நியூஸ் வே



ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியின்போது ஊக்க மருந்து பயன்படுத்தியதாக டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா குற்றம் சாட்டப்பட்டுள்ளார். ‘‘அவர்கள் குறிப்பிடும் மெல்டோனியம் என்ற மருந்தை நான் 10 ஆண்டுகளாக இதயம் மற்றும் மூச்சுத்திணறல் பிரச்னைக்காக சாப்பிடுகிறேன்’’ என்கிறார் மரியா.

இது ‘மில்ட்ரோனெய்ட்’ என்ற பெயரில் குறிப்பிடப்பட்டு, கடந்த ஆண்டு விளையாட்டு வீரர்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. ‘‘அதுதான் இது என தெரியாது’’ என்கிறார் மரியா. வழக்கமாக இதுபோல் நிகழ்ந்தால், 4 ஆண்டுகள் விளையாடத் தடை விதிப்பார்கள். அறியாமல் முதல் தடவை நிகழ்ந்த பிழை என்பதால் மரியாவுக்கு குறைந்தபட்ச தண்டனை கிடைக்கலாம். ஆனால், அதற்குள் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்புள்ள விளம்பர ஒப்பந்தங்களை இழந்துவிட்டார், உலகிலேயே அதிகம் சம்பாதித்த இந்த வீராங்கனை.

அஜித், ‘வேதாளம்’ சிவா இணையும் பட ஷூட்டிங் வருகிற ஜூனில் தொடங்குகிறது. மஞ்சிமா மோகன், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என பலரும் ஹீரோயினுக்கான பரிசீலனையில் உள்ளனர். இசை, மீண்டும் அனிருத்.

விஜய் ஆன்டனி இதுவரை சொந்தப் படத்தில் மட்டுமே நடித்து வந்தார். கஷ்டமோ, நஷ்டமோ தனக்கே வரட்டும் என்ற கொள்கையே காரணம். தொடர்ந்து வெற்றிப் பாதையில் போக ஆரம்பித்த பிறகு நம்பிக்கையோடு வெளிப்படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

5 ஆண்டு சிறைத் தண்டனையை முடித்து சமீபத்தில் வெளியில் வந்த சஞ்சய் தத், ‘‘பணத்தின் மதிப்பை சிறையில்தான் அறிந்துகொண்டேன்’’ என்கிறார். ‘‘மாதம் 2 ஆயிரம் ரூபாய். அதிலேயே பேஸ்ட், பிஸ்கெட், சிகரெட் என எல்லாம் வாங்கிக்கொள்ள வேண்டும். என் பிராண்ட் மார்ல்பரோ லைட்ஸ் ரொம்ப காஸ்ட்லி.

சமயங்களில் பீடி கூட புகைத்தேன்’’ என்கிற சஞ்சய் தத், தன் இரண்டு குழந்தைகளை ஒருமுறைகூட சிறைக்குக் கூட்டி வரச் சொல்லவில்லை. ‘‘என்னைக் கைதி உடையில் அவர்கள் பார்க்கக்கூடாது என நினைத்தேன். குழந்தைகளைப் பார்க்காமல் இருந்தது நரக வேதனையாகத்தான் இருந்தது’’ என உணர்ச்சிவசப்படுகிறார்.

இதுவரையில் பேச்சில் மட்டும் இருந்து வந்த மணிரத்னத்தின் அடுத்த படம் டேக் ஆஃப் ஆகிவிட்டது. ரஹ்மானோடு உட்கார்ந்து பாடல்கள் கம்போஸிங் எல்லாம் முடிந்தது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் கேரக்டர் ஸ்டடிக்காக கார்த்தி, மணிரத்னத்தை சந்தித்துப் பேசுகிறார்.

அடுத்த படத்திற்கான வேலைகள் தொடங்கிவிட்டதால், ட்விட்டருக்கு தற்காலிக விடுப்பு கொடுத்துவிட்டார் கமல். சமீபத்திய தனது அமெரிக்கப் பயணத்தின்போது கூகுள் அலுவலகம் சென்று வந்தவர், அந்த ஆனந்த மொமன்ட்டை செல்ஃபி எடுத்துக் கொண்டாடியிருக்கிறார்.

பீகாரின் முசாபர்பூரில் ராணுவத்துக்கு ஆள் எடுக்கும் தேர்வு நடைபெற்றது. உடல் தகுதித் தேர்வை வெறுமனே ஜட்டியோடு செய்த அத்தனை இளைஞர்களையும் அப்படியே அதே கோலத்தில் ஒரு மைதானத்தில் உட்கார வைத்து, எழுத்துத் தேர்வையும் முடிக்கச் சொன்னார்கள். ‘யாரும் பிட் எதையும் மறைத்து வைத்து எடுத்துவரக்கூடாது’ என்பதற்காகவே இப்படி எழுதச் சொன்னதாக காரணமும் சொல்லப்பட்டது. டி.வி.க்களில் இந்தப் படம் வெளியானதும் ஒருவர் கொந்தளித்து பொதுநல வழக்கு போட்டார். ‘‘இது அவமானப்படுத்தலும் இல்லை; சித்ரவதையும் இல்லை. தேர்வு எழுதியவர்களே எதுவும் புகார் சொல்லவில்லை. இவர்களுக்கு என்ன வந்தது?’’ என இப்போதும் கேட்கிறார், தேர்வை நடத்திய ராணுவ கர்னல் கோத்ரா.

அதிரடி கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா, டென்னிஸ் வீராங்கனை ஷீத்தல் கௌதமை மணந்திருக்கிறார். கல்லூரிக் கால காதல். உத்தப்பாவுக்கு ஷீத்தல் காலேஜ் சீனியர். மைதானங்களில் அறிமுகமாகி, 6 ஆண்டுகள் நண்பர்களாகப் பழகி, 3 ஆண்டுகள் காதலித்து இப்போது கல்யாணம்.

70 லட்ச ரூபாய் வாட்ச் வைத்திருந்து சர்ச்சையில் சிக்கிய கர்நாடக முதல்வர் சித்தராமய்யா, அதை அரசிடம் ஒப்படைத்தது பழைய விஷயம். இதைக் கிண்டல் செய்வதற்காகவோ என்னவோ, ‘‘நான் வாட்ச்சும் கட்டுவதில்லை; மோதிரமும் போடுவதில்லை. எளிமையாக வாழ்கிறேன்’’ என சமீபத்தில் ஒரு விழாவில் சொன்னார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.

பின் லேடன் எழுதி வைத்திருந்த உயில் பற்றிய விவரங்களை இப்போதுதான் வெளியிட்டிருக்கிறது அமெரிக்க உளவுத் துறை. சுமார் 194 கோடி ரூபாய் சொத்து வைத்திருந்த பின்லேடன், அதில் ஒரு சதவீதம் தவிர மற்ற பணம் முழுவதையும் அல் கொய்தாவுக்காக எழுதி வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.

36 வயது என்பது கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஓய்வுபெறும் வயது. நான்கு ஆண்டுகள் கண்டுகொள்ளப்படாமல் இருந்து, இந்த வயதில் திரும்பவும் டீமுக்கு வந்து, ஆசியக் கோப்பை ட்வென்ட்டி 20 தொடரில் ஒவ்வொரு மேட்ச்சிலும் விக்கெட் எடுத்து, இந்தியா கோப்பையை வெல்லக் காரணமாக அமைந்தார் ஆஷிஷ் நெஹ்ரா. இவர் இல்லாத இந்த 4 ஆண்டுகளில் இந்திய அணி 23 வேகப்பந்து வீச்சாளர்களை வைத்து பரிசோதனைகள்
செய்தது.

‘கபாலி’ ரீரெக்கார்டிங் முடித்துவிட்டார் சந்தோஷ் நாராயணன். ‘இறைவி’ படத்தில் ‘பெண்ணின் பெருமையைச் சொல்லும்’ ஒரு பாடலை தனது அம்மாவை பாட வைத்து நெகிழ்ந்தவர், உதயநிதி நடிக்கும் ‘மனிதன்’ படத்தில் ஒரு பாடலை அனிருத்தைப் பாட வைத்து மகிழ்ந்திருக்கிறார்.

இந்தியில் ‘ஷமிதாப்’ படத்தை அடுத்து பால்கி இயக்கும் படம், ‘கி அண்ட் கா’. கரீனா கபூர், அர்ஜுன் கபூர் தவிர, பால்கியின் ஃபேவரிட் கூட்டணி அமிதாப்பச்சனும், இளையராஜாவும் இதிலும் இணைந்திருக்கிறார்கள். படத்தின் பின்னணி இசைக்கோர்ப்பு பணிகளுக்காக இப்போது மும்பையில் இருந்து சென்னை வந்துபோய்க்கொண்டிருக்கிறார் பால்கி.

இந்துத்துவ தேசியவாதத்துக்கு எதிராகப் பேசி பெரும்புகழ் அடைந்திருக்கும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் கண்ணையா குமாரை தேர்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்திக்கொள்ள நினைத்தனர் இடதுசாரிகள். ஆனால், ‘‘மாணவர்கள் பிரச்னையே ஏராளமாக இருக்கிறது. அதற்கான போராட்டமும் படிப்புமே முக்கியம். தேர்தல் பிரசாரத்துக்காக ஊர் ஊராக அலைவதற்கு அவகாசம்
இல்லை’’ என்கிறார் அவர்.

தெலுங்கில் 2 படங்கள் தவிர, ராகவா லாரன்ஸ், பாபி சிம்ஹா, விஷ்ணுவுடன் என தமிழில் மூன்று படங்கள் கைவசம் வைத்திருக்கிறார் நிக்கி கல்ரானி. சமீபத்தில் பெங்களூரு வீட்டில் அடிபட்டு, இப்போது கால் கட்டுடன் இருக்குது பொண்ணு!

ஒரே நேரத்தில் 1328 பெண்கள் நெயில் பாலீஷ் போட்டுக்கொள்ளும் நிகழ்ச்சி பெண்கள் தினத்தை ஒட்டி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளரான சோனாக்‌ஷி சின்ஹாவும் அவர்களோடு நெயில் பாலீஷ் போட்டார். இது ஒரு கின்னஸ் சாதனையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு சோனாக்‌ஷி உள்ளிட்ட பெண்களுக்கு சான்றிதழும் வந்துவிட்டது. ‘‘கின்னஸ் புக்கில் என் பெயரும்  இடம் பெற வேண்டும்  என்று கனவு கண்டு கொண்டிருந்தேன்... அது நிறைவேறியுள்ளது!’’ என பூரிக்கிறார் சோனாக்‌ஷி.

தமிழ், தெலுங்கில் ரெடியாகும் ‘நாயகி’யில் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார் த்ரிஷா. ரெக்கார்ட்டிங் தியேட்டரில் அதை நேரில் பார்த்த, கேட்டவர்கள் வியந்திருக்கிறார்கள். ‘கொடி’யிலும் பாடுவீங்களா த்ரிஷ்?

எந்த ஹீரோவாக இருந்தாலும் சரி, மூன்று கோடி ரூபாய் கொடுத்தால் நடிக்க ஓகே சொல்கிறார் நயன்தாரா. ஏழைப் பெண்களுக்கு உதவ பெரிய அளவில் ட்ரஸ்ட் ஒன்று தொடங்க திட்டமாம். அதற்கான வசூல்தான் இது!

நடிகர்களை தேர்தல் விழிப்புணர்வுப் படங்களில் நடிக்க கேட்டுக்கொண்டது தேர்தல் கமிஷன். எல்லோருமே அதைப் பரீசிலித்துக் கொண்டிருக்க, சூர்யா ஒரு ‘டப்ஸ்மாஷ்’ செய்தே முடித்துவிட்டார்.