வெண்ணிலா கபடிகுழு -2



மீண்டும்  கபடி.. கபடி..!

சுசீந்திரன் இயக்கத்தில் 2009-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் கதாபாத்திரங்களுடனும், கூடுதலாக ஒரு கதையோடும் வெளிவந்துள்ள ‘வெண்ணிலா கபடி குழு 2’ எப்படி என்பதைப் பார்ப்போம்.

1989-ல் நடக்கும் கதை என்பதால், விக்ராந்த் மியூசிக் கடை நடத்திக் கொண்டிருக்கிறார் (இளையராஜா வழக்கு போடுவாரோ என நினைத்து, அவர் பாடல்களைப் பயன்படுத்தவில்லை.) பொறுப்புடன் வேலை செய்து கொண்டிருக்கும் விக்ராந்த், நாயகி அர்த்தனா பினுவைக் கண்டவுடன் காதல் கொள்கிறார்.

இவர் ஒரு பக்கம் காதலித்துக்கொண்டிருக்க, இவருடைய அப்பா பசுபதி, வேலையை இழந்தும் அடங்காமல் தேடித் தேடி கபடி போட்டிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்பாவின் பொறுப்பற்ற தன்மையால் டென்ஷனாகும் விக்ராந்த் அப்பாவை செல்லமாகக் கடிந்துகொள்ளும் போது அப்பாவின் கபடி விளையாட்டு ஃப்ளாஷ்பேக்கை தெரிந்துகொண்டு,  அப்பாவுக்காக கபடி விளையாட முடிவு செய்கிறார். அவர் கபடியில் சாதித்தாரா, அவரது காதல் என்ன ஆனது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

விக்ராந்தும் பசுபதியும் போட்டி போட்டு நடித்து படத்தைக் காப்பாற்றுகிறார்கள். கபடி வீரராகவும் பாசமிகு தந்தையாகவும் எல்லோருக்கும் உதவும் பெருமனம் படைத்தவராகவும் இருக்கிறார் பசுபதி. தம் நடிப்புத் திறமையால் அந்தப் பாத்திரத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார். அவருக்கு ஈடுகொடுத்திருக்கிறார் விக்ராந்த். காதல், மோதல், கபடி ஆகிய எல்லாவற்றிற்கும் பொருத்தமாக இருக்கிறார்.

நாயகி அர்த்தனா பினு அழகாக இருக்கிறார். ஆனால் நடிக்க வாய்ப்பு குறைவு என்பதால் பாடல் காட்சியில் மட்டும் தன் திறமையை வெளிப்படுத்துகிறார்.சூரிக்கு வாழ்க்கை கொடுத்தது இந்தப்படத்தின் முதல்பாகம். இந்தப்படத்தில் அவர் பரோட்டா கடையே நடத்துகிறார். அந்தக்கடையின் முதலாளி தொழிலாளி மட்டுமல்ல, கடையின் ஒரே வாடிக்கையாளரும் அவர்தான் என்பது சுவாரஸ்யம். கபடி பயிற்சியாளர் கிஷோர், பசுபதியின் நண்பராக வரும் திலீபன், அப்புக்குட்டி, ரவிமரியா ஆகியோரும் கவனிக்க வைக்கிறார்கள்.

கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம் சேர்த்துள்ளது. செல்வகணேஷின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் மிரட்டுகிறார்.தமிழன் என்கிற ஒரு தகுதி போதாதா கபடி விளையாட என்பது உட்பட கூர்மையான பல வசனங்களை எழுதியதோடு,  திரைக்கதையில் செய்திருக்கும் மாற்றங்களாலும் வெற்றிக்கு வழிவகுக்கும்படி செய்திருக்கிறார் இயக்குநர் செல்வசேகரன்.