திருடக் கூடாது



2 பக்கக் கதை

‘‘மாடியில வடாம் காயப் போடுறேன்... சாயந்திரம் போய்ப் பாத்தா ஒண்ணு விடாம காணாம போயிடுதுன்னு நானும் பத்து நாளா சொல்லிட்டு இருக்கேன். நீயும் சரி, உங்கப்பனும் சரி... கேக்குறதில்லை!’’ - அம்மா இப்படி சொல்லிக்கொண்டேதான் இருந்தாள். வழக்கமான புலம்பல் என்று நானும் விட்டிருந்தேன். இதற்காக ஒருநாள் மதியப் பசிக்கு வடாம் கிடைக்காமல் செய்தபோதுதான் அவள் எத்தனை தீவிரமாகச் சொல்லியிருக்கிறாள் என்பது புரிந்தது.

அது யாரது வடாமை லவட்டுவது? காக்கை, குருவியாக இருக்கலாம். ஆனாலும் அம்மா, கொசு வலைக்கூட்டுக்குள்தான் வடாம் காயப் போடுகிறாள். அக்கம் பக்கத்து வாண்டுதான் இந்தக் காரியத்தைச் செய்கிறது என்று தோன்றியது. அது யாரென்று ஒரு கை பார்த்துவிட லுங்கியைக் கட்டிக்கொண்டு மாடிக்கு வந்தேன். அம்மாவின் பட்டுச் சேலை, ரவிக்கை, எனது ஜீன்ஸ், டி-ஷர்ட், எல்லாம் கொடியில் ஒரு ஓரமாய்க் காய்ந்து கொண்டிருக்க, நீர்த்தேக்கி அருகில் கொசுவலைக்குள் பத்திரமாக சன் பாத் எடுத்துக்கொண்டிருந்தது வடாம்.

நான் ஒரு மறைவான இடமாகப் பார்த்து அமர்ந்தேன்.  மதியம் மணி 2. எதிர் வீட்டு லக்ஷ்மணன் மாமா வந்தார். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, மாடி ஓரமாக வந்து பக்கவாட்டில் இருந்த வீட்டின் ஜன்னலை நோட்டம் விட்டார். அந்த வீட்டில் ஒரு ஆன்ட்டி இருப்பது தெரியும்.  மாமாவுக்கு வயது ஐம்பதுக்கு மேல். இதெல்லாம் இவருக்குத் தேவையா என்று நினைத்தபடி மீண்டும் பதுங்கினேன்.

மணி 4. கீழ் வீட்டு வாண்டு பப்லு வந்தான். தின்றே கொழுத்தவன். அம்மா வடாம் காணாமல் போகிறது என்றதும் எனக்கு சந்தேகம் வந்த வாண்டு இவன்தான். மொட்டை மாடிக்கு வந்த பப்லு, மாடியின் நுனியில் போய் நின்றான். அவன் நின்ற இடத்திலிருந்து அந்த ஆன்ட்டி வீட்டு ஜன்னல் நன்றாகத் தெரியும். ‘அடப்பாவி! நீயுமாடா?’ இவன் பத்தாவது தேறுவது கடினம் என்று தோன்றியது. சற்று நேரம் நின்று அங்கேயே வெறித்தவன், அங்கும் இங்கும் கொஞ்சம் நடந்தான். வடாமையும் உற்றுப் பார்த்தான். பிறகு இறங்கிப் போய்விட்டான்.

ஒருவேளை மொத்த வடாமையும் அள்ளிப் போக ஏதேனும் பாத்திரத்தோடு வருவானோ! கண்காணிப்பைத் தொடர்ந்தேன். வியர்த்துக் கொட்டியது.  குதிகாலிட்டு மணிக்கணக்கில் அமர்ந்ததில், ரத்த ஓட்டம் குவிந்து கண் முன்னால் பூச்சி பறப்பது போலிருந்தது. பொறுத்துக் கொண்டேன்.
மணி 5. வடாம் வடாமாகவே இருந்தது.

அம்மா வந்தாள். வடாமைக் காப்பாற்றிவிட்ட சூரத்தனத்தை காட்டிக்கொள்ள நான் மறைவிடத்திலிருந்து எழுந்தேன். அவள் அங்குமிங்கும் எதையோ தேடிக்கொண்டிருந்தாள். ‘‘என்னம்மா தேடுற, வடாம் பத்திரமா இருக்கே!’’ என்றேன். ‘‘டேய், நீ என்னடா அங்கிருந்து வர்ற?’’

‘‘ஒளிஞ்சிருந்து எவன் வடாமைத் திருடுறான்னு பார்த்தேன். இன்னிக்கு அவன் வரலை போல!’’ என்றேன்.‘‘மண்ணாங்கட்டி! உங் கண்ணுல கொள்ளிக்கட்டைய வைக்க. என் பட்டுச் சேலையக் காணோம்டா’’ என்றாள்.அப்போதுதான் கவனித்தேன், அந்தக் கொடியை. அம்மாவின் சேலையோடு எனது ஜீன்ஸையும்கூட காணவில்லை.            

 கெளதம்