பாப்பாவுக்கு பிடித்த பொம்மை



அப்பாவென் றோடிவந்தென்
கழுத்தைக் கட்டிக் கொள்ளும்
அவள் கரங்கள்
பூமாலை.

தன் பிஞ்சு விரல்களால்
என் கன்னம் தடவி
அவள் வைக்கும் முத்தம்
என்னை நனைக்கும் மழை.

தன் விருப்பத்திற்கு
என்னை ஆட்டுவிக்கும்
அவள் ஒரு மந்திரக்காரி.
தன் வெறுங்கையால்
காற்றை சோறாக்கி
எனக்கு ஊட்டுகிறாள்.

ஓட வைக்கிறாள்
ஒளிந்துகொண்டு
தேட வைக்கிறாள்
என்ைன யானையாக்கி
சவாரி செய்கிறாள்.

சுற்றிச் சூழ
ஆயிரம் பொம்மைகள் இருந்தாலும்
அவளுக்கு நான்தான்
மிகவும் பிடித்த
விளையாட்டு பொம்மை.

பாடலாசிரியர் அண்ணாமலை