தெளிவான தேர்வு



2 பக்கக் கதை
 
மொபைல் போன் சிணுங்கியது. சிந்துஜா இன்னமும் குளித்துக்கொண்டிருந்தாள். அவளுக்காகக் காத்திருந்த தோழி கிரிஜா சட்டென அந்த மொபைலை எடுத்துப் பார்த்தாள். வாட்ஸ்அப்பில் வினய், ‘முத்தமிடவா?’ என்று கேட்டிருந்தான். முரளி, ‘எப்போது தனிமையில் சந்திக்கலாம்?’ என்று கேட்டிருந்தான்.

அடுத்த விநாடி சிந்து ஒரு நைட்டியில் வெளியே வந்தாள். ஆர்வமாக மொபைலை கிரிஜாவிடமிருந்து வாங்கிப் பார்த்துவிட்டு படுக்கை மேல் எறிந்தாள். ‘‘அந்தப் பசங்களுக்கு என்ன சொல்லப் போற சிந்து?’’ என்றாள் கிரிஜா.‘‘என்ன சொல்லலாம்? நீயே சொல்லேன்?’’ - தலை துவட்டி கூந்தலைச் சீவினாள் சிந்து.‘‘என்ன சொல்றது? அந்த வினய் அழகா இருக்கான்... அந்த முரளி சுமார்தான்!’’

‘‘ஆனா, முரளி அடாமிக் பிஸிக்ஸ் தெளிவா சொல்லித் தருவான். வினய்க்கு ஸ்டைல் தவிர வேற ஒண்ணும் தெரியாது!’’‘‘ஆமா, நாலு சுவத்துக்குள்ள அடாமிக் பிஸிக்ஸ் தெரிஞ்சா என்ன? தெரியாட்டா என்ன?’’‘‘வினய் சூப்பரா இருக்கான். செவப்பா, அழகா... உயரம் என்ன ஒரு அஞ்சரை இருக்குமா? செம டிரஸ்ஸிங் சென்ஸ்... அவன் முடியை கோதி விட்டுக்கிட்டே இருக்கணும் போல இருக்கும். நீ அதிர்ஷ்டக்காரிதான்!’’

சிந்து ஏதும் சொல்லவில்லை.‘‘என்னடி சிந்து..? நான் சொல்லிட்டே இருக்கேன்... நீ எதுவும் பேச மாட்டேங்குற?’’சட்டென்று திரும்பிய சிந்து, சீப்பை டிரஸ்ஸிங் டேபிளில் வைத்துவிட்டு, கிரிஜாவை இழுத்துவந்து படுக்கையில் அமர வைத்து தானும் அமர்ந்தாள்.
‘‘கிரி, வினய் ஸ்டைலுதான். லுக்குதான்.

ஆனா, அதைத் தவிர வேற ஒண்ணும் தெரியாது. முரளிக்கு நாளைக்கு வேலையே கிடைக்கலைன்னாலும், அவன் தெரிஞ்சு வச்சிருக்குற பிஸிக்ஸ், மேத்ஸ் அவனைக் காப்பாத்தும். இவ்ளோ கஷ்டமான விஷயத்தை புரிஞ்சிக்கிறவன், நாளைக்கு பொண்ணு மனசையும் புரிஞ்சிக்குவான். வினய் இப்படி எந்தத் திறமையையும் வளர்த்துக்காம ஸ்டைல் காட்டிக்கிட்டு சுத்தறான்னா அதுக்குக் காரணம் உன்னையும் என்னையும் மாதிரி பொண்ணுங்கதான்!’’ என்றாள் சிந்து.

‘‘என்னது! நானா அவனை அப்படி சுத்தச் சொன்னேன்?’’ ‘‘அதை ரசிக்கிறியே... அது போதாதா? நாம பொண்ணுங்க கிரி. நாமதான் தேர்ந்தெடுக்கணும். ட்ரிக்கர் நம்மகிட்டதான் இருக்கு. என்னைக் கேட்டா அரை மணி நேர சந்தோஷத்துக்குக் கூட எந்த பொண்ணும், ஸ்டைலு, அழகுனு ஒரு ஆம்பளைக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது. அப்படி குடுக்கக் குடுக்கத்தான், நம்மளை பின்னால ஏய்க்கிறானுங்க. முரளிதான் என் சாய்ஸ் என்பதில் நான் உறுதியா இருக்கேன்.

நம்ம தேர்வுதான் ஆம்பளைகளை தீர்மானிக்குது. நாமதான் அவனுங்களைப் பழக்கப்படுத்தணும். அந்தக் காலத்துல மனுஷன் காட்டு விலங்கான ஓநாயைப் பழக்கப்படுத்தித்தான் வீட்டு விலங்காக்கினான். அப்படிப் பழக்கப்படுத்தணும். அவனுங்க நம்மளை பழக்கப்படுத்தலை, ‘ஜீன்ஸ் போடாத... இதைச் செய்யாத...

அதைச் செய்யாத’னு! அவனுங்க தெளிவாதான் இருக்காங்க. நாமதான் தேர்ந்தெடுக்கத் தெரியாம அவங்களையும் குழப்பி, நாமும் குழம்பறோம். நாம தெளிவா இருக்கணும். நாம முரளி மாதிரி ஆளுங்களைத்தான் தேர்வு பண்ணுவோம்னு தெரிஞ்சிட்டா, அவனுங்க ஏன் சீன் போடப் போறாங்க’’ என்றாள் சிந்து தெளிவாக!          

இலக்கியா தேன்மொழி