புத்திசாலிகள்!



2 பக்கக் கதை

துபாயில் இறங்கிய பத்து நாட்களில் வாடகைக்கு வீடு பிடிக்க வேண்டும். வேலைக்கு சேர்ந்தாயிற்று. 10 நாட்களுக்குத்தான் கம்பெனி சார்பில் ஹோட்டலில் தங்க வைப்பார்கள். அதற்கு மேல் என் பாடு.அங்கு எனக்கு யாரையும் தெரியாது. ஆபீஸ் லன்ச் டைமின்போது ஒன்றாக அமர்ந்திருந்த ஒரு பன்னாட்டுக் கலவையான குரூப்பிடம் கேட்டேன். ‘‘எனக்கு வீடு தேட ஹெல்ப் பண்ண முடியுமா?’’

ஒருவன் கேட்டான், ‘‘கார் பார்க்கிங்குடன் வேண்டுமா?’’
என் பதில், ‘‘எனக்கு கார் வாங்கும் ஐடியாவே இல்லை!’’ அடுத்து பட்ஜெட், ஏரியா, ரூம் போன்ற வழக்கமான கேள்விகள். இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, லெபனான், ஆஸ்திரேலியா எனப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அவர்கள். தாங்கள் தங்கியிருக்கும் பில்டிங்கிலேயே ஏதாவது வீடு காலியாக இருக்கிறதா என அவரவர் விசாரித்தனர்.

மாலைக்குள் 5, 6 வீடுகளின் லிஸ்ட் ரெடி. அவர்களில் பலரும் வீடு பார்க்க தானே அழைத்துச் சென்று டிராப் செய்வதாகவும், ‘‘கவலைப்படாதே! நான் இருக்கிறேன்’’ என்றும் சொல்லி நிம்மதி அளித்தனர். ஒருவன் மட்டும் கண்டுகொள்ளவே இல்லை. அவன் தமிழன். அடப்பாவி! தமிழனைத் தவிர எல்லோரும் உதவி செய்கிறார்களே!

அன்று மாலையே ஒருவன் சொன்னான், ‘‘கிளம்பு, என் பில்டிங்கிலேயே ஒரு வீடு காலியா இருக்கு. ஜிம், ஸ்விம்மிங் பூல் இருக்கு. என் பொண்டாட்டியும் தமிழ்தான். பக்கத்திலேயே சரவண பவன் இருக்கு. வீட்டுச் சாப்பாடு வேணும்னா ஒரு மாடி ஏறி என் வீட்டுக்கு வா. தினமும் நீ என் கார்லயே ஆபீஸ் வந்து போகலாம். டாக்ஸி செலவும் மிச்சம். அந்த ஓனர்கிட்ட நானே பேரம் பேசி குறைவான வாடகைக்கு முடிச்சுத் தர்றேன்!’’
இதைவிட நல்ல இடம் கிடைக்காது என்று அந்த வீட்டையே முடித்துவிட்டேன். மறுநாள் அலுவலகத்தில் மற்ற நண்பர்களிடம் விஷயத்தைச் சொன்னேன். அவர்கள் முகத்தில் ஏனோ ஒரு வருத்தம். எனக்கு வீடு பிடித்துக் கொடுத்த  நண்பனுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

‘அடடா, நான் அவர்கள் பில்டிங்கில் இல்லையென வருத்தப்படுமளவிற்கு நான் அவ்வளவு பெரிய ஆளா?’ - எனக்குப் புரியவில்லை. நண்பன் வந்தான். ‘‘நாளைக்கு ஹவுஸ் ஓனர்கிட்ட செக் கொடுக்கும்போது, ஒரு கார் பார்க்கிங் ஸ்டிக்கர் கொடுப்பார். உன்கிட்ட கார் இல்லைங்கறதுக்காக வேண்டாம்னு சொல்லிடாதே. வாங்கி என்கிட்ட கொடு. என் பொண்டாட்டி காரை அங்கே நிறுத்திக்கிறேன். இப்ப ரோட்லதான் நிக்குது. ரொம்ப ரிஸ்க். ஓகே..?’’ஓ... இதுதான் விஷயமா?

எனக்குத் தேவைப்படாத என் கார் பார்க்கிங் அவர்களின் இரண்டாவது காருக்கு தேவைப்பட்டிருக்கிறது. எனக்கு உதவி செய்யாத தமிழன் என்று சொன்னேனே, அவனுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை.

அதனால் பார்க்கிங் தேவைப்படவில்லை. நண்பனுக்கு ஏன் மற்றவர்கள் வாழ்த்துச் சொன்னார்கள் என்பதெல்லாம் இப்போது புரிந்தது. கோபத்திற்கு பதிலாக சந்தோஷம் வந்தது. இவர்கள் புத்திசாலிகள். இவர்களுடன் வேலை செய்தால், காரியம் சாதிப்பது எப்படி என்று கற்றுக் கொள்ளலாம். எவ்வளவு சாதுர்யமாக காரியத்தை முடித்தான்... சபாஷ்!    
 
ஸ்ரீநிவாசன்