஸ்டார் சொல்கிறார்



சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடித்துள்ள ‘களவாணி - 2’ படத்தில் ‘ராவண்ணா’ என்கிற முக்கியமான கேரக்டரில் நடித்தவர் துரை சுதாகர். இவர் ஏற்கனவே ‘தப்பாட்டம்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்தவர்.
சினிமா, பிசினஸ், சமூக சேவை என்று பல தளங்களில் பிஸியாக இருப்பவர். சினிமா வட்டாரத்தில் ‘பப்ளிக் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் இவர் தற்போது ‘டேனி’ படத்தில் நடித்து வருகிறார். பிஸி ஷெட்யூலுக்கு மத்தியில் பப்ளிக் ஸ்டார் நம்மிடம் பேசினார்...

“ஹீரோவா இருந்து இப்போ வில்லன் ஆகியிருக்கீங்க. ‘களவாணி-2’ ராவண்ணா கேரக்டருக்காக என்னென்ன ஹோம்வொர்க் பண்ணீங்க?”
“ஹோம்வொர்க் பெரியளவில் தேவைப்படவில்லை. நான் தஞ்சாவூர்க்காரன். எங்க ஊரோட யதார்த்த நிலையைத்தான் படத்தில் பார்த்தீர்கள்.

படத்துலே வர்ற எல்லா நிகழ்வுகளும் எங்க கிராமங்களில் நடக்கக் கூடியவைதான். என்னுடைய கேரக்டரில் தஞ்சை அல்லாத வேறு ஊரைச் சேர்ந்த நடிகர் நடித்திருந்தால் அவருக்கு ஹோம் ஒர்க் பண்ண வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கும். கதைக்களம் எங்க ஊர் என்பதால் எனக்கு ஹோம் ஒர்க் தேவைப்படவில்லை. ஒருவேளை வித்தியாசத்துக்காக பண்ணியிருந்தால் செயற்கையாக இருந்திருக்கும்.

கேரக்டர் ரோலில் நடித்துவிட்டு ஹீரோ, வில்லன் போன்ற மெயின் ரோலில் நடித்தால் வெற்றி கிடைக்கும். ஏன்னா, நேரடியா ஹீரோவா நடிக்கிற எல்லாருக்கும் வெற்றி கிடைப்பதில்லை. புதுசா வர்றவங்க அவர்களின் ப்ளஸ், மைனஸை உணர்ந்து கேரக்டரை தேர்வு செய்து நடித்தால் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும். அந்த மாதிரி ‘களவாணி -2’ படத்தில் கமிட்டாகும்போது இயக்குநர் சற்குணம் ‘நீங்கதான் வில்லன்’ என்று சொன்னதில்லை. ‘நீங்க ஒரு முக்கியமான கேரக்டர் பண்றீங்க’ என்றார். படம் முடியும்போதுதான் நான் ஹீரோவுக்கு அடுத்தபடியான முக்கியமான  வேடத்தில் நடிக்கிறேன் என்று தெரிந்தது.

படம் பார்த்துட்டு வர்ற ஆடியன்ஸும் என்னை வில்லனா பார்க்கவில்லை. வில்லனா பார்த்திருந்தால் அவர்கள் பார்வையே வேறு மாதிரி இருந்திருக்கும். மனதளவில் என்னைத் தப்பாக பார்க்கத் தோன்றும். ‘களவாணி-2’ ஐப் பொறுத்தவரை அவங்க வீட்ல உள்ள ஒருவர் எலக்‌ஷனில் தோற்றுப்போனால் எப்படி வருந்துவார்களோ அந்த மனநிலையில்தான் என்னைப் பார்த்தார்கள். நல்லவர் தோற்றுப் போய்விட்டாரே என்ற ஃபீல் இருந்தது. அந்தவகையில் ராவண்ணா கேரக்டர் மக்கள் மத்தியில் முழுமையாக சேர்ந்திருப்பதாகக் கருதுகிறேன்.”“வரலட்சுமி நடிக்கிற ‘டேனி’ படத்திலும் நீங்க இருக்கீங்க...”

“ஆமாம். ‘டேனி’ முழுக்க முழுக்க வரலட்சுமி மேடம் மீது டிராவலாகக் கூடிய ஸ்கிப்ரிட். படத்துலே நாய்களோடு நடித்திருக்கேன். நாய்களின் ரியாக்‌ஷனுக்கு ஏற்ப நடிப்பது என்பது கொஞ்சம் சவாலாக இருந்தது. எனக்கு நாய்களுடன் பழக்கம் இல்லை. அதனால் நாய் எப்போது கடிக்குமோ என்ற பயத்துடனே நடித்தேன்.  சில சமயம் ஜாலியாகவும் பல சமயம் அச்சத்தோடும் நடிக்க வேண்டியிருந்தது.”

“சினிமாப் பின்னணி இல்லாமல் வருபவர்களுக்கு வாய்ப்புகள் எப்படியுள்ளது?”

“சினிமா பின்னணி உள்ளவர்கள், பின்னணி இல்லாதவர்கள் என்று பிரித்துப் பார்க்க முடியாது. இங்கு வாரிசு நடிகர்கள் எத்தனையோ பேர் ஜெயிக்க முடியாமல் இருக்கிறார்கள். சிலர் ஃபீல்டுல இல்ல. சிலர் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதே மாதிரி எந்த பின்புலமும் இல்லாமல் ஜெயிக்கிறவர்களையும் இங்கு பார்க்க முடிகிறது.

தங்கள் இலக்கு இதுதான் என்று ஃபிக்ஸ் பண்ணி அவர்களின் ப்ளஸ், மைனஸை உணர்ந்து போராடினால் கண்டிப்பாக இங்கு வாய்ப்புகள் உள்ளது. வாரிசு நடிகர் என்பதால் வெற்றி சுலபம் என்று சொல்லமுடியாது. வருகிற ஒவ்வொரு வாய்ப்பும் சோதனை முயற்சி மாதிரி. பெரிய கேரக்டர் பண்ணினாலும் மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும். மக்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அடுத்த நிமிடமே மீம்ஸ் வருகிறது.

ரசிகர்கள் தெளிவாக இருக்கிறார்கள். அந்தவகையில் வாரிசுகளுக்குப் பெரிய சான்ஸ் கிடைக்கிறது என்றும் சொல்ல முடியாது. புதுசா வருகிறவர்களை மக்கள் புறக்கணிப்பதுமில்லை. கேரக்டர் தெளிவாக இருக்க வேண்டும். சமீபத்தில் எத்தனையோ புதுமுகங்கள் நடித்த படங்கள் ஜெயிச்சிருக்கு.”

“நடிப்பை எங்கு கற்றுக் கொண்டீர்கள்?”

“நடிப்பை எங்கும் கற்றுக் கொள்ளவில்லை. அடிச்சி சொல்லிக் கொடுத்தாலும் எனக்கு டான்ஸ் வராது. டான்ஸ் வர மாதிரி கதைகள் வந்தால் இரண்டு கையெடுத்துக் கும்பிட்டுவிடுவேன். ஃபைட்டும் அதுமாதிரிதான். பறந்து பறந்து என்னால் அடிக்க முடியாது. முடிந்தளவுக்கு நடனம், சண்டைக் காட்சிகளைத் தவிர்த்துவிடுவேன்.

சிலருக்கு சினிமா ஆர்வம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் எல்லோருக்குள்ளும் ஒரு நடிகன் இருக்கிறான். குடும்பத்தில் உறவுகளிடம், பள்ளியில் டீச்சரிடம், அலுவலகத்தில் நண்பர்களிடம் என்று எல்லா இடங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறோம்.பயிற்சி எடுத்துக் கொள்ளவில்லை என்றால் ஆரம்பத்தில் கொஞ்சம் தயக்கம் இருக்கும்.

அது விலகிய பிறகு சகஜமாகிவிடும். எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிக்க முடியும். நான் என்று இல்லை, எல்லாராலும் பயிற்சி இல்லாமல் நடிக்க முடியும். சினிமா நம்முடைய வாழ்க்கையைத்தான் பிரதிபலிக்கிறது. நம்முடைய வாழ்க்கையைத் தாண்டிய விஷயம் என்றால் பயிற்சி தேவைப்படும்.”

“உங்கள் நடிப்புக்கு ரசிகர்கள் ரெஸ்பான்ஸ் எப்படி உள்ளது?”

“செம ரெஸ்பான்ஸ். கலெக்‌ஷனைத் தாண்டி ரசிகர்கள் ஒவ்வொரு சீன் நகரும்போதும் கைதட்டி ரசிக்கிறார்கள். கலெக்‌ஷனை மட்டும் வைத்து இந்தப் படம் வெற்றி என்று சொல்லாமல் மக்கள் என்ஜாய் பண்ணி படம் பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது.

சினிமா துறையிலிருந்து நிறையப் பேர் பாராட்டினார்கள். சினிமாவுக்கு வந்த சமயத்தில் முன்னணி இயக்குநர்கள் சிலரிடம் வாய்ப்பு கேட்டிருக்கிறேன். அப்போது எனக்கு நடிக்கத் தெரியுமா என்ற சந்தேகம் இருந்திருக்கலாம்.

‘களவாணி-2’ அந்த சந்தேகங்களைத் தீர்த்து வைத்திருப்பதாக நினைக்கிறேன். முன்பு எனக்கு நடிப்பு வருமா என்று யோசித்தவர்கள் இப்போது பாராட்டுகிறார்கள். பெரிய இயக்குநர்களின் வாழ்த்துகளை எனக்கான அங்கீகாரமாகப் பார்க்கிறேன். இப்போது அதைத் தக்க வைக்க வேண்டும் என்ற பொறுப்பும் அதிகரித்துள்ளது.”

“நீங்கள் பெரியளவில் விவசாயம் பண்றதா கேள்விப்பட்டோமே?”

“விவசாயத்தை புதுசா பண்ணவில்லை. நம் முன்னோர்கள் அதைத்தான் செய்துகொண்டிருந்தார்கள். எங்கள் குடும்பத்தில் நாங்கள் வழி வழியாக விவசாயம் பண்றோம். அதை நான் இப்போது தொடர்கிறேன். அடிப்படையில் எனக்குத் தெரிந்த தொழில் விவசாயம். அதன்பிறகுதான் கல்வி, சினிமாவைத் தெரியும். விவசாயத்தை விரும்பிச் செய்கிறேன்.

இப்போது நாம் கடுமையான தண்ணீர் பிரச்சனையில் இருக்கிறோம். மழைநீர் சேமிப்புத் திட்டம் வந்தபோது யாரும் அதைப் பெரிசா எடுத்துக் கொள்ளவில்லை. பெயரளவில் சில கணக்குகள் மட்டும் காட்டப்பட்டது. அதன் விளைவுகளை நாம் இப்போது பார்க்கிறோம். விவசாயம், விவசாயிக்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை.

இன்னும் கொஞ்ச நாளில் தண்ணீருக்கு கஷ்டப்படுகிற மாதிரி சாப்பாட்டுக்கும் கஷ்டப்படும் காலம் வரும். விவசாயத்தை உணர்ந்த இளைஞர்கள் பலர் விவசாயத்துக்குத் திரும்பியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. விவசாயத்துக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்றால் அடுத்த தலைமுறையை உணவுப் பஞ்சத்திலிருந்து மீட்பது கடினம்.”