சாலக்குடியின் செல்ல மகன்!



கலாபவன் மணி இறந்துவிட்டார் என்ற செய்தியை இன்னும் கூட மலையாள மண்ணால் நம்ப முடியவில்லை. ஒரே சமயத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் காமெடியனாகவும் திரையுலகில் கோலோச்சிய மகா நடிகன்.

அதையெல்லாம் தாண்டி, அற்புதமான மனிதன். ‘கலாபவன்’ என்ற கலைக்குழு மல்லுவுட்டில் பல கலைஞர்களை உருவாக்கியிருக்கிறது. ஆனால், நன்றியுணர்ச்சியுடன் அந்தப் பெயரை தன்னோடு நிரந்தரமாக வைத்துக் கொண்டவர் மணி. அவரின் நற்பண்புக்கு இது நல்ல அடையாளம்! அவரது மரணத்தைச் சூழ்ந்திருக்கும் மர்மம் ஒருபக்கம் பரபரப்பு கிளப்பினாலும், மணியின் நெகிழ்ச்சி பக்கங்களைத் திருப்பிப் பார்க்க யாரும் தவறவில்லை.

வறுமை... பசி...  இவைதான் மணியை வளர்த்தெடுத்தன. பாரம்  சுமக்கும் கட்டிடத் தொழிலாளியாக,  கூலியாக, தென்னை மரம் ஏறுபவராக, ஆட்டோ டிரைவராக, எப்படி எப்படியோ இவரை அலைக்கழித்தது வாழ்க்கை. அங்கிருந்து மேலேறி வந்தவர். ‘‘பத்தாவது பாஸாகவில்லை... நான் ஹீரோவாக  நடித்த படத்தின் பெயர், ‘உலகநாதன் ஐ.ஏ.எஸ்.’ ’’  - மணி தன்னைப் பற்றி தானே அடித்துக்கொள்ளும் ‘ஜோக்’ இது.

கலாபவன் மணியின் மனைவி  நிம்மி,   கால்நடை மருத்துவர். ஒரே  மகள், லட்சுமி. சினிமாவில் எத்தனை உயரம் தொட்டாலும் பழைய வாழ்வை மறக்காத பண்பு மணியிடம் உண்டு. 2011 ஓணம் பண்டிகையின்போது  ஆயிரம் பழங்குடியினரை அழைத்து தன் வீட்டில் விருந்து கொடுத்தார். அதே ஆண்டில், ‘சாலக்குடி மார்க்கெட்டில்  குப்பைக் கூளம்’ என்று பத்திரிகைச் செய்தியைப் பார்த்ததும் தன் நண்பர்களுடன் சேர்ந்து  களத்தில் இறங்கி, அங்காடி முழுவதையும்  சுத்தம்   செய்தார்.

நடித்து  முடித்து மேக்கப்பைக்  கலைக்கும்போதே  தான்  ஒரு  நடிகர்  என்பதையும்  மறந்து  விடுபவர் மணி. சாலக்குடியில் சாலையோர டீக்கடையில் அவர் சாமானியராக டீ குடிப்பதைப் பார்க்க முடியும்.

முன்பு தான்  ஓட்டிய  ஆட்டோவை  இன்றும் பொக்கிஷமாக  வீட்டில்  நிறுத்தி வைத்திருக்கிறார். ஷூட்டிங் இல்லாத சமயங்களில், தனது நண்பர்களான ஆட்டோ டிரைவர்களை  அழைத்து மணிக்கணக்கில்  பேசி மகிழ்வார். நண்பர்கள்  விடைபெறும்போது  ஒரு நாள்  ஆட்டோ ஓட்டினால்  கிடைக்கும் வருமானத்தைவிட அதிகமான  தொகையைத் தந்து வழியனுப்பி வைப்பாராம்.

நேரம் கிடைக்கும்போதெல்லாம் முதியோர் இல்லங்களில் இருப்பார். ‘‘இந்தப் பெண்களின் முகங்களில்  என் தாயைப் பார்க்கிறேன்...’’ என்பார். ‘‘மிமிக்ரி கலைஞர்கள் எல்லோரும்  நடிகர்கள் ஆகி முன்னேறுவதில்லை.

அதனால் நலிந்த  மிமிக்ரி கலைஞர்களுக்கு நிதி உதவி செய்ய கலை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என கலாபவன் மணி அழுத்தம் கொடுத்தார். அதன்படி ஒரு  கோடி ரூபாய் வரை   நிதி திரட்டப்பட்டது!’’  என்கிறார்  இயக்குநர் சித்திக்.

தனது சொந்த ஊரான சாலக்குடியில் பலருக்கும்  பண உதவி  செய்திருக்கும்  மணி, மருத்துவமனை, காவல் நிலையம், பள்ளிகளுக்கு  கட்டிட உதவி செய்திருக்கிறார்.  இவரது     செல்வாக்கைப் பார்த்து இடது கம்யூனிஸ்ட் கட்சி  2016 சட்டசபைத் தேர்தலில்  சீட்  தர  முன்வந்திருந்தது. அதை  ஏற்றுக்கொள்ள   சாலக்குடியின் செல்ல மகன் எங்கே..?

மணியின் வீட்டில்  கூட்டம்  இருந்தால்,  ‘மணி ஷூட்டிங்  போகவில்லை... வீட்டில்  இருக்கிறார்’  என்று அர்த்தம்.  அவர்  வீட்டில்  இருக்கிறார்  என்று  தெரிந்தால்,  அவரைப் பார்க்க,  பேச,  உதவி  கேட்க  சாலக்குடி வாசிகள் வந்து குவிவார்கள். மார்ச்  ஏழு  அன்று,   மணியின்  சாலக்குடி  வீட்டில்  திரளான  மக்கள்  கூட்டம். 

உதவி  கேட்பதற்காக  அல்ல...  தங்கள்  மனம்  கவர்ந்த  ‘சகலகலா’  மணிக்கு  இறுதி மரியாதை  செலுத்துவதற்காக!நடிகர்கள்  இப்படியும் பெயர் சொல்ல வாழலாம்   என்பதற்கு  கலாபவன் மணி  ஒரு  முன்னுதாரணம்!

- பிஸ்மி பரிணாமன்