இங்கு மரம்தான் கோயில்... மரம்தான் ஈசன்



பரக்கலக்கோட்டை

அங்கிருப்பது வெறும் ஆலமரம்தான். அங்கே கோயில் இல்லை. வானுயர்ந்த கோபுரம் இல்லை. கொடி மரம் இல்லை. பலிபீடமோ, நந்தியோ இல்லை. ஆனால், ஈசன் இருக்கிறார். ஆச்சர்யமாக இருக்கிறதா? அந்த ஆலமரத்தைதான் ஈசனாக மக்கள் வணங்குகிறார்கள். வருடத்தில் ஒருநாள், அந்த ஆலமரத்தின் அடியில் ஈசன் வந்து அமர்கிறான். பக்தர்களின் குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்கிறான். இந்த அதிசயம் நடப்பது தமிழ்நாட்டில்தான்.

ஏறக்குறைய ஐந்து லட்சம் பேர் வருடத்தில் ஒருநாள் இங்கு கூடுகிறார்கள். ஆலமரத்தடியில் காட்சி தரும் சர்வேஸ்வரனை வணங்கி, காணிக்கைகளையும் செலுத்தி விட்டுச் செல்கிறார்கள். கூடிடும் மக்கள் ஐந்து லட்சம். குவியும் காணிக்கையின் மதிப்போ முப்பது லட்சத்துக்கும்மேல். அதுவும் வகை வகையாக. பசுக்கள், கோழிகள், ஆடுகள், தென்னங்கன்றுகள், நெல், பயறு வகைகள்... இப்படி கணக்கே இல்லை. அத்தனையும் அவர்கள் வேண்டி வழிபடும் பொதுவுடையார் பாதங்களில் சமர்ப்பணம்.

அவர்கள் பெற்றுச் செல்வதோ அவனது கருணையோடு ஒரு திருநீற்றுப் பொட்டலம் மட்டும்!
அப்படி என்னதான் அதிசயம் அங்கே நிகழ்ந்தது? இன்று என்ன நிகழ்கிறது? விடை காண திருவாரூர் மாவட்டம் வாருங்கள். திருத்துறைப்பூண்டி - பட்டுக்கோட்டை வழித்தடத்தில் 10 கி.மீ பயணித்தால், பரக்கலக்கோட்டை என்ற திருத்தலம் வரும். கார்த்திகை மாதம் கடைசி திங்கள்கிழமையன்று இந்த புனித தலத்தில் மேலே சொன்ன சிலிர்ப்பூட்டும் சம்பவம் நடக்கிறது.

விடியற்காலை முதல், அந்த ஆலமரச் செல்வனை ஆராதிக்க, திக்கெட்டிலிருந்தும் கூடிடும் மக்கள் வெள்ளத்தைக் காணலாம். பேருந்து நிறுத்தத்துக்கு அருகே நிறுவப்பட்டுள்ள அலங்கார வளைவு நம்மை எதிர்கொள்கிறது. உள்ளே நுழைந்து, ஆற்றங்கரை ஓரமாகவே செல்லும் பாதையில் அரை கிலோ மீட்டர் சென்றால், பிரமாண்டமான ஆலமரத்தை தொலைவிலிருந்தே தரிசிக்கலாம். கானகம் போன்ற தோற்றம். நூற்றுக்கணக்கான விழுதுகள் தரையை தொட்டிட, பார்க்கும்போதே மெய்சிலிர்க்கிறது. மரத்தின் அடிப்பாகத்தைச் சுற்றி பாதுகாப்பாக எழுப்பப்பட்ட ஒரு மண்டபமும், சிறியதொரு கோபுரமும், அதற்கு கோயில் என்ற அந்தஸ்தை தந்துவிட்டது.

நெடிய ராஜகோபுரம் இல்லை, கொடிமரம் இல்லை, ஆகம சாஸ்திரப்படி அமைந்த பிராகாரம், நந்தி, பலிபீடம், பரிவார தேவதை ஏதும் இல்லை. கருவறை என்ற அமைப்பாவது உண்டா? அதுவும் இல்லை. ஆனால், மக்கள் அத்தனை பேரும் கூடி வழிபடுவது இந்த ஆலமரத்தடியில்தான். அங்கேதான் அவர்கள் ‘மத்யபுரீசுவரராக’ தங்களுடைய பொதுவுடையாரை தரிசிக்கிறார்கள். அதுவும் நள்ளிரவில். ஊரடங்கி, எல்லோரும் உறங்கிடும் வேளையில், உறங்காப்புளி அருகில் உமாபதி அவர்களுக்கு தரிசனம் தருகிறான். உறங்கும் புளி, உறங்காப்புளி எனும் இருபெரிய புளியமரத்தடியில் வீற்றிருக்கும் புண்ணியசீலர் இருவரது வழக்கைத் தீர்த்து வைக்கவே, இந்த நள்ளிரவில் வருகிறான் நமது நாயகன். அவன் தீர்ப்பு மகத்தான தீர்ப்பாக அமைந்ததுதான், இந்தப் பெருவிழாவுக்கு வித்திட்டது.

தேவர் உலகில் வானுகோபர், மகாகோபர் என்ற இரு தவசிரேஷ்டர் கள் இருந்தனர். சித்தம் எல்லாம் சிவன்பால் வைத்திருந்தாலும் இருவருக்கும் வாழ்க்கைநெறி தனித்தனியாக இருந்தது. வானுகோபர் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு இறைபணிப் செய்பவர். மகாகோபர் வேள்வி பல செய்து, துறவரத்தையே கொள்கை யாகக் கொண்டவர். அவரவர் ஆசாரமே அகில உலகில் சிறந்ததென வாதிடுவார்கள் அவர்களிடையே உருவான வாதத்துக்கு விடைகாண அமரர் தலைவனை நாடினர்.

சிக்கல் உருவானது இந்திரனுக்கு. இருவரில் ஒருவருக்கு பாதகமாக தீர்ப்பளித்தாலும், தன் இந்திர பதவிக்கே ஆபத்து ஏற்படும் நிலை. அவர்களுடைய கோபத்திலிருந்து தப்பித்தால் போதும் என்று முடிவுசெய்தான். அந்த அம்பலக்கூத்தன்தான் உங்கள் கேள்விக்கு சரியான பதிலைக் கூறமுடியும்’’ என்று கூறிவிட்டு நழுவினான். உடனே அவ்விருவரும் தில்லை நோக்கிச் சென்றனர். இறைவனிடம் தங்கள் வழக்கை முன் வைத்து, நல்ல தீர்ப்பு வழங்கிடுமாறு முறையிட்டனர்.

இருவரின் கோரிக்கையையும் ஏற்றிட்ட இறைவன், தெற்கே செல்வீராக! பொய்கை நல்லூர் என்ற சிற்றூர் அருகே நிலைபெற்றுள்ள ஆலமரத்தின் அருகில் இரண்டு புளியமரங்கள் நிற்கின்றன. அங்கே காத்திருங்கள். நேரில், அதுவும் நள்ளிரவில் வருவேன். நல்ல தீர்ப்பினை தந்திடுவேன்! என திருவாய் மலர்ந்து அருளினார்.விரைந்து சென்ற வானுகோபரும் மகாகோபரும் ஆலமரத்தைக் கண்டதும் மகிழ்ச்சியின் உச்சிக்கே போய்விட்டனர். உறங்கும் புளி, உறங்காப்புளியின் கீழே அமர்ந்து தங்கள் தவத்தைத் தொடர்ந்தனர். நாட்கள் நகர்ந்தன. மாதங்கள் கடந்தன. கார்த்திகை மாதம் வரை காத்திருந்தாயிற்று. மறையவன் வரவில்லை. ஆனாலும் பொறுத்திருந்தனர்.

கடைசி திங்கட்கிழமை, நள்ளிரவு நேரம். தொலைவிலிருந்தே கேட்டது அண்ணலின் சிலம்பொலி. மங்கல ஒலியோடும், நந்தியின் மத்தள இசையோடும் வேதநாயகன் பவனி வரும் ஆரவாரம் கேட்டது. தில்லையிலே அர்த்தசாமத்தை முடித்துக்கொண்ட ஆடலரசன், பொய்கைநல்லூருக்கு எழுந்தருளினார். ஆமாம்! நள்ளிரவில்தான் வந்தான் நடராஜப் பெருமான். அதனால்தான் இன்றும் அங்கே நள்ளிரவில் மட்டுமே ஆண்டவன் தரிசனம் மக்களுக்கு கிடைக்கிறது.

ஆலமரத்தடியில் அமர்ந்த சிவன், இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்தான். முனிவர்களின் சந்தேகங்களை தனது மவுனப் புன்னகையால் தீர்த்து வைத்தவன், மத்யபுரி என்ற அந்தத் திருத்தலத்து க்கே பெருமை சேர்க்கும் வகையில் பாரபட்சமற்ற தீர்ப்பை அளித்து, பொதுவுடையார் என்ற திருநாமத்தை யும் பெற்றான். அப்படி என்ன தீர்ப்பு?ஏற்றுக்கொண்ட தர்மத்தில் மன சஞ்சலம் ஏதும் இல்லாது நெறியோடு நடந்தால், இல்லறம் ஆயினும் சரி, துறவரம் ஆயினும் சரி, இரண்டுமே சிறந்தவையே. ஒன்றுக்கொன்று உயர்ந்தது - தாழ்ந்தது இல்லை! இரண்டுமே சமம்தான். இதுவே எனது தீர்ப்புÕÕ என திருவாய் மலர்ந்தருளி மறைந்தான் மகேசன்.

அன்று இறைவன் தீர்ப்பு வழங்குவதற்காக எழுந்தருளிய இடமே, இந்த ஆலமரத்தடி. இங்கே இறைவனின் திருவடிகளை மக்கள் வணங்கு கிறார்கள். மரத்தடியில் பாவனையாக, சிவலிங்கத் திருமேனியாக வடிவமைக்கப் பட்டுள்ள சந்தனக் காப்பிற்கே நள்ளிரவில் அத்தனை வழிபாடுகளும், தீப ஆராதனைகளும் நடைபெறுகின்றன. தில்லை நடராஜரே இங்கு எழுந்தருளியதால், இதனை தென் சிதம்பரம் என்றே சொல்லலாம். தில்லையிலும் வெற்றிடமான ஆகாயம் என்ற பஞ்சபூத வழிபாடு சிறப்பு; இங்கும், அதேபோல், வெற்றிடத்துக்கே சிறப்பு பூஜை.

வானுகோபரும் மகாகோபரும் அமர்ந்திருந்த புளியமரங்களும், அந்த பெரிய ஆலமரமும், இன்றும் அந்த மகேசன் தீர்ப்புக்கு சாட்சியாக நிற்கின்றன. இந்த வைபவத்தை காண ஐந்து லட்சம் மக்கள் கார்த்திகை மாதம், கடைசி திங்கள் கிழமை நள்ளிரவில் கூடுகிறார்கள்.சிவாலயங்களில் கார்த்திகை மாத திங்கட் கிழமைகளில் சங்காபிஷேகம் விமரிசையாக நடை பெறும். பரக்கலக்கோட்டை விழாக்கோலம் காணுவது கடைசி சோமவாரம் நாளில்.

நள்ளிரவில் திறக்கப்படும் பொதுவுடை யார் சந்நதி, விடியும்வரையில் திறந்திருக்கும். இந்தக் கோயிலில் வழங்கப்படும் திருநீற்றையும், அந்த ஆலமரத்தின் இலையையும் மட்டுமே பிரசாதமாக பக்தர்கள் எடுத்துச் செல்கிறார்கள். கல்லாப் பெட்டிக்கு காவலாகவும், கால்நடை களுக்கு அருமருந்தாகவும் அவற்றை பயன்படுத்துகிறார்கள். பயிர்களைக் காத்திட, மணமாகாதவர் மண வாழ்க்கை பெற்றிட, மக்கட்செல்வம் அடைந்திட, நேர்த்திக்கடன் செலுத்த வருகிறார்கள்.

பொதுவுடையாருக்கு ஆங்காங்கே தனித்தனி கொட்டகைகளில் காணிக்கை செலுத்தி, விபூதி பிரசாதத்தை மட்டும் வாங்கிச் செல்கிறார்கள். கூந்தல் நீளமாக வளர்ந்திட விளக்குமாறு (துடைப்பம்) காணிக்கை குவிகிறது. நீதிமன்றங்களில்கூட, பொதுவுடையார் சாட்சியாக  என்று சத்தியப்பிரமாணம் கூறுவது இப்பகுதியில் வழக்கம். மத்யபுரீஸ்வரர் தீர்ப்பில் அப்படி ஒரு அசையாத நம்பிக்கை அவர்களுக்கு!

ஒரே நாளில் இப்படி ஒரு சிற்றூரில் கூடிடும் ஐந்து லட்சம் மக்கள், விடியலுக்கு முன்னதாகவே தத்தம் ஊர் நோக்கித் திரும்புவதும், அதற்கு முன் அந்த நாள் முழுவதும் காவல்துறைக்கு எந்த இடைஞ்சலும் தராது, ஆரவாரம் இன்றி அமைதி காப்பதும் பொதுவுடையார் திருவருள்தான்.தங்கும் விடுதிகள், கல்யாண மண்டபம், சாலை வசதி, மின் விளக்குகள் ஆகியவற்றோடு லட்சம் பேருக்கு மேல் அன்னதானமும் வழங்கப்படுகிறது. ஆலமரத்தடியில் கூடிடும் ஐந்து லட்சம் மக்களை அன்று தரிசிப்பதே பெரும் புண்ணியம்.

-கயிலைநாதன்