உயிரைக் குடிக்குமா பன்னாட்டு குளிர்பானங்கள்?



ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

கேரளத் திரையுலகம் கடந்த வாரத்தில் இரண்டு பெரிய ஆளுமைகளை இழந்து விட்டிருக்கிறது. நடிகர் கலாபவன் மணி, இயக்குனர் ராஜேஷ் பிள்ளை. இருவருமே கல்லீரல் பாதிப்பால்தான் இறந்திருக்கிறார்கள். கலாபவன் மணியைக் குடித்தது மது. ராஜேஷ் பிள்ளையின் உயிரைக் குடித்தது? வேறு எதுவுமில்லை, குளிர்பானம்தான்!

ஆமாம்... அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. தாகத்துக்கு தண்ணீர் குடிப்பதையே மறந்து, பாட்டில் பாட்டிலாக நம் இளைஞர்கள் வாங்கிக் கவிழ்த்துக் கொள்கிற பன்னாட்டு குளிர்பானங்கள்தான் ராஜேஷ் பிள்ளையின் உயிரைப் பறித்தது என்கிறார்கள் மருத்துவர்களும், ராஜேஷை நன்கறிந்த நண்பர்களும்.

‘ஹ்ருதயத்தில் சூஷிக்கான்’ என்ற படம் மூலம் அறிமுகமானவர்  ராஜேஷ். ‘டிராபிக்’ படம் அவருக்கு பெரும் வெளிச்சம் தந்தது. அந்தப் படத்தின் ரீமேக்தான், தமிழில்  வெளியாகி கவனம் ஈர்த்த ‘சென்னையில் ஒரு நாள்’. நுரையீரல் சார்ந்த ‘லிவர் சிரோசிஸ்’ நோயால் பாதிக்கப்பட்டிருந்த ராஜேஷ், அவ்வப்போது அதற்காக சிகிச்சை எடுத்து வந்தார்.

அவர் இயக்கிய ‘வேட்டா’ திரைப்படம் வெளியான அடுத்த நாளே அவர் உயிர் பிரிந்து விட்டது. பொதுவாக மது அருந்துபவர்களுக்கே ‘லிவர் சிரோசிஸ்’ பாதிப்பு ஏற்படும். ராஜேஷுக்கு குடிப்பழக்கமோ, புகைப்பழக்கமோ இல்லை. ஆனால் குளிர்பானங்களுக்கு கிட்டத்தட்ட அடிமையாகவே இருந்திருக்கிறார். படப்பிடிப்பு நாட்களில், பிற உணவுகளே எடுத்துக் கொள்ளவே மாட்டாராம். 20 முதல் 30 பாட்டில் வரை குறிப்பிட்ட குளிர்பானத்தை அருந்துவாராம். அதுதான், அவரது கல்லீரலை பாதித்து மரணத்திற்கு இட்டுச்சென்று விட்டது என்கிறார்கள் அவரது நண்பர்கள்.

பன்னாட்டு குளிர்பானங்களைக் குடிப்பதை கௌரவமாகக் கருதுகிறார்கள் இளைஞர்கள். பிரியாணி தொடங்கி பீட்சா வரை எது வாங்கினாலும் கூடவே குளிர்பானங்களையும் சேர்த்து விற்கிறார்கள். வீட்டு குளிர்சாதனப் பெட்டிகளை எல்லாம் இந்த குளிர்பானங்களே ஆக்கிரமித்திருக்கின்றன. நடிகர்களும், விளையாட்டு வீரர்களும் ‘வாங்கிக் குடியுங்கள்... வாங்கிக் குடியுங்கள்’ என்று நுரை பொங்கப் பொங்க விளம்பரம் செய்கிறார்கள். கொஞ்சம் கூட குற்ற உணர்வே இல்லாமல் குழந்தைகளுக்கும் வாங்கி ஊற்றுகிறார்கள்.

கிட்டத்தட்ட நாடே அக்குளிர்பானங்களுக்குள் மூழ்கிக் கிடக்கும் நிலையில், ராஜேஷ் பிள்ளையின் மரணம் சொல்லும் செய்தி உண்மைதானா? குளிர்பானங்கள் உயிரைப் பறிக்குமா? ‘‘நிச்சயம் மதுவுக்கு இணையான ஆபத்து பன்னாட்டு குளிர்பானங்களில் உள்ளது’’ என்று அதிர்ச்சியூட்டும் மருத்துவர் புகழேந்தி, ‘‘உலகத்தையே ஆட்கொண்டு ஆதிக்கம் செலுத்தக்கூடிய இரண்டு பிராண்டட் குளிர்பானங்களைப் பற்றி உலகம் முழுவதும் ஏராளமான ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. எல்லா ஆராய்ச்சி முடிவுகளுமே அபாய சங்கு ஊதுகின்றன. துளியளவும் உடம்புக்கு ஒவ்வாத, கேடு விளைவிக்கக்கூடிய ரசாயனங்களின் கரைசல்தான் அந்த பானங்கள். ராஜேஷ் பிள்ளையின் மரணத்துக்கு அவையே காரணம் என்பதில் என்னளவில் எந்த சந்தேகமும் இல்லை...’’ என்கிறார் உறுதியாக.

‘‘இந்தக் குளிர்பானங்களில் அளவுக்கு மீறி செயற்கை சர்க்கரைகள் சேர்க்கப்படுகின்றன. அந்த சர்க்கரையால், குளிர்பானத்தைக் குடித்தவுடன் எனர்ஜி கிடைப்பதைப் போல தெரியும். படிப்படியாக அந்த சர்க்கரை கொழுப்பாக மாறி ஈரல் மற்றும் உள்ளுறுப்புகளில் படியும். ஈரல் வீங்கி Non-alcoholic fatty liver disease எனும் நோய் வரும். இன்னும் குடிக்கக் குடிக்க கொழுப்பின் அளவு அதிகமாகி ‘சிரோசிஸ்’ நிலைக்கு வந்துவிடும்.

இதுமட்டுமல்ல. ‘மெட்டபாலிக் சிண்ட்ரோம்’ எனப்படும் ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய்களும் படிப்படியாக உடம்பைக் கவ்விக்கொள்ளும். இன்று பெரும்பாலானவர்களை பீடித்திருக்கும் உடல்பருமன் பிரச்னைக்கு முக்கியக் காரணம், இதுமாதிரியான குளிர்பானங்கள்தான். பன்னாட்டு குளிர்பான நிறுவனங்கள் நாட்டுக்கொரு தர அளவுகோல் வைத்துள்ளன.

அமெரிக்கா போன்ற நாடுகளில், ‘என்னென்ன கலக்கப்பட்டுள்ளன, அதனால் என்னென்ன பாதிப்புகள் வரும்’ என்பது வரை நுகர்வோருக்கு விளக்கிச் சொல்லியே விற்பனை செய்யமுடியும். மேலும் உணவு விஷயத்தில் கண்காணிப்புகளும் அதிகம். அதுமாதிரி நிலை இங்கில்லை. யாரும் எந்தக் குப்பை உணவையும் இங்கே விற்கலாம்.

கண்காணிக்க வேண்டிய துறைகளில் ஏகப்பட்ட ஆள் பற்றாக்குறை. ஆய்வு நிறுவனங்களிலும் நேர்மையில்லை. ஒரு நிறுவனம், ‘விஷம்’ என்கிறது. இன்னொரு நிறுவனம், ‘விஷமில்லை... விற்கலாம்’ என்கிறது. யாரேனும் ஒரு சிலரை கவனித்தால் இங்கே எந்த குற்றத்தையும் செய்யலாம். அந்த தைரியத்தில்தான் உயிரைப் பறிக்கும் ரசாயனங்களை தைரியமாக குளிர்பான நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன’’ என்கிறார் டாக்டர் புகழேந்தி.

சமூக சமத்துவத்துக்கான மருத்துவர் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத், ‘‘கோடிக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு திரைப்பட நடிகர்களும், விளையாட்டு வீரர்களும் விபரீதங்களை மக்களுக்கு பரிந்துரைக்கிறார்கள். பன்னாட்டு குளிர்பானங்கள் இளைஞர்களை உளவியல் அடிமைகளாக மாற்றியிருக்கின்றன. தரமற்ற, ஆபத்து நிறைந்த ரசாயனக் கலவையை விற்று பல கோடி டாலரை லாபமாக அள்ளிச்செல்கின்றன அந்நிறுவனங்கள். நம் தட்பவெப்பத்துக்கு ஒத்துக்கொள்ளாத, உடம்பு ஏற்றுக்கொள்ளாத அவற்றைக் குடிப்பது ஸ்டேட்டஸாக மாறியிருக்கிறது.

இயக்குனர் ராஜேஷ் பிள்ளையின் மரணம் ஒரு எச்சரிக்கை. இதுகுறித்து தீவிரமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்’’ என்கிறார். 
இயக்குனர் ராஜேஷ் பிள்ளையின்  மரணத்திற்கு குளிர்பானங்களே காரணம் என்று நடிகர் கமலஹாசனும்  வழிமொழிந்திருப்பது கவனிக்கத்தக்கது. ஒரு படைப்பாளியின் உயிர்  பறிபோயிருக்கிறது. இனியாகிலும் பணத்துக்கு ஆசைப்பட்டு இதுமாதிரி விஷங்களை  விளம்பரப்படுத்துவதை நடிகர்களும், விளையாட்டு வீரர்களும் தவிர்க்க  வேண்டும்.

‘‘உலகெங்கும் குறிப்பிட்ட நிறுவனங்களின் குளிர்பானங்களைக் குடிப்பதால் ஆண்டுதோறும் இறப்பவர்கள் எண்ணிக்கை 1.80 லட்சம். குளிர்பானம் அருந்தும் பழக்கம் உள்ளவர்களில் 1.3 லட்சம் பேர் சர்க்கரை நோயாலும், 44 ஆயிரம் பேர் இதய நோய்களாலும், 6 ஆயிரம் பேர் புற்றுநோயாலும் இறப்பது தெரிய வந்துள்ளது. இவற்றில் இருக்கும் ரசாயனங்கள் மரபணுவை பாதிக்கக்கூடியவை என உலகளாவிய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மதுவாவது, ‘வீட்டுக்கு, நாட்டுக்கு, உயிருக்குக் கேடு’ என்ற விளம்பரத்தோடு குறிப்பிட்ட இடங்களில்தான் விற்கப்படுகிறது.

ஆனால் குளிர்பானங்கள் நம் தெருவுக்குள் கடைக்குக் கடை தாராளமாகக் கிடைக்கிறது. குழந்தைகளுக்கும் இதை பழக்கப்படுத்தியிருக்கிறோம். இளநீர், பழரசங்கள், கூழ், பானகம், மோர் என உடம்புக்கு நன்மை தரும் பல குளிர்பானங்கள் நம்மிடமே இருக்கின்றன. அவற்றையெல்லாம் தவிர்த்து விட்டு மெல்லக் கொல்லும் விஷங்களைக் குடித்துக்கொண்டிருக்கிறது நம் தலைமுறை... சுய விழிப்புணர்வு ஒன்றே இந்நிலையை மாற்றும்’’ என்கிறார் இயற்கை வளங்கள் பாதுகாப்பு செயற்பாட்டாளர் முகிலன்.

மதுவாவது, ‘வீட்டுக்கு, நாட்டுக்கு,  உயிருக்குக் கேடு’ என்ற விளம்பரத்தோடு குறிப்பிட்ட இடங்களில்தான்  விற்கப்படுகிறது. ஆனால் குளிர்பானங்கள் நம் தெருவுக்குள் கடைக்குக் கடை  தாராளமாகக் கிடைக்கிறது.

என்ன வரும்?

* குளிர்பானங்களில் இருக்கும் அளவுக்கு அதிகமான சர்க்கரை, உள்ளுறுப்புகளில் கொழுப்பாகப் படிகிறது. நுரையீரலில் படியும் கொழுப்பால் லிவர் சிரோசிஸ் (liver cirrhosis) எனப்படும் ஈரல் செல் பாதிப்பு நோய் வரலாம்.

* கொழுப்பு காரணமாக, உடல்பருமன் அதிகரிக்கும். ரத்த அழுத்தம், நீரிழிவு, இதயநோய் பாதிப்புகள் ஏற்படும் ஆபத்து உண்டு.

* பாஸ்பாரிக் அமிலம் புற்றுநோயை உருவாக்குவதற்கான ஊக்கியாக செயல்படும். குறிப்பாக ‘புராஸ்டேட்  கேன்சர்’ வரக்கூடும். 

* இதில் உள்ள அமிலத்தன்மை உடலில் உள்ள கால்சியத்தைக் கரைத்து ரத்தத்தில் சேர்க்கும். அதனால் எலும்புகள் பாதிக்கப்படும். ரத்தத்தில் கால்சியம் சேர்வதால் சிறுநீரகம் பாதிக்கப்படும். ஒரு கட்டத்தில் மூளையும் பாதிக்கலாம்.

* Caffeine அதிகம் இருப்பதால், தூக்கமின்மை, தலைசுற்றல், பசியின்மை, ஜீரணக் கோளாறுகள், உடல் சோர்வு ஏற்படலாம்.

* எலெக்ட்ரோலைட்ஸ் அளவு கூடுதலாக இருப்பதால் நரம்பு பாதிப்புகள் ஏற்படலாம். தசை தொடர்பான நோய்களும் வரலாம்.

* பற்களில் கறை உருவாகும். தாம்பத்யக் குறைபாடும் ஏற்படக்கூடும்.

* குளிர்பானம் கெட்டுப்போகாமல் தடுப்பதற்காக சேர்க்கப்படும் சோடியம் பென்சோயேட், குழந்தைகளை நேரடியாக பாதிக்கும். இது மரபணுக் கோளாறை ஏற்படுத்தி, நரம்பு தொடர்பான கடுமையான நோய்களை சிலருக்கு வரவழைக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

- வெ.நீலகண்டன்