என்ன ஆகும் இவர்களின் எதிர்காலம்?



24 ஆண்டுகள்... மரணம் ஒரேயொரு முறை நிகழ்த்தும் வலியை, ஒவ்வொரு நொடியும் உணர்த்திக் கொண்டிருக்கிறது கொடுஞ்சிறை. 20 வயதில் சிறைக்குச் சென்ற பேரறிவாளனுக்கு இப்போது வயது 45. இளமையைத் தின்று செரித்து விட்டது சிறை. சிறுநீரகத் தொற்று, மன உளைச்சல் என அவர் சிறைக்குள் மருகிக் கிடக்க, மகனின் நிலை நினைத்து வதங்கி கொடும் நோயில் வீழ்ந்து கிடக்கிறார் அவரின் தந்தை. நம்பிக்கையைச் சுமந்துகொண்டு கால் தேய மகனுக்காக நியாயம் கேட்டு நடந்து கொண்டிக்கிறார் அம்மா அற்புதம்மாள்.

முருகன்-நளினியின் மகள் அரித்ராவுக்கு வயது 23. சிறையில் பிறந்து, 2 வயதில் பாட்டியின் அரவணைப்புக்குச் சென்றவர். தாயும் தந்தையும் வெளிவரும் நாளை எதிர்நோக்கி அவரின் நாட்கள் கரைந்து கொண்டிருக்கின்றன.   சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரனையும் கூட, மின்மினிகளைப் போல மங்கி மங்கி வந்து விழுந்து மறைகிற நம்பிக்கை வெளிச்சம்தான் கொஞ்சமேனும் உயிர்ப்பித்து வைத்திருக்கிறது.
ஆனால் அவர்களின் விடுதலையை வைத்து தமிழக அரசு நடத்தும் நாடகங்களுக்குப் பஞ்சமில்லை.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் சிறைவாசிகளாக அடைந்து கிடக்கிற இவர்களை விடுவிக்க வேண்டும் என்ற குரல் தேசம் முழுவதும் வலுத்து வருகிறது. சூழல் கனிந்து வந்த நிலையில், இதை மத்திய அரசுடனான ஈகோ யுத்தமாக மாற்றி சிக்கலாக்கியது தமிழக அரசு. மத்திய அரசுக்கு கெடு விதித்து, அதற்குள்ளாக விடுதலை செய்யாவிட்டால் மாநில அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏழு பேரையும் விடுவிப்போம் என்று கடிதம் எழுதினார் முதல்வர்.

உடனடியாக உச்ச நீதிமன்றம் சென்றது மத்திய அரசு. ‘கிரிமினல் நடைமுறைச் சட்டம் 435 பிரிவு ‘பி’யின்படி, சிபிஐ விசாரித்த வழக்கு, வெடிமருந்து தொடர்பான வழக்குகளில் தொடர்புடையவர்களை மாநில அரசு தன்னிச்சையாக விடுதலை செய்ய முடியாது’ என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆயினும் இந்திய அரசியல் சட்டப்பிரிவு 161ன் படி இந்த விவகாரத்தில் மாநில அரசு முடிவெடுக்கலாம் என்ற மெல்லிய நம்பிக்கைக் கீற்றை விதைத்தது உச்ச நீதிமன்றம்.

ஆயினும் அதன்பிறகு இந்த விவகாரத்தைக் கிடப்பில் போட்டது தமிழக அரசு. தேர்தல் தேதி அறிவிக்கவிருந்த சூழலில், அவசரக் கோலத்தில் மீண்டும் இது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார் தமிழக தலைமைச் செயலாளர். அதை ‘ஓட்டுக்காக ஆளும்கட்சி அடிக்கும் ஸ்டன்ட்’ என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.

ஆயினும், தேர்தல் நடைமுறைகள் தொடங்கி விட்டதால் அனைத்து நடவடிக்கைகளும் முடங்கி விட்டன.
இனி என்னதான் ஆகும்..? சஞ்சய் தத்களுக்கும், சல்மான் கான்களுக்கும் பரபரத்துத் திறக்கிற சிறைக்கதவு இவர்களுக்கு மட்டும் ஏன் திறக்க மறுக்கிறது? வழக்கைப் பதிவு செய்த காவல்துறை அதிகாரியே, ‘நான் தவறுதலாகக் குற்றத்தைப் பதிவு செய்தேன்’ என்று பகிரங்கமாக அறிவித்த பிறகும், விசாரித்த அமைப்பின் தலைமை அதிகாரியே ‘இவர்களை விடுதலை செய்ய வேண்டும்’ என்று குரல் கொடுத்த பிறகும் ஏன் இந்த மௌனம்..? இவர்களின் எதிர்
காலம்தான் என்ன?

‘‘மாநில அரசால் நிச்சயமாக இவர்களை விடுவிக்க முடியாது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் 435-பி ‘சி.பி.ஐ. விசாரித்த வழக்குகளில் மாநில அரசு தண்டனையைக் குறைக்கவோ, விடுதலை செய்யவோ முடியாது’ என்கிறது. உண்மையில் இது மிகக் கொடூரமான சட்டப் பிரிவு. மாநில அரசின் தனித்தன்மையையும், உரிமையையும் பறிக்கும் இந்தச் சட்டப் பிரிவு கூட்டாட்சி தத்துவத்துக்கே எதிரானது. நம் இந்திய அரசியல் சட்டம் 50 ஆண்டுகளுக்கு முன்னால் நம் தலைவர்களால் உருவாக்கப்பட்டது.

உலகளாவிய மனித உரிமைப் பிரகடனங்கள் வெளியிடப்பட்ட காலத்துக்குப் பிறகு உருவானது என்பதால் அதில் பல கூறுகள் மிகவும் முற்போக்காக இருக்கும். ஆனால், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் போன்றவை ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்டது. இந்த இரண்டிலும் நம் அரசியல் சட்டத்துக்கு விரோதமான பல கூறுகள் உண்டு.

ஆனால் அதைத்தான் நாம் இன்னமும் பயன்படுத்தி வருகிறோம். மாநில அரசுகளின் உரிமையைப் பறிப்பதோடு, இந்திய அரசியல் சாசனத்துக்கு முரணாக இருக்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தைத் திருத்த வேண்டும். இவர்களின் விடுலைக்கு தமிழகம் கடந்து தேசிய அளவிலான மனித உரிமை ஆர்வலர்களை ஒருங்கிணைத்து அழுத்தம் தர வேண்டும். மக்கள் மத்தியில் இருந்து போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அது ஒன்றுதான் பயன் தரும்...’’ என்கிறார் மனித உரிமை செயற்பாட்டாளர் பேராசிரியர் அ.மார்க்ஸ்.

 இந்திய அரசியல் சட்டம் 116ன் கீழ் இவர்களை மாநில அரசு தன்னிச்சையாக விடுவிக்க முடியுமா? ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சந்துருவிடம் கேட்டோம். ‘‘இவர்கள் குறைந்தபட்ச தண்டனை அனுபவித்த பிறகு நன்னடத்தை காரணமாக இவர்களது மனுவைப் பரிசீலிக்கும் சமயத்தில், ‘வழக்கு சி.பி.ஐயால் விசாரிக்கப்பட்டதால், அவர்களையும் கலந்தாலோசித்த பிறகே முடிவெடுக்க முடியும்’ என்று கூறப்பட்டது. ஆனால் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாலும், மத்திய அரசுக்கு மூன்று நாள் அவகாசம் கொடுக்கப்பட்டதாலும் அவர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடி தடை உத்தரவு பெற்றனர்.

உச்ச நீதிமன்றத்தின் நீதிப்பேராணை வழங்கும் அதிகாரம் 32-வது பிரிவின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  அரசமைப்பு சட்டத்தில் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டாலொழிய இந்தப் பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றத்தை அணுக முடியாது. அதேபோல் ஒரு அரசு இறுதி உத்தரவு பிறப்பிக்கும் முன் அதன் அதிகாரத்தை ஆராய்வதற்கு நீதிமன்றங்களுக்கு அனுமதி இல்லை.

மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசுக்கு எதிராக நேரடியாக மனு தாக்கல் செய்வதற்கோ,  அடிப்படை உரிமை பாதிக்கப்படாமலே நீதிமன்றத்தை அணுகுவதற்கோ, ஒரு அரசு உத்தரவு ஒன்றை பிறப்பிக்கும் முன்னரே நீதிமன்றத்தை அணுகுவதற்கோ சட்டத்தில் இடமில்லை.  துரதிர்ஷ்டவசமாக உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் மனுவை ஏற்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

அந்தத் தீர்ப்பில், ‘இவர்களுக்கு தண்டனை குறைப்பு வழங்குவதற்கு முகாந்திரமுமில்லை’ என்றும், ‘இவர்கள் அரசின் கருணையை எதிர்பார்க்க முடியாது’ என்றும் நீதிபதி தனது சொந்தக் கருத்தைக் கூறியுள்ளது வருந்தத்தக்கது. இந்த சூழ்நிலையில் அந்த நால்வரும் மறுபடியும் அரசமைப்பு சட்டம் பிரிவு 72 (அ) 161ன் படி கருணை மனுக்களை அளிக்க முடியாது. அதே சமயத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்திலுள்ள 433 முதல் 435 வரையுள்ள பிரிவுகளின்படி மாநில அரசு தண்டனை குறைப்பு (அ) தண்டனை தள்ளி வைப்பு ஆகிய அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்குத் தடையில்லை. ஆனால் நீதிபதியின் சில கருத்துகள் அந்தத் தீர்ப்பிற்கு அப்பாற்பட்டது.

அதை ‘obiter dicta’ என்று கருதி அதைத் தீர்ப்பிலிருந்து ரத்து செய்யும்படி சீராய்வு மனு தாக்கல் செய்யலாம். அந்தக் குறிப்புகள் நீக்கப்பட்ட பிறகு மாநில அரசு மத்திய அரசை முறையாகக் கலந்தாலோசித்து இறுதி முடிவு எடுக்கலாம். கலந்தாலோசிப்பது என்பது (consultation does not mean consent) ஒப்புதல் பெறுவது என்பதாகாது.

மத்திய அரசு எதிர்ப்பு கருத்தைத் தெரிவித்தாலும் அதை கருத்தில் கொண்டு சுயேச்சையாக உத்தரவிடும் வாய்ப்பு மாநில அரசுக்கு உள்ளது. அப்படி உத்தரவிட்டால் அதை எதிர்த்து மத்திய அரசோ, தனிநபர்களோ மீண்டும் நீதிமன்றம் செல்ல வாய்ப்புண்டு. எப்படியிருப்பினும் இறுதியில் அந்த ஏழு பேரும் சிறையிலிருந்து வெளிவரும் வாய்ப்புள்ளது. ஏனெனில் சட்டமும், தமிழ் மக்களின் உணர்வும் அவர்களது கோரிக்கைக்கு ஆதரவாக உள்ளது’’ என்கிறார் சந்துரு. இந்த ஏழு பேரும் சிறையிலிருந்து வெளிவரும் வாய்ப்புள்ளது. ஏனெனில் சட்டமும், தமிழ் மக்களின் உணர்வும்  அவர்களது கோரிக்கைக்கு ஆதரவாக உள்ளது!

- வெ.நீலகண்டன்