போக்கிரி ராஜா



துடிக்கும் துப்பாக்கியோடு பழி வாங்கப் புறப்படுகிறார் ஜீவா... கொள்ளைக் கும்பலின் முகமூடியைக் கிழிக்கும் ஹீரோ... இது எதுவும் இல்லை. ஜீவாவிற்கு அடிக்கடி வருகிற ‘கொட்டாவி’ மட்டும்தான் பிரச்னை. அதுவே பெரிய பிரச்னைகளை உருவாக்கினால்..? அதுதான் ‘போக்கிரி ராஜா’!   

எந்த நேரமோ, அவசரமோ, முக்கியமான வேலையோ... ஜீவாவின் ‘கொட்டாவி’ நேரம் பார்ப்பதில்லை. வந்து தொலைத்து பாடாய்படுத்துகிறது. அக்கம்பக்கம் சலித்துக்கொள்கிறார்கள். அடுத்தவர்களுக்கும் சோம்பல் வருகிறது. இதனால் பார்க்கும் வேலை கூட பறிபோகிறது. பார்த்துப் பார்த்து காதலித்த பொண்ணும் ‘குட் பை’ சொல்லிவிடுகிறாள்.

ரவுடி(!) கூலிங்கிளாஸ் குணா(!)வாக வரும் சிபிராஜ் மீது யதேச்சையாக ஜீவா தண்ணீர் அடித்து விடுகிறார். அதற்காக அவரைத் தேடிக்கொண்டே இருக்கிறார் சிபி. ஜீவாவின் அடுத்த காதல் என்ன ஆனது? சிபியின் கோபம் தணிந்ததா? படுத்தி எடுக்கும் கொட்டாவியால் ஜீவாவுக்கு நேர்ந்தது என்ன? என்பதே தொடர்கிற மீதிக் கதை.

கொஞ்சமும் எதிர்பார்க்காத புது தினுசில் கதை அமைத்த துணிச்சலுக்கே இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பாவுக்கு லைக்ஸ். காமெடி, ஆக்‌ஷன் வகையறாவில் ‘கொட்டாவி’ யைப் பிரதானப்படுத்திக் கொடுக்க ஆதாரங்களோடு வருகிறார்.

‘கற்றது தமிழ்’, ‘ராம்’, ‘கோ’ என வேறு வேறு அவதாரம் எடுத்த ஜீவாவுக்கு இது ஊதித் தள்ளும் கேரக்டர். சுலபமாக செய்துவிட்டுப் போய்விடுகிறார். உடம்பைக் குறைத்து குளுகுளுவென ஜீவா மாறியிருக்கிறார். காமெடிக்கு டைரக்டர் சொன்ன மாதிரி உதவுகிறார். இடம், பொருள், ஏவல் பார்க்காமல் தடால் தடால் என வந்துவிடும் கொட்டாவியைக் கட்டுப்படுத்துகிற பரிதாப நிலையையும், அதையே சக்தியாக(!) மாற்றி விடுகிற நிலையையும் அனாயாசமாகச் செய்துவிடுகிறார்.

அவரது திறமைக்குத் தகுந்த மாதிரி கேரக்டர் அமையாததால் அவரே ஜாலியாக வந்து நின்றுவிட்டுப் போவது மாதிரி தெரிகிறது. முன்பு வேடிக்கையாக கொட்டாவியை வைத்து கதை சொன்னவர்கள், பின்பு அதையே ஒரு சக்தியாக மாற்றிவிடுவதால் ஆக்‌ஷனாக மாறிவிடுகிறது.
என்னதான் சிபிராஜ் வில்லனாக மாறி வந்தாலும், அவருக்கு டைமிங்கில் அடிக்கும் பன்ச் மட்டுமே கை கொடுக்கிறது. அதட்டல், மிரட்டல் அவரிடமிருந்து வரும்போது பலிக்கவில்லை. ஆனால், அந்த உயரத்தில் அவர் வரும்போது கொஞ்சம் திகில் கூட்டுவது நிஜம்.

சமூக சேவகியாக ஹன்சிகா அழகழகாய் வருகிறார். எக்ஸ்பிரஷனில் அவர் முகம் அஷ்டகோணலாகும் காட்சிகள் தவிர, மற்ற காட்சிகளில் அவரைப் பார்க்கவே குளுமை. தெருவோரத்தில் சிறுநீர் கழிப்பவர்களுக்கு அவர் தண்ணீர் வண்டியில் கொண்டு வரும் ஷாக் புதுசு. ஆனால், ஹன்சிகா என்றைக்கு நடிக்க ஆரம்பிக்கப்போகிறார் என்பதை தமிழ் சினிமாவே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. இன்னமும் குழந்தை மாதிரி பேசுவதை அவர் தவிர்ப்பது அவருக்கு நல்லது.

சிரிக்க வைக்கும் வசனங்களில் ஞானகிரி தெரிகிறார். இமானின் இசையில் ‘அத்துவிட்டா’ பாட்டு பொறி பறக்கிறது. அஞ்சியின் கேமரா அடிதடி, ஆக்‌ஷன் முதற்கொண்டு பாடல்கள் வரைக்கும் உழைக்கிறது.

‘கொட்டாவி’யை மூலகாரணமாக வைக்கும்போது அதில் இன்னும் சுவாரஸ்யம் காட்டியிருக்க வேண்டும்.  அதையே சக்தியாக உருமாற்றி யிருப்பதில் இன்னும் நம்பகத் தன்மையைக் கொண்டு வந்திருக்கலாம். காமெடி, ஆக்‌ஷனுக்கு நடுவே பாடல்கள் கொஞ்சம் அலுப்பு.திரைக்கதையை இறுக்கியிருந்தால் ‘போக்கிரி ராஜா’வை இன்னும் கொட்டாவி விடாமல் ரசித்திருக்கலாம்.

- குங்குமம் விமர்சனக் குழு