ஃபேன்டஸி கதைகள்



செல்வு@selvu

பழைய அறை ஒன்றினைச் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது அந்த ஓலைச்சுவடி கிடைத்தது. கார்பன் டேட்டிங் செய்து பார்த்தால் அது எப்பொழுது எழுதப்பட்டது என்பது தெரிய வரலாம். ஆனால், டேட்டிங்கிற்கெல்லாம் செல்லக்கூடாது என்று அவனது பெற்றோர்கள் சொல்லியிருந்தபடியால் அதில் எழுதப்பட்டிருந்த குறிப்புகளை மட்டும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் படித்துப் பார்த்தான்.

உடல்நலக் குறிப்புகள், அழகுக் குறிப்புகள் உள்ளிட்டவைகளுடன் சிற்சில மந்திர, மாயாஜாலக் குறிப்புகளும் அதில் இருந்தன. இவனுக்கு அவற்றிலெல்லாம் நம்பிக்கை இல்லை. அடுத்தடுத்த பக்கங்களைப் புரட்டிக் கொண்டே வந்தபோது, ‘பணம் பெருகுவதற்கான மந்திரம்’ என்றவாறு ஒன்று இருந்தது. அதில் இருக்கும்படி செய்து பார்த்தால் பணம் பெருகும் என்பதை அவன் நம்பவில்லை.

ஆனால், ரொம்பவும் வெட்டியாக இருந்த ஒருநாளில் ஒருமுறை இதனைச் சோதனை செய்து பார்க்க முடிவெடுத்தான். அதில் எழுதியிருந்தபடி பேப்பர் ஒன்றினைக் கிழித்து அதில் சில கட்டங்களைப் போட்டு, ஒரு அட்டையில் ஒட்டி, வீட்டு ஹாலில் மாட்டி விட்டான். ஓரிரு நாட்கள் அமைதியாக நகர்ந்தன. சில நாட்களுக்குப் பிறகு அந்தக் காகிதத்தை கவனித்தான். அந்த ஓலைச்சுவடியும், அதன் மந்திரமும் ஞாபகம் வந்தது.

அதில் குறிப்பிட்டிருந்தபடிதான் அந்தக் கட்டத்தினை வரைந்து வீட்டில் மாட்டிவிட்டான். இப்படிச் செய்தால் உடனடியாக வீட்டில் பணம் பெருகத்தொடங்கும் என்றுதான் எழுதியிருந்தது. ஆனால் அப்படியெதுவும் நிகழவில்லையே என்பது நினைவு வந்தது. தான் நினைத்ததுபோலவே அந்த ஓலைச்சுவடி வெறும் டுபாக்கூர் என்று முடிவு செய்து அதைக் குப்பைகளுடன் சேர்த்து எரித்துவிட்டான். ஆனால், கட்டம் போட்டு சுவரில் மாட்டிய காகிதம் மட்டும் பார்ப்பதற்குக் கொஞ்சம் அழகாகத் தெரிந்ததால் அப்படியே விட்டுவிட்டான்.

அடுத்த நாள் காலையில் வழக்கமாக அலுவலகம் செல்வதற்காகக் கிளம்பியபோது ஒரு பத்து ரூபாய் நோட்டு வாசலருகே கிடந்தது. ஆச்சர்யமெல்லாம் ஒன்றும் ஏற்படவில்லை. தன் பர்ஸிலிருந்து விழுந்திருக்கும் என நினைத்தபடி அதை எடுத்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான். அடுத்த நாள் நூறு ரூபாய் கிடந்தது. அதற்கு அடுத்த நாள் ஆயிரம் ரூபாய்.

‘அடடா! இது எப்படி சாத்தியம்? யாரேனும் கொண்டுவந்து போட்டுவிட்டுச் செல்கிறார்களா, இல்லை அந்த மந்திரக் கட்டம் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டதா?’ குழப்பம் தீரவில்லை.அடுத்த நாள் பத்து ரூபாய் நோட்டுக்கட்டு ஒன்று வீட்டிற்குள் வந்து விழுந்தது. இது அந்த மந்திர சக்தியின் வேலைதான் என்பது உறுதியானது. அடுத்த நாள் நீங்கள் நினைப்பதைப் போலவே நூறு ரூபாய் நோட்டுக்கட்டு; அடுத்தது ஆயிரம் ரூபாய் நோட்டுக்கட்டு.

சரியாக ஒன்பது மணியளவில் பணம் வந்து விழும். கதவினைத் திறந்து வைத்திருந்தால் வீட்டிற்குள்ளே வந்துவிழும். இல்லாவிட்டால் வாயிலருகில் பறந்தவாக்கில் நின்று கொண்டிருக்கும். கதவினை எப்பொழுது திறந்தாலும் உடனே உள்ளே வந்துவிடும். வேலையை விட்டுவிட்டான். விட்டுவிட்டான் என்பது கூடத் தவறு. ‘‘வேலைக்கெல்லாம் வரமுடியாது’’ என்று சொல்லிவிட்டு வந்துவிட்டான். மந்திரக்கட்டம் எழுதப்பட்டிருந்த பேப்பருக்கு சாம்பிராணியெல்லாம் காட்டி, கண்ணாடி ஃப்ரேம் போட்டு, மிக பத்திரமாக எடுத்து வைத்தான்.

அடுத்த நாள் ஒரு பெட்டியில் பணம் வந்தது. அதற்கு அடுத்த நாள் இரண்டு பெட்டி. இப்படியே போய்க்கொண்டிருந்தால் நிறைய பணம் சேர்ந்துவிடுமென்று நினைத்தவன், அவற்றைப் பதுக்கி வைப்பதற்குத் தனது வீடு போதாதென்று உணர்ந்தான். இன்று இரண்டு பெட்டிகள் வந்திருப்பதால் நாளைக்கு நான்கு பெட்டிகள் வரும்.

அதனை வைத்துக்கொள்ள இடம் இருக்கும். ஆனால், அடுத்தடுத்து வந்துகொண்டே இருந்தால் என்ன செய்யமுடியும்? அதே சமயம் இந்த மந்திரசக்தியினைப் பற்றி யாரிடமும் எதுவும் கூறவில்லை. யாரேனும் திருடிச் சென்றுவிட்டாலோ அல்லது பறித்துக் கொண்டு போய்விட்டாலோ என்ன செய்வதென்று பயந்தான்.

பணத்தை செலவு செய்வதற்குக் கூட நேரமில்லை. இத்தனை பணத்தை வைத்து என்ன செய்வது என்ற முடிவிலா கற்பனையே தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தது. அடுத்த நாள் காலையில் நான்கு பெட்டிகள் பணம் வந்ததும், எடுத்து வைத்துவிட்டு, உடனடியாக புது வீட்டினையோ அல்லது குடோனையோ வாங்கிவிட வேண்டும் என்று முடிவெடுத்திருந்தான்.

அடுத்த நாள் விடிந்தது. லாஜிக்கின்படி இன்று நான்கு பெட்டிகளில் பணம் வரவேண்டும். எட்டு மணிக்கே கதவைத் திறந்து வைத்துவிட்டான். ஒன்பது மணியானதும் பணப்பெட்டிகள் வரத்தொடங்கின. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு (இந்த இடத்தில் புள்ளி வைக்க வேண்டும். ஆனால், கமாதான் போடவேண்டியுள்ளது), ஐந்து, ஆறு என தொடர்ந்து வந்துகொண்டே இருந்தன. பணத்தின் மீதிருந்த ஆசை இப்பொழுது கொஞ்சம் பயமாக மாறத் தொடங்கியது. பின்னே, இருப்பதற்கே இடமில்லாத அளவில் அவனது வீடு பணப்பெட்டிகளால் நிரம்பிக்கொண்டிருந்தது.

வீட்டை விட்டு வெளியே ஓட முயற்சித்தான். ஆனால், பத்து இருபது பணப் பெட்டிகள் வழியை மறித்துக்கொண்டு உள்ளே வருவதற்கே வாசலருகில் நெருக்கியடித்துக்கொண்டு சிரமப்பட்டுக்கொண்டிருந்தன. வெளியே போக முடியாது, கதவை அடைக்கவும் முடியாது. வீடு முக்கால் பாகம் நிரம்பிவிட்டது. ஓட்டைப் பிரித்துக்கொண்டு வெளியில் குதித்து ஓடிவிடலாம் என்று நினைத்து கூரையில் ஓட்டினை உடைத்தபோது, அந்த ஓட்டையின் வழியாகவும் பணப்பெட்டி ஒன்று உள்ளே வந்தது.

எப்படித் தப்பிப்பது?
நண்பர்களை அழைக்கலாம்; அல்லது தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினரின் உதவியைக் கோரலாம்.இரண்டில் எதைச் செய்வது என்று இரண்டு விரலைக் காட்டி ஒன்றைத் தொட்டு முடிவெடுக்கும் ஜாலியான நிலையில் அவனில்லை என்பது முக்கியமானது.

எதையாவது செய்யலாம் என்று செல்போனை எடுத்தபோது அது வேலை செய்யவில்லை. அவன் ஒன்றைக் கவனிக்க மறந்துபோயிருந்தான். அந்த மந்திர சக்தி வேலை செய்ய ஆரம்பித்ததிலிருந்து அந்த வீட்டிலிருந்த எலக்ட்ரானிக் பொருட்கள் எல்லாமே செயலிழந்து விட்டிருந்தன.

இனி, அந்த மந்திர சக்தியினை இல்லாமல் ஆக்கினால்தான் தப்பிக்க முடியும் என்று நினைத்தவன், உடனடியாக அந்த மந்திரக் கட்டத்தினைக் கொண்ட அட்டையினை எடுத்துக் கொண்டு ஜன்னலருகே ஓடினான். வெளியில் வீசி விட்டால் பிரச்னை ஓவர் என்பது நம்பிக்கை. ஜன்னலைத் திறந்தான்; ஜன்னலுக்கு வெளியேயும் எண்ணற்ற பணப்பெட்டிகள் குவியலாக்க கிடந்தன. கொஞ்சம்கூடக் கருணையே இல்லை.

வெளியில் வீசா விட்டால் என்ன? கிழித்துவிட்டாலே போதுமே? அதைத்தான் செய்தான். உடனே அங்கிருந்த பணப்பெட்டிகள் எல்லாம் அந்தக் காகிதம் எத்தனை துண்டுகளாகக் கிழிக்கப்பட்டதோ அத்தனை துண்டுகளாகப் பிரிந்தன. ஆனால், எல்லாமே உள்ளேயே இருந்தன. வெளியில் இருப்பவை வெளியிலேயே. இப்பொழுது வீட்டில் இருந்த சின்னச் சின்ன ஓட்டைகளின் வழியாகவும் கிழிந்துபோன பணப்பெட்டியின் துண்டங்கள் வரத் தொடங்கின.                         

பணத்தின் மீதிருந்த ஆசை இப்பொழுது பயமாக மாறத் தொடங்கியது.  இருப்பதற்கே இடமில்லாத அளவில் அவனது வீடு பணப்பெட்டிகளால்  நிரம்பிக்கொண்டிருந்தது.அந்த மந்திர சக்தி வேலை செய்ய ஆரம்பித்ததிலிருந்து அந்த வீட்டிலிருந்த எலக்ட்ரானிக் பொருட்கள் எல்லாமே செயலிழந்து விட்டிருந்தன.