காதலுக்கு தூது போன சங்கரன்



சுந்தரருக்கு இறைவனே காதலுக்குத் தூது சென்று சங்கிலி நாச்சியாரை திருமணம் செய்வித்த தலம் சென்னை திருவொற்றியூர். மூலவர் படம்பக்கநாதர் எனும் புற்றிடங்கொண்டாரின் சந்நதி ஆண்டு முழுதும் வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு கார்த்திகை பௌர்ணமியை ஒட்டி மூன்று நாட்கள் மட்டுமே கவசமில்லாது தரிசனமளிக்கும். அம்பிகை வடிவுடையம்மனுக்கு கேரள நம்பூதிரிகளால் இங்கே பூஜை செய்யப்படுவது சிறப்பு.

வள்ளலாருக்கு அவர் அண்ணியைப் போன்ற தோற்றத்தில் வந்து நேரில் உணவளித்த தேவி, வடிவுடையம்மன். மாசி மகத்தன்று இங்கு தியாகராஜரின் 18 வகை திருநடனங் களையும் கண்டு களிக்கலாம். பௌர்ணமி அன்று ஒரே நாளில் மேலூரிலுள்ள திருவுடையம்மன், திருவொற்றியூர் வடிவுடையம்மன், திருமுல்லைவாயில் கொடியிடையம்மன் மூவரையும் வணங்குவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

தலை சாய்த்த தட்சிணாமூர்த்தி

இறைவன் உமாபதீஸ்வரராகவும், அம்பிகை கிரிராஜகன்னிகையாகவும் அருளும் திருத்தலம், தக்கோலம். மூலவர், தீண்டாத் திருமேனி. தட்சிணாயன புண்ணிய காலத்தில் வெண்ணிறமாக வும், உத்திராயண புண்ணிய காலத்தில் செந்நிறமாகவும் காட்சியளிக்கிறார். மூலவரின் கோஷ்டத்தில் தனது தலையைச் சற்றே சாய்த்து வலக்காலைத் தொங்கவைத்து, இடது காலை மடித்து பீடத்தில் இருத்தி உத்கடி ஆசனத்தில் அமர்ந்து பேரெழிலுடன் தட்சிணாமூர்த்தி தோற்றமளிக்கிறார்.

இங்கு முதல் அபிஷேகம் கிரிராஜகன்னிகைக்கே. பின்புதான் ஈசனுக்கும் மற்ற மூர்த்திகளுக்கும்! ‘ஆடியது ஆலங்காடு, அமர்ந்தது திருவூறல் (தக்கோலம்), மணந்தது மணவூர்’ என கூறப்படுவதுண்டு. தட்சனின் யாகத்திற்குச் சென்ற பழி நீங்க தாட்சாயணி தேவி இத்தலம் வந்து மண்ணால் சிவலிங்கம் அமைத்து அதை அணைத்து வழிபட்டதால் ஏற்பட்ட அன்னையின் மார்பகத் தடங்கள் ஈசனின் திருமேனியில் இன்றும் காணப்படுகின்றன. திருமணப்பேறு, வேலைவாய்ப்பு என கோரிக்கைகளுக்கு கைமேல் பலன்தரும் தலம் இது.

ஒரு வரிச் செய்திகள்

*சின்ன சேலம் ஆறகழூரில் உள்ள காமநாதேஸ்வரர் ஆலயத்தில் அஷ்ட பைரவர்களையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்யலாம்.
*சக்தியோடு கூடிய தட்சிணாமூர்த்தியை திருக்கள்ளில், சுருட்டப்பள்ளி தலங்களில் தரிசிக்கலாம்.
*காங்கேயம் முருகன் ஆலயத்தில் கால்நடைகள் நோய்நொடியின்றி வாழ கதனை என்ற அதிர்வெடி வழிபாடு நடைபெறுகிறது.
*வந்தவாசிக்கு அருகில் உள்ள ஆவணியாபுரத்தில் சிம்ம முகத்தோடு அருள்கிறாள் மகாலட்சுமி! பக்தர்களைக் காக்க, யாகத் தீயால் எரிந்த, அடையாளம் காண முடியாத, முகமில்லாத நரசிம்மரின் மடியில் அமர்ந்திருக்கிறாள். அந்த நரசிம்மரின் முகத்தை, தான் ஏற்று அருள்பாலிக்கிறாள் தேவி.

கிளியேந்திய துர்க்கை

தேவலோகப் பசுவான காமதேனுவின் மகள் பட்டி, ஈசனை பூஜித்த தலம் பட்டீஸ்வரம் என்றாயிற்று. கோயிலின் வடக்கு வாயிலில் ஆறடி உயரமுள்ள துர்க்காம்பிகை வரப்ரசாதியாய் அருள்கிறாள். கிளியேந்திய கரத்தினளாய் சர்வலட்சணங்களும் பொருந்திய இந்த துர்க்கை த்ரிபங்க நிலையில் அழகுத் தோற்றம் தருகிறாள். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ராகு காலங்களிலும், அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி, நவமி திதிகளிலும் இந்த துர்க்கை கோலாகலமாக பூஜிக்கப்படுகிறாள்.

சாந்த வடிவமாக, எட்டுத் திருக்கரங்கள், முக்கண்களுடனும், காதில் குண்டலங்கள் துலங்கத் திகழ்கிறாள். கரங்களில் சங்கு, சக்கரம், வில், அம்பு, வாள், கேடயம் போன்ற வற்றை ஏந்தி வலக்கரத்தை அபயமாகவும், இடக்கரத்தை தன் தொடையின் மீது இருத்தியும் தரிசனம் நல்குகிறாள். பொதுவாக துர்க்கைக்கு சிம்ம வாகனம் மேற்கு நோக்கி காணப்படும். ஆனால், இங்கு இடப்புறம் நோக்குறிஅது!