கனவுலே நயன்தாரா வர்றாங்க... இளம் ஹீரோ வெட்கம்!



2019ம் ஆண்டின் முக்கியமான படமான ‘சாம்பியன்’ படத்தின் நாயகன் விஷ்வா. முதல் படத்திலேயே இந்த இளம் நடிகருக்கு பிரபல இயக்குநரான சுசீந்திரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.  அவருடன் ஒரு பேட்டி...

“உங்க கேரியர் எப்படி ஆரம்பித்தது?”

“சின்ன வயதிலிருந்தே ஸ்போர்ட்ஸ் மீது பிரியம் அதிகம். மூணு வயசு முதல் எட்டு வயசு வரைக்கும் நீச்சல் கத்துக்கிட்டேன். அதுக்கப்புறம் ஸ்குவாஷ் விளையாட்டை அறிமுகப் படுத்தி  வெச்சார் அப்பா. அதுல சர்வதேச அளவில் நடந்த ஏராளமான போட்டிகளில் கலந்துகொண்டேன்.
பதினைந்து வயசுக்கப்புறம் எனக்கு சினிமாக்குள்ள போகலாம்னு தோணுச்சு. சினிமா யாருக்குத்தான் பிடிக்காது.

அதனால குறும்படங்கள் சில எடுத்தேன். அப்புறம் கலி ஃபோர்னியாவில் உள்ள பிரபல ஃபிலிம் அகாடமில ஃபிலிம் மேக்கிங் கோர்ஸ் படிச்சேன். அது கிட்டத்தட்ட மூணு வருஷ கோர்ஸ்.  இங்கு வந்து, நிறைய முன்னணி இயக்குநர்களிடம் வாய்ப்பு தேடி அலைந்தேன். புதுமுகம்ங்கிறது னால யாரும் பெரிசா வாய்ப்பு தரல. அப்போது நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் ஒரு தயாரிப்பு நிறுவனம் நடத்திக்கிட்டிருந்தார். அவர் வேறு யாருமல்ல... என்னுடைய தாய் மாமா. நம்மளும் ஒண்ணு ஆரம்பிக்கலாம்னு தோணுச்சு.

சுசீந்திரன் சாரை ஏற்கனவே எனக்கு தெரியும். நடிகர் சூரி எங்க குடும்பத்துக்கு நெருங்கிய நண்பர். அவர் மூலமாதான் சுசீந்திரன் சாரை பார்த்தேன். அவர் ‘சாம்பியன்’ படத்துக்கு ஆடிஷன் எடுத்தார். நான் ஸ்போர்ட்ஸ்மேன்ங்கிறதால சரி முயற்சி பண்ணலாம்னு ஃபுட்பால் பிளேயர் சாந்தகுமார் கிட்ட ஒரு வருஷம் டிரெய்னிங் எடுத்தேன்.

ஆறு மாசம் டிரெய்னிங் போய்ட்டிருக்கும்போது வெளி தயாரிப்பாளர் படத்த விட்டுப் போய்ட்டாங்க. அப்பதான் அம்மா உள்ள வந்தாங்க. சுசீ சாரும் ‘பையன் நிறைய கஷ்டப்பட்டிருக்கான், இவன வச்சு பண்ணலாம்’னு முடிவு பண்ணி ஓகே சொன்னார். அவராலதான் இன்று நடிகனாக உங்கள் முன் நிற்கிறேன். அந்தவகையில் சுசி சார்தான் என்னுடைய சினிமா குரு.”

“சினிமாவுக்கு வர என்ன காரணம்?”

“எனக்கு 9 to  5  ஜாப் மேல விருப்பம் இல்ல. சினிமாவில் நிறைய அனுபவம் கிடைக்கும். இப்ப ‘சாம்பியன்’ல நான் ஃபுட்பால் பிளேயராக நடித்தேன். அவனா நான் வாழ்ந்தேன். அவனோட அனுபவம் எனக்கு கிடைத்தது. அடுத்த படத்தில் பிச்சைக்காரனா நடிக்கலாம். அவங்களோட அனுபவம் என் உடம்புக்குள் போய் வரும். இந்த மாதிரி வித்தியாசமான மனிதர்களின் வாழ்க்கை வாழ்ந்து பார்ப்பது பிடிச்சிருக்கு. அதனால சினிமா பிடிச்சிருக்கு.”
“டயலாக் டெலிவரி, வடசென்னை பாஷை எப்படி ஹேண்டில் பண்ணீங்க?”

“எனக்கு நடிக்கவே தெரியாது. சுசீ சார் பயங்கரமா நடிப்பார். இந்தப் படத்தில் சாரும் நடிச்சிருந்தார் படத்துக்கு ஒத்துவரலைனு தூக்கிட்டோம். அவர் நடிக்கிறத, சொல்லிக்கொடுக்கிறத பத்து சதவீதம் பண்ணினாலே நல்ல நடிகர் என்ற பெயர் வந்துடும்.”

“இயக்குநர் சுசீந்திரன்?”

“ஃபிலிம் மேக்கிங்ல ரொம்ப ஸ்ட்ராங்கானவர். எடுக்கும்போது என்ன எடுக்கிறார் என்று புரியாது. எடிட்டிங்கில் பார்க்கும்போதுதான் ஒரு குறிப்பிட்ட காட்சியை ஏன் அப்படி எடுத்தார் என்று புரியும். எல்லாரும் சினிமாவை இப்படித்தான் எடுக்கணும் என்று ஒரு ஃபார்முலாவில் எடுப்பார்கள். ஆனால் சுசீ சாருக்கு என்று தனி ஸ்டைல் இருக்கிறது.”

“நீங்க பாடல் பாடியிருந்தீங்களே?”

“எனக்கு இசை மேலே காதல். முந்நூறு பாடல்களுக்கு மேல போட்டு வச்சிருக்கேன். ஒரு நாள் அத கேள்விப்பட்டு சுசீ சார் கேட்டார். அவருக்கு போட்டுக் காட்டினேன். அப்புறம் படத்துல அவர்தான் பாட வச்சார்.”
“அடுத்த படத்துலே இசையமைப்பீங்களா?”

“மியூசிக் என்னுடைய பேஷன். தினமும் ஒரு டியூன் போடுவேன். சினிமா வாய்ப்பு என்பது அதுவா அமையணும். நம்மளா பண்ணக்கூடாது. நான் நடிக்க வந்திருக்கேன். அத முதல்ல ஒழுங்கா பண்ணணும். நல்ல நடிகனா வளரணும். அப்புறம்தான் பிற துறைகள் குறித்து யோசிக்க முடியும். இப்ப சாம்பியன்  படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது. அதை தக்கவைக்கணும்.”

“யாரெல்லாம் பாராட்டினார்கள்?”

“மீடியா, ரசிகர்கள், இண்டஸ்ட்ரி என்று பல தரப்புகளிலிருந்து பாராட்டு வந்தது. இயக்குநர்கள் பாலா, லிங்குசாமி, சீனுராமசாமி, நடிகர் சூரி என்று ஏராளமான பிரபலங்கள் பாராட்டினார்கள்.”

“ஃபுட்பால் குரு யார்?”

“எனக்கு டிரெய்னிங் கொடுத்த சாந்தகுமார் சார்தான். அவர் ஏழைப் பசங்கள் நிறைய பேருக்கு கத்துக் கொடுத்து வளர்த்து விட்டிருக்கார். அவரோட பேரைத்தான் நரேன் சாருக்கு வச்சிருந்தோம். அவரோட கேரக்டரில்தான் நரேன் சார் பண்ணியிருந்தார்.”
“உங்க ஹீரோயின் மிருணாளினியிடம் பேசுவீங்களா?”

“படப்பிடிப்பில் நல்லா பழகுவாங்க. இப்போது அவங்க ரொம்ப பிஸி. சினிமா மீது பேஷன் உள்ளவர். நல்ல நடிகை. டயலாக் பேசும்போது சக கலைஞர்களுக்கு டஃப் கொடுக்குமளவுக்கு மிரட்டிடுவார். அவருடன் நடிப்பது கஷ்டம். இப்போது ‘கோப்ரா’, ‘எம்.ஜி.ஆர்.மகன்’ என்று பெரிய படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். எங்கள் படத்தில் அறிமுகமானவர் பெரிய படங்கள் பண்ணுவது சந்தோஷமாக இருக்கிறது. படத்தில் நடித்த இன்னொரு நாயகி செளமிகா, நரேன் என்று எல்லோருடனும் நடித்தது மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுத்தது.”

“எந்த மாதிரி ரோலில் நடிக்க ஆர்வம்?”

“சினிமாவுக்கு என்று பிரத் யேக கேரக்டர்ஸ் இருக்கிறது என்று சொல்லமுடியாது. நடைமுறை கதாபாத்திரங்களாகஇருந் தாலும் சரி, கற்பனை கதாபாத்திரங்களாக  இருந்தாலும் சரி, எல்லாமே நம்முடைய வாழ்க் கையை மையமாக வைத்துதான் இருக்கும். அந்த வகையில் நம்முடைய வாழ்வியல் சார்ந்த கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.”

“நடிகர்களில் யாரைப் பிடிக்கும்?”

“சினிமாவுக்கு வருவதற்கு முன்பு ஒரு சிலரைக் குறிப்பிட்டு எனக்கு இவரைப் பிடிக்கும், அவரைப் பிடிக்கும் என்று சொல்லியிருப்பேன். ஆனால் கேமரா முன்பு நின்ற பிறகுதான் நடிப்பு என்பது எவ்வளவு பெரிய கஷ்டம் என்று தெரிந்தது. சின்ன நடிகரோ, பெரிய நடிகரோ... எல்லாரிடமும் திறமை இருக்கிறது. அப்படி ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரு விஷயத்தை கற்றுக் கொள்கிறேன் என்பதால் எல்லோரையும் பிடிக்கும்.”

“கனவுல வரும் நடிகை யார்?”

“நயன்தாரா மேடம்தான். நான் அவங்களோட ரசிகன். அவங்களோட எல்லாப் படங்களையும் பார்க்கவில்லை என்றாலும் அவருடைய உழைப்பு, அர்ப்பணிப்பு, போராடும் குணம் பிடிக்கும். எந்தவித பின்புலமும் இல்லாமல் பல ஆண்டு களாக நெம்பர் ஒன் இடத்தை தக்க வைப்பது அவ்வளவு சுலபம் அல்ல. வாய்ப்பு கிடைத்தால் அவருடன்  சேர்ந்து நடிப்பேன்.”

“அடுத்து?”

“இரண்டு பெரிய இயக்குநர்களின் படம் பண்றேன். கதை, நாயகி உட்பட பிற தகவல்கள் விரைவில் வெளியாகும்.”

- சுரேஷ்ராஜா