கடையின் சாவி கஸ்டமரிடம் இருக்கு



விநோத ரஸ மஞ்சரி

ஹலோ சார்... கடையை எப்ப திறப்பீங்க?’’ என வடிவேலு பாணியில் போன் செய்து கேட்க வேண்டியதில்லை இந்தக் கடையில். இந்தக் கடை பூட்டியேதான் இருக்கும். ஆனால் யார் வேண்டுமானாலும் திறந்து தங்களுக்குத் தேவையானதை எடுத்துக் கொள்ளலாம். சாவி? அது எல்லோரது செல்போனிலும் இருக்கும்!

ஸ்வீடன் நாட்டில் வீகன் எனும் கிராமத்தில் வசிப்பவர் ராபர்ட் இலிஜாசன். தன் குழந்தையுடன் ஒருநாள் அவர் தன்னந்தனியே வசிக்க வேண்டி வந்தது. இரவு நேரம்... குழந்தை பசியில் அழுகிறது... கைவசமிருந்த கடைசி பாக்கெட் உணவும் கை தவறி விழுந்து வீணாகிவிட்டது. கடைகள் எல்லாம் மூடியிருக்கின்றன. இப்போது ராபர்ட் 20 கி.மீ பயணித்து நகரத்துக்குப் போனால்தான் 24 மணி நேர சூப்பர் மார்க்கெட்டில் ஏதாவது வாங்க முடியும். அந்தக் கணத்தில்தான் ராபர்ட் மனத்தில் இந்த ஐடியா உதித்தது... ஆளில்லாத பல்பொருள் அங்காடி!

‘‘இது போன்ற சின்ன கிராமங்களிலும் 24 மணி நேரம் இயங்கும் கடைகள் தேவை. ஆனால், அதற்கான பணியாளர்களுக்கு சம்பளம் கொடுத்து கட்டுப்படி ஆகாது என்பதால் யாரும் நடத்துவதில்லை. இந்த ஆளில்லா கடை அந்தக் குறையைப் போக்கும்!’’ என்கிற ராபர்ட், இந்தக் கடைக்கு நாராஃபிர் எனப் பெயர் வைத்திருக்கிறார்.

இந்தக் கடைக்குச் செல்ல வேண்டுமானால், நமது ஸ்மார்ட் போனில் ‘நாராஃபிர்’ என்ற ஆப்பை டவுன்லோடு செய்து நிறுவிக் கொள்ளவேண்டும். நமது வங்கி விவரம் உட்பட சில தகவல்களைப் பெற்றுக் கொண்டு அந்த ஆப் நம்மை வாடிக்கையாளராய் பதிவு செய்துகொள்ளும். அதன் பின் அந்தக் கடைக்கு நாம் எந்த நேரத்திலும் போகலாம்.

கடை எப்போதும் பூட்டியேதான் இருக்கும். வாசல் அருகில் போய் நமது ஆப் மூலம் ஒரு கட்டளை பிறப்பித்தால் அந்தக் கதவு தானாகத் திறக்கும். உள்ளே போய் வேண்டிய பொருட்களை நாமே எடுத்துக் கொள்ளலாம். அந்தப் பொருட்களின் பார் கோட்களை நமது போன் மூலமாக ஸ்கேன் செய்தால் நமது கணக்கில் அந்த பில் போடப்பட்டுவிடும். மாதம் ஒரு முறை போன் பில் போல இந்தத் தொகை நம் வங்கிக்கணக்கிலிருந்து எடுத்துக் கொள்ளப்படும்.

சரி, யாராவது விஷமிகள் பொருட்களை ஸ்கேன் செய்யாமல் பையில் போட்டுக்கொண்டு விட்டால்? அடிப்படையில் ஐ.டி வல்லுநரான ராபர்ட்டிடம் இதற்கு பளிச் பதில் இருக்கிறது.‘‘இந்தக் கடையில் மொத்தமுள்ள 480 சதுர அடி பரப்பும் கேமராக்களால் கண்காணிக்கப்படுகிறது. என் வீடு கடைக்கு அருகில்தான் இருக்கிறது. இதன் கதவுகளை யாரும் உடைக்க முயன்றாலோ, கதவுகளைத் தாமாக மூடவிடாமல் நீண்ட நேரம் திறந்து வைத்திருந்தாலோ, என் போனுக்கு அலர்ட் வந்துவிடும். அடுத்த நிமிடம் நான் ஸ்பாட்டில் இருப்பேன்.

மேலும் இந்தக் கடையில் புகையிலை மற்றும் போதைப் பொருட்கள் விற்கப்படுவதில்லை. மது வகைகளும் இல்லை. இப்படிப்பட்ட பொருட்களை நாடுகிறவர்களுக்குத்தான் திருடும் எண்ணமும் வரும். இந்தக் கடையின் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் 24 மணி நேரக் கடைகளுக்காக ஏங்கிக் கிடப்பவர்கள். அவசர நேரத்தில் இது கை கொடுக்கிறதே என்ற நன்றி உணர்ச்சியைத்தான் அவர்களிடம் பார்க்க முடிகிறதே தவிர, களவாடும் எண்ணம் யாரிடமும் இல்லை!’’ என்கிறார் ராபர்ட்.

இரண்டு மாதங்கள் இயங்கியிருக்கும் இந்தக் கடையில் அப்படி எந்த திருட்டு முயற்சியும் நடந்ததில்லையாம்.‘‘24 மணி நேரக்கடை என்பதற்காக இங்கே இரவில்தான் வர வேண்டும் என்று அர்த்தமல்ல. பக்கத்தில் பல கடைகள் திறந்திருந்தாலும் நான் இங்கேதான் வருவேன். காரணம், இங்கே பில் போடுவதற்காக வரிசையில் நிற்க வேண்டியதில்லை. நொடியில் உள்ளே நுழையலாம்... நொடியில் வெளியேறலாம். ஐ லைக் இட்!’’ என்கிறார் நாராஃபிர்கடையின் வாடிக்கையாளர்களில் ஒருவரான ரேமண்ட் அர்விட்சன்.

‘‘இந்த ஐடியாவுக்கு நான் வைத்திருக்கும் பெயர் ‘ஜெனரல் ஸ்டோர் 2.0’. இந்த மாதிரி கடைகளை சின்னச் சின்ன கிராமங்களில் பலரும் நடத்த முன்வர
வேண்டும். ஸ்வீடன் முழுக்க இதைப் பரப்புவதுதான் என் நோக்கம்!’’ என்கிறார் ராபர்ட் ஆர்வம் பொங்க!உலகத்துக்கே பரப்புங்க பாஸ்!

- ரெமோ