ஜீவாவாக சசிகுமார்.. செங்கொடியாக அஞ்சலி!



இதுவரை 13 படங்களை இயக்கி இருக்கேன். இந்த 13 படங்கள்ல இதுதான் பெஸ்ட்டுன்னு சொல்வேன் என நாடோடிகள் 2 படத்தைப் பற்றி நெகிழ்ச்சியோடு சொல்கிறார் சமுத்திரக்கனி.

“அப்படி என்ன நாடோடிகள் 2வில் ஸ்பெஷல்?”

“நிறைய நிஜங்களை சொல்லியிருக்கேன். திரையில முன்னாடி ஒரு கதை ஓடிட்டு இருக்கும்போதே, பின்பக்கம் இன்னொரு கதை போயிட்டு இருக்கும். கே.பி. சார் (கே.பாலசந்தர்) அடிக்கடி சொல்வார். ஒரே படத்தை இரண்டாவது முறை ரசிகன் பார்க்கும்போது பல விஷயங்கள் அவனுக்கு புதுசா தெரியணும்னு.
அந்த ஃபார்முலா இந்த படத்துல யூஸ் பண்ணியிருக்கேன். ஒவ்வொரு படமுமே நமக்கு சவால்தான். அதுக்காக இதுதான் உச்சம்னு சொல்ல வரல. ஆனா, மத்த படங்களோட ஒப்பிடும்போது, இது தி பெஸ்ட்டா இருக்கும். அந்த அளவுக்கு ஒட்டுமொத்த டீமும் உழைச்சிருக்கு.”

“நாடோடிகள் படத்தோட தொடர்ச்சியா?”

“தொடர்ச்சி கிடையாது. இந்த கதைக்கு நாடோடிகள் 2ன்னு தலைப்பு வெச்சா நல்லா இருக்கும்னு தோணுச்சு. அதனால மட்டும்தான் தலைப்பு வச்சோம். அந்த படத்துக்கும் இதுக்கும் எந்த தொடர்பும் கிடையாது.”

“இதோட கதை?”

“சமூகத்துக்கு தேவையில்லாத, சமூகத்தை பாதிக்கிற விஷயங்கள் நடக்கும்போது ஆங்காங்கே ஒரு நாலு பேர் கொதிச்செழுந்து நிப்பாங்க இல்லியா, அவங்களோட கதைதான் நாடோடிகள் 2. ஒரு சில இளைஞர்கள் இந்த சமூகத்துக்காக குரல் கொடுப்பாங்க. ஆனா அதை கண்டுக்காம இந்த சமூகமே அவங்களை மதிக்காம போயிட்டு இருக்கும்.

ஆணவக் கொலைகள் நடக்கும்போது ஜாதி இல்லைன்னு சொல்ற ஒரு கூட்டம், இந்த கொலைகளுக்கு எதிராக போராடுற ஒரு கூட்டம் இருக்கு. அவங்களை பற்றிய கதையாக இருக்கும். ஜாதி அமைப்புகள் வச்சிக்கிட்டு வாழ்ந்துட்டு வர்ற கூட்டம் ஒண்ணு இருக்கு. அதே சமயம், ஜாதிகள் இல்லைன்னு சொல்ற கூட்டம் அதிகமாயிடுச்சின்னா அப்போவே இந்த மாதிரி அக்கிரமங்கள் நடக்கிறது நின்னு போகும்.

அதற்கான ஒரு அடி எடுத்து வைக்கிறதுதான் இந்த படம். அடுத்த தலைமுறைக்கு நாம கொடுக்கப்போறது என்ன? அப்படின்னு கேள்வி எழும்போது ஜாதிகள் இல்லாத மனிதம் அப்படிங்கிறதும் அதை நோக்கிய ஒரு பயணம்கிறதுதான் இந்த படம். ஜீவானந்தம் ஐயாவோட வாழ்க்கையை படிச்சிட்டு அவரோட பெயர்தான் ஹீரோவுக்கு வைக்கணும்கிற முடிவோடு இந்த படத்துக்கு சசிகுமாருக்கு ஜீவானந்தம்னு கேரக்டர் பெயர் வச்சிருக்கேன்.

அதேபோல, மறைந்த செங்கொடியோட பெயரை அஞ்சலி கேரக்டருக்கு வச்சிருக்கேன். பரணி, அதுல்யா ரவி உள்பட பலர் இருக்காங்க. படம் ஆரம்பிச்சு பத்தாவது நிமிஷத்துல ஒவ்வொரு பார்வையாளனும் திரையில இருப்பான். படத்துல தானும் ஒருத்தனா ஃபீல் பண்ணுவாங்க. அதுதான் இந்த படத்தோட சிறப்பா இருக்கும்.”

“நாடோடிகள் படத்துல காதல்தான் அடித்தளமா இருந்துச்சு. இதுல அப்படி கிடையாதா?”

“அதுலேயும் அன்புதான் அடித்தளம். இதுலேயும் அதே அன்புதான். அன்பு செலுத்துறவங்க உன்னை தாண்டி போயிட்டாலும் அந்த நொடி அன்பு நிஜம். அதுக்காக அவங்களை காயப்படுத்தக்கூடாதுங்கிறதுதான் படத்துல சொல்லியிருக்கோம். ஒரு காதல், அது சொல்லாமலே நம்மை கடந்து போயிருக்கும். நாம வேற வேலையா இருந்திருப்போம்.

அது நம்மை கடந்தது கூட தெரியாமல் மிஸ் செய்திருப்போம். அப்படி பலருக்கு நடந்திருக்கு. அந்த மாதிரியான ஒரு காதலை சசிகுமார், அஞ்சலிகிட்டேயிருந்து இந்த படத்துல பார்க்கலாம்.”

“10 வருஷத்துக்கு பிறகு இரண்டாம் பாகம் வருது. ஏன் இவ்வளவு தாமதம்?”

“கதைதான் காரணம்.  அமையல. நாடோடிகள் படத்துக்கு அடுத்த பாகம் எடுக்கணும்னா அந்த அளவுக்கு வெயிட்டான சப்ஜெக்ட் இருக்கணும். அதுக்காக காத்திருந்தேன். நான் எப்போவுமே எதையும் தேடிப் போறது கிடையாது.

அதுவாக அமையணும்னு காத்திருந்துதான் பழக்கம். எந்த படத்துக்குமே அப்படித்தான். அதுவா ஒரு லைனா மனசுல வரும். அதுக்கு திரைக்கதை எழுத முடிஞ்சிதுன்னா அதுதான் படமாக எடுப்பேன். அப்படி காத்திருந்து வந்து அமைஞ்ச கதைதான் இது. அதனாலதான் இவ்வளவு தாமதம்.”

“கேரக்டர்கள் பற்றி?”

“சில்வர் பாத்திரங்கள் செய்யுற தொழிற்சாலையில வேலை பார்க்கிறவரா சசிகுமார் நடிச்சிருக்கார். அவர் கூடவே சுத்துற அவரோட நெருங்கிய தோழியா அஞ்சலி நடிச்சிருக்காங்க. பரணி, அதுல்யா ரவியும் நல்ல கேரக்டர்கள்ல வர்றாங்க. வேலை நேரம் போக, மீது நேரங்கள்ல சமூகத்துக்காக போராடுறவங்க இவங்க. சின்ன சின்னதா போராட்டங்கள்ல ஈடுபட்டிருக்கும்போது, திடீர்னு ஒரு பெரிய பிரச்னையில சிக்குறாங்க.

அதுலேருந்து அவங்க வெளியில வந்தாங்களான்னு இதுல பார்க்கலாம். ஒவ்வொரு நேரத்துல ஒவ்வொரு கேரக்டர் கதையை எடுத்துக்கிட்டு போவாங்க. ஒரு புள்ளியில முடிஞ்சு போற மாதிரியான கதை கிடையாது. முழு படமுமே ஒரு பயணமாகத்தான் இருக்கும். மதுரைதான் கதைக்களம். மதுரையை சுற்றிய ஊர்களும் இருக்கும். படத்துல கடைசியில 2 நிமிஷ காட்சியில நான் வர்றேன்.

அந்த கேரக்டருக்கு இன்னொருத்தரை யோசிச்சு வச்சிருந்தேன். சசியும் மற்ற நண்பர்களும் நீங்களே நடிங்கன்னு வற்புறுத்தினதால நான் நடிச்சிருக்கேன். படத்துக்கு இசையை ஜஸ்டின் பிரபாகர் பண்ணியிருக்கார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு. நிஜம் எது, செட் எதுன்னு தெரியாத அளவுக்கு ஜாக்கி ஆர்ட் டைரக்‌ஷன் பண்ணியிருக்கார். ஸ்டன்ட் சில்வா ஆக்‌ஷன் பண்ணியிருக்கார். ரமேஷ் எடிட்டிங். இந்த டெக்னீஷியன் டீமும் படத்துக்காக கடுமையா உழைச்சிருக்காங்க.”

“நடிப்பு, டைரக்‌ஷன் ரெண்டுல எது பிடிச்சிருக்கு?”

“டைரக்‌ஷன் எப்போவுமே எனக்கு நெருக்கமானது. நடிப்பும் பிடிச்ச விஷயம்தான். நடிச்சிட்டே ஒரு படத்தை இயக்கி இருப்பதால அது கஷ்டமா நினைக்கல. களத்துல நான் என்னவாக இருக்கிறேனோ அது மட்டும்தான் தெரிஞ்சவனா இருப்பேன். நடிக்கும்போது, நடிப்புல மட்டும் கவனம் செலுத்துவேன்.

டைரக்டர் வேலைன்னா அதுல மட்டுமே கவனம் செலுத்துவேன். எனக்கு கூடுதலா பிடிச்ச வேலைன்னா அது டைரக்‌ஷன்தான். அடுத்ததா அப்பா 2 உருவாக்கப்போறேன். அது முதல் பாகத்தோட தொடர்ச்சியாத்தான் இருக்கும்.”

“படம் ரொம்ப நாள் புரொடக்‌ஷன்லேயே இருந்ததே?”

“படத்தை முடிச்சிட்டோம். இறுதிக் கட்ட பணிகள் தொடங்குறதுல தாமதம். தயாரிப்பாளருக்கு சில இடையூறுகள். அதனால தான் நினைச்ச நேரத்துல படத்தை முழுமைப்படுத்த முடியல. என்னைப் பொறுத்தவரைக்கும் சினிமா சந்தைக்குள்ள என்னை நுழைக்க என்னாலேயே முடியல. நான் அதுல ஆர்வம் கொண்டவனும் கிடையாது. நான் கிரியேட்டராகவே இருந்துக்கிறேன்னு ஒதுங்கி நின்னுக்கிட்டேன்.”

“ராஜமவுலியின் ஆர்ஆர் ஆர் படத்துலேயும் நடிக்கிறீங்க அந்த அனுபவம் எப்படி?”

“ஆர்ஆர்ஆர் ஷூட்டிங் விறுவிறுப்பா போயிக்கிட்டு இருக்கு. அதுக்கு முன்னாடி ராஜமவுலியோட மகன் கார்த்திகேயா தயாரிக்கிற படத்தை அஷின் கங்கராஜு இயக்குறார். அதுலேயும் நான் நடிக்கிறேன். அந்த படத்தை எடுத்து முடிச்சிட்டாங்க. படத்துல லீட் ரோல் பண்ணியிருக்கேன். ஆகாஷவாணிங்கிறது படத்தோட தலைப்பு.

4 மொழிகள்ல படம் ரிலீசாகப்போகுது. ஆர்ஆர் ஆர் படம் அடுத்த வருஷம்தான் ரிலீசாகும். என்னோட காட்சிகளுக்கான படப்பிடிப்பு அடுத்த பிப்ரவரி வரைக்கும் இருக்கும். ஆர்ஆர்ஆர் பட செட்ல ஒவ்வொரு நாளுமே 10 ஆயிரம், 20 ஆயிரம் பேர்னு மகா ஜனமா இருக்கும். ஷாட் துவங்குற சமயத்துல சைலன்ட்னு ஒரு வார்த்தைதான் ராஜமவுலி சொல்வார். அத்தனை பேரும் அமைதி ஆயிடுவாங்க. என்னோட ஷாட் முடிஞ்சதும் கேரவனுக்குள்ள போக மாட்டேன்.

அங்கேயே ஓரமா நின்னு ராஜமவுலியோட டைரக்‌ஷன் ஆளுமையை பார்ப்பேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும் அவர்கிட்டேயிருந்து கத்துக்க நிறைய விஷயங்கள் இருக்கும். அவர் ஷாட் வைக்கிற விதம், ஹீரோக்கள்லேருந்து அத்தனை துணை நடிகர், நடிகைகளை வேலை வாங்குற விதம், கூட்டம் அதிகமாகும்போது பேக்ரவுண்ட்ல எந்த தப்பும் நடத்துடக்கூடாதுன்னு அவர் எப்படி பார்த்துக்கிறார்? இதெல்லாம் கவனிப்பேன். எனக்கும் ராஜமவுலிக்கும் பத்து வருஷ நட்புன்னே சொல்லலாம்.

‘நாடோடிகள்’ படம் பார்த்துட்டு எனக்கு மெசேஜ் பண்ணியிருந்தார். அவரோட அப்பாவும் ஸ்கிரிப்ட் ரைட்டருமான விஜயேந்திர பிரசாத்தும் பாராட்டியிருந்தார். அந்த சமயத்துலேருந்து எங்களுக்குள்ள நல்ல நட்பு இருந்துச்சு. இப்போதான் உங்களுக்கான கேரக்டர் என் படத்துல அமைஞ்சது. கதை உருவாகும்போதே நீங்கதான் மனசுல வந்தீங்கன்னு ராஜமவுலி சொன்னார். இதைவிட வேறு என்ன பாக்கியம் வேணும்னு நினைச்சிக்கிட்டேன்.”

- ஜியா