பிச்சைக்காரன்



‘ரியல்’ பணக்காரர் விஜய் ஆன்டனி, தன் தாய் உடல்நலம் பெறுவதற்காக ‘ரீல்’ பிச்சைக்காரனாக அவதாரமெடுத்து, உலகத்தை எதிர்கொண்டு அடையாளம் தேடுவதே கதை!ஃபாரின் ரிட்டர்ன் விஜய் ஆன்டனி, தன் தொழிற்சாலையில் அம்மாவுடன் இருக்கும்போது ஏற்படுகிற விபத்தில், அம்மா கோமா நிலைக்குச் சென்றுவிட, நிலைகுலைகிறார்.

அம்மாவுக்காக சாமியார் ஒருவரின் ஆலோசனைப்படி 48 நாட்கள் அடையாளம் அறியாது பிச்சைக்காரனாக வாழ்கிறார். அந்த இடைவெளியில் அவருக்குக் கிடைத்த அனுபவங்கள், காதல், பகை... இறுதியில் அவர் அம்மா சுயநினைவுக்குத் திரும்பினாரா என்பதே சென்டிமென்ட் பேக்டு ஆக்‌ஷன் கதை.

பேய்களும், காமெடியும் ரூல் பண்ணுகிற நடப்பு சினிமாவை சென்டிமென்ட்டில் பின்னி எடுத்து ரூட் மாற்றியிருக்கிறார்கள். கிளாஸ் டைரக்டர் சசிக்கு இது பக்கா கமர்ஷியல் அவதாரம். படம் துவங்கிய அடுத்தடுத்த நிமிடங்களிலேயே பிரதான கதாபாத்திரங்களை ‘நச் நச்’சென அறிமுகப்படுத்தி, நம்மைப் படத்திற்குள் இழுப்பதில் வெற்றி பெறுகிறார் சசி.

‘பிச்சைக்காரன்’ ஆவதற்குரிய நிபந்தனைகளை களை கட்ட வைப்பது பரபரப்பு. தனது தோற்றத்திற்கு ஏற்ற ஆக்‌ஷன் கதையில், அதிகம் பேசாமல் சட்சட்டென முடிவெடுத்துக் காரியம் சாதிக்கும் நேர்த்தியில் விஜய் ஆன்டனி ஆஹா! அம்மாவின் அண்மையை வேண்டும் இடங்களிலும், பிச்சைக்காரனாகவும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் ஆன்டனி. படத்தின் ஆரம்பக் காட்சிகளிலேயே பின்பாதிக்கான முடிச்சுக்களைப் புதைத்து வைத்திருக்கும் சசியின் இயக்கமும் பெரும் பலம்.

பிச்சைக்காரர்களின் உலகத்தில் பயணம் செய்யப்போகிறார்கள், அவர்களின் அசல் வாழ்க்கையை முன்வைப்பார்கள் எனப் பார்த்தால் அப்படியெல்லாம் எதையும் தலையில் ஏற்றிக் கொள்ளவில்லை. கதை முழுக்க முழுக்க விஜய் ஆன்டனியைச் சுற்றியே செல்கிறது. பிச்சைக்காரனாக வாழ்கிறார் என்ற நம்பகத் தன்மையைக் கொண்டு வந்ததே மீதி வெற்றிக்குக் காரணமாகிறது.

ஆன்டனியின் உண்மை நிலை அறியாது அவரை முன்வைத்து நடக்கும் வேடிக்கைகள், ஆக்‌ஷன் காட்சிகள் சுவாரஸ்யம். தியேட்டரை விட்டு வந்தபிறகுதான் ‘இப்படி ஒன்று சாத்தியமா’ என்றெல்லாம் முட்டி மோதுகின்றன சந்தேகங்கள். ‘உள்ளே’ இருக்கும்வரை அப்படியான சந்தேகமே எழாமல் அசரடிக்கிறது சசியின் கைவண்ணம். ஆன்டனியின் உடன் இருக்கும் பிச்சைக்காரர்களில் ‘கருப்பசாமி குத்தகைதாரர்’ மூர்த்தியின் டயலாக்ஸ் அத்தனையும் பெரிய ரிலாக்ஸ்.

சாதனா டைடஸ்... கிளாமரில் மிஞ்சாமல் பக்கத்து வீட்டுப் பெண் மாதிரி அடக்க ஒடுக்க தோற்றம். யார்தான் இந்த விஜய் ஆன்டனி என்று புரிய முடியாமல் தவிக்கும்போதும், உருகும்போதும், கலங்கும்போதும் நிஜமாகவே ஸ்கோர்! கார் டிரைவர் சிவதாணு, முத்துராமன் ஆங்காங்கே நினைவில் நிற்கிறார்கள்.

பிச்சைக்காரனாக வாழ ஆரம்பிக்கிற முதல் நாளில் பசியில் துடிப்பது தவிர, அடுத்த நாளிலிருந்து அவருக்கு எந்தக் கஷ்டமும் இல்லையே... ஏன்? அவர் ஜாலியாக வலம் வருவதைப் பார்த்தால் நமக்கே ‘அம்மா தாயே’ என கை ஏந்தலாம் போலிருக்கிறதே! அடிக்கொரு தரம் விஜய் ஆன்டனி சண்டைக்குத் தயாராவது கொஞ்சம் அலுப்புத் தட்டுகிறதே!

ஹீரோ விஜய் ஆன்டனி பின்னணி இசையிலும், ஒளிப்பதிவாளர் பிரசன்னகுமார் ஒளிப்பதிவிலும் கடும் உழைப்பைக் கொட்டியிருப்பது ஆக்‌ஷன் படத்திற்கு டெம்போவைச் சேர்க்கிறது.நம்பகமான திரைக்கதையில் ஈர்த்துவிடுகிறான் ‘பிச்சைக்காரன்’!

- குங்குமம் விமர்சனக் குழு