சில்லுக்கருப்பட்டி இயக்குநர் ஹலிதா ஷமீம்



டைட்டில்ஸ் டாக்-146

வாழ்க்கை என்பது சில்லுக்கருப்பட்டி போன்று இனிப்பு, துவர்ப்பு, இஞ்சி போன்ற காரம், கரிப்புத்தன்மை நிறைந்தது. ஆனால் என்னுடைய வாழ்க்கை சற்றே வித்தியாசமானது. ஏன்னா, நான் வாழ்க்கையை அணுகும் விதம் வேறு.எனக்கு சொந்த ஊர் திருப்பூர் பக்கம் உள்ள தாராபுரம்.
அப்பா ஜெயிலானி. செவிலியர் கல்லூரி நடத்துகிறார். எங்கள் நிறுவனத்துக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. அம்மா மரியம் உல் ஹசியா. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். அரவக்குறிச்சி தொகுதியின் எம்.எல்.ஏவாக பணியாற்றியவர். அக்காவுக்கு திருமணமாகிவிட்டது.

நான் படிச்சதெல்லாம் கொடைக்கானலில். நண்பர்கள் புடைசூழ வலம்வந்த அந்தக் காலகட்டம் இனிமை நிறைந்தது. ஏன்னா, சினிமா என்று வந்தபோது சில விஷயங்களை இழக்கவேண்டிய சூழ்நிலை வந்தது. ஏன்னா, சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்றால் நம்முடைய கவனம் முழுவதும் அதில்தான் இருக்க வேண்டும். அப்படி லட்சியத்தை அடையும் பயணத்தில் நண்பர்களுடன் சேர்ந்து பழகும் தருணங்களைத் தவிர்க்க வேண்டிய சூழ்நிலை வந்தது.

சென்னையில்தான் என்னுடைய பட்டப்படிப்பு. பி.எஸ்ஸி. எலக்ட்ரானிக்ஸ் டிகிரி முடித்தேன். நான் சார்ந்த மார்க்கம் கட்டுப்பாடு நிறைந்தது என்றாலும் எனக்கு முன் அந்தச் சுமையோ சவாலோ இல்லை. ஏன்னா, என்னுடைய அம்மா அதை தகர்த்து இருந்தார். அம்மா பொதுவாழ்க்கையில் இருந்தபோது எங்கள் பகுதியில் ஆளுமையுடன் இருந்தார். அம்மாவின் வெற்றியோடு என்னுடைய சினிமா வாழ்க்கையை ஒப்பிடும்போது அது ஒன்றுமில்லை.

சின்ன வயதில் எனக்கு கதைகள், கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம். பள்ளியில் என்னுடைய படைப்புகள் இல்லாத கவியரங்கம் கிடையாது. அந்த வகையில் பள்ளியில் என்னை மாணவியாக பார்க்காமல் இலக்கியவாதியாக பார்த்த அடையாளமும் உண்டு. அம்மா, அப்பா சென்னைக்கு புறப்படும்போதெல்லாம் எதாவது ஒரு கதையை எழுதி, இந்தக் கதையை ஷங்கர் சாரிடம் கொடுத்துவிடுங்கள் என்று சொல்வேன். அவர்கள், மகள் ஏன் விளையாட்டுத்தனமாக இருக்கிறாள் என்று கவலைப்பட்டார்கள். ஆனால் அப்போதே எனக்குள் சினிமா மீது காதல் இருந்தது. சில சமயம் நான் எழுதிய கவிதைகளை என்னுடைய அப்பா தொகுப்பாக வெளியிட்டு என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது உண்டு.

இன்று ஒரு இயக்குநராக அறியப்படுகிறேன் என்றால் அதற்கு என்னுடைய குடும்பம் கொடுத்த ஆதரவு பெரியது.இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரியிடம் ‘ஓரம்போ’,  சமுத்திரக்கனி சாரிடம்  ‘நாடோடிகள்’, மிஷ்கின் சாரிடம் ‘நந்தலாலா’ என்று வெயிட்டான படங்களில் வேலை செய்திருக்கிறேன். இப்போது சினிமாவில் ஏராளமான பெண் இயக்குநர்கள் வந்துவிட்டார்கள். நான் வந்த சமயத்தில் பெண் இயக்குநர்கள் குறைவு. நேரம், பாதுகாப்பு போன்ற சில விஷயங்களை மனதில் வைத்து உதவி இயக்குநராக சேர்த்துக் கொள்வதற்கே யோசித்தார்கள். ஆனால் என்னுடைய இயக்குநர்கள் என்னுடைய லட்சியத்துக்கு உரம்போடும் வகையில் என்னை சேர்த்துக்கொண்டார்கள்.

புஷ்கர்-காயத்ரி டீமிடம் கமாண்டிங், திட்டமிடுதலையும், மிஷ்கின் சாரிடம் ‘ஷாட் டிவிஷன்’ குறித்தும், கனி சாரிடம் ஜனரஞ்சகமான படங்களை எப்படி கொடுப்பது என்பதைப் பற்றியும் கற்றுக் கொண்டேன்.வாழ்க்கையில் யாருக்கும் ஒரே ஒரு ஆசான் இருக்க முடியாது. பல்வேறு தரப்பட்ட மக்களிடமிருந்துதான் எல்லாவற்றையும் பெற முடியும். அதுபோல் நான் சந்திக்கும் ஒவ்வொருத்தரிடமிருந்தும் ஒரு நல்ல விஷயத்தை இன்றவுளவும் கற்று வருகிறேன்.

சினிமா சில சமயம் சோர்வு தரும் என்பார்கள். எனக்கு அந்த மாதிரி ஒரு தருணம் அமையவில்லை. ஏன்னா, என்னுடைய முதல் படமான ‘பூவரசம் பீப்பீ’ படத்திலிருந்து இன்றைய தேதி வரை நான் இயங்கிக் கொண்டிருக்கிறேன்.

‘சில்லுக்கருப்பட்டி’ படத்துக்குப் பிறகு சமுத்திரக்கனி சார் நடிக்கும் ‘ஏலே’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளேன். இன்னொரு படத்தின் படப்பிடிப்பு பாதி முடிந்துள்ளது.வாழ்க்கையில் எல்லாமே கடந்துபோகும். எந்த துக்கமும் நம்மை ஒன்றுமில்லாதவர்களாக மாற்றிவிடமுடியாது. ஒரு பிரச்சனைக்கு நாம் காரணமாக இருக்கும்பட்சத்தில் அந்தப் பிரச்சனைக்குரிய தீர்வும் நம்மிடமே இருக்கும். உதாரணத்துக்கு ‘காக்கா கடி’யில் எப்படி சோகமான இடத்திலும் நகைச்சுவை வைத்தீர்கள் என்றார்கள். வாழ்க்கையும் அதுபோன்றதுதான்.

வெற்றி, தோல்வி நம்முடைய வாழ்க்கையைத் தீர்மானிக்க முடியாது. அன்பே அடிநாதமாக இயங்க வேண்டும். எதிர்பார்க்காத அன்பினால்தான் இந்த உலகம் இயங்கி வருகிறது. சினிமாவில் எல்லாத்தையும் மிகைப்படுத்திச் சொல்ல வேண்டும். அன்பு விஷயத்திலும் மிகைப்படுத்திய அன்பைச் சொல்லும்போது அது பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தும்.

‘சில்லுக் கருப்பட்டி’ படத்தைப் பார்த்துவிட்டு தம்பதியர் சிலர் ‘என் மனைவிக்கு அடிஷனல் கேர் கொடுக்கணும்’ என்று சொல்கிறார்கள். சமூகப் பொறுப்பு பற்றிய விஷயம், முதியவர்களை எப்படி நடத்த வேண்டும், நோயாளிகளிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும்  என்பதுபோன்ற விஷயங்களும் மக்களுக்குப் பிடித்திருந்தது.வாழ்க்கை என்பது சுக, துக்கங்கள் கலந்தது என்பதால் இன்பமோ, துன்பமோ எதையுமே நான் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டேன். மரணமோ, வெற்றியோ என்னைப் புரட்டிப் போட்டதில்லை.

ஏன்னா, இங்கு எதன் மீதும் நீங்கள் உரிமை கொண்டாட முடியாது. உரிமை கொண்டாடினாலும் ஒருநாள் நீங்கள் அதைக் கடந்து செல்வீர்கள். அல்லது உங்கள் அபிமானிகள் கடந்து செல்வார்கள்.சந்தோஷம் என்பது நம்முடைய உறவுகளால் மட்டும் பின்னப்பட்டது அல்ல. அன்பு என்பது பொதுவானது. தன்னலமற்ற அன்பு செலுத்த வேண்டும் என்பதுதான் இறைவனின் நீதி.அன்பைப் போற்றுவோம்!

தொகுப்பு: சுரேஷ்ராஜா

(தொடரும்)