36 வயதினிலே...ஈஸ்வரி !



ஒரு விளையாட்டில் சாம்பியன் ஆகவே கடுமையான முயற்சி / பயிற்சி தேவைப்படும். ஒன்றல்ல... இரண்டல்ல... மூன்று விளையாட்டுகள் அடங்கிய ஒரே போட்டியில் அசாத்திய சாதனை படைத்திருக்கிறார் ஈஸ்வரி ஆண்டியப்பன். 36 வயதும், இரண்டு குழந்தைகளுக்குத் தாய் என்பதும் இந்தச் சாதனையை எந்த விதத்திலும் தடுக்கவில்லை. நீச்சல், சைக்கிள், ஓட்டம் என மூன்றிலும் தனித்துவமாக மிளிரும் இந்த சூப்பர் லேடி, ‘அயன் ட்ரையத்லானில்’ பெண்கள் பிரிவை வெற்றிகரமாக நிறைவு செய்த முதல் இந்தியப் பெண்!



அதென்ன ‘அயன் ட்ரையத்லான்’? ஈஸ்வரியே சொல்கிறார்... ‘‘இது, நீச்சல், சைக்கிளிங், ஓட்டம்னு மூன்று விளையாட்டுகள் அடங்கிய போட்டி சார்... வெளிநாடுகள்ல ரொம்ப பிரபலம்! ஆனா, இந்தியாவுல வெப்பநிலை இதுக்கு சாதகமா இல்லாததால பெங்களூரு, கோவா, ஐதராபாத்னு சில இடங்கள்ல சின்ன அளவுல நடத்திக்கிட்டு இருக்காங்க. நம்ம சென்னையில மட்டும் முழு அயன் டிரையத்லான் போட்டி நடத்துறாங்க. இதுல, 3.9 கி.மீ தூரம் நீச்சல் அடிக்கணும். தொடர்ந்து, 180 கி.மீ சைக்கிளிங் போகணும்.

அப்புறம், 42.2 கிமீ ஓடணும். இதை, பெண்கள் 22 மணி நேரத்துல முடிக்கணும்ங்கிறது விதி. நான், 20 மணி, 3 நிமிட நேரத்துல முடிச்சு இந்தப் பட்டத்தை தட்டியிருக்கேன்!’’ என வியப்பில் ஆழ்த்துகிறார் ஈஸ்வரி. அதை விடவும் அதிக வியப்பைத் தருகின்றன அவர் தந்தை ஆண்டியப்பனின் வார்த்தைகள். ‘‘இப்படிப்பட்ட விளையாட்டுல என் மகளை ஈடுபட வச்சது, அவங்களை வாட்டி வதைச்ச ஆஸ்துமா நோய்தான்னு சொன்னா நம்புவீங்களா? ஆனா, அதுதான் நிஜம்!’’ எனத் துவங்குகிறார் அவர்.

‘‘எங்களுக்கு புதுக்கோட்டை மாவட்டம், விராய்சிலை கிராமம். ஈஸ்வரி, அப்புறம் அவ தம்பி ராமநாதன்... ரெண்டே பிள்ளைங்கதான். எனக்கு இருந்த ஆஸ்துமா பிரச்னை சின்ன வயசுலயே பிள்ளைகளுக்கு வந்துடுச்சு. மூச்சு விட சிரமப்படுவாங்க... அது சீராகணும்னா உடற்பயிற்சிகள் தேவை. அதனால வாக்கிங், பேட்மின்டன்னு விளையாட்டுல ஆர்வமாக்கினேன். இப்ப, விளையாட்டுதான் அவங்க ஆஸ்துமாவை குணமாக்கியிருக்கு!’’ என்கிறார் அவர் ஆசுவாசமாக.



‘‘பி.இ., எம்.பி.ஏ. படிச்சு முடிச்சதும் எனக்கு கல்யாணமாச்சு. கணவர் சொக்கலிங்கம் வங்கி அதிகாரி. பையன் அருணாசல கிருஷ்ணாவுக்கு 11 வயசு. பொண்ணு சாதனாவுக்கு 3 வயசு. குடும்பம், குழந்தைகள்னு ஆனபிறகு நானும் விளையாட்டை, உடற்பயிற்சியை மறந்துதான் போயிட்டேன். எடை 78 கிலோ வரை ஏறிடுச்சு. அப்பதான் என் மகனுக்கும் ஆஸ்துமா வந்து கஷ்டப்பட்டான்.

எங்க அப்பா எங்களுக்கு செய்தது போலவே நானும் அவனை ஸ்போர்ட்ஸ்ல ஈடுபடுத்த வேண்டியதை கடமையா உணர்ந்தேன். ஸ்கேட்டிங், நீச்சல், சைக்கிளிங்னு எல்லா இடத்துக்கும் அவனைத் தனியா அனுப்ப மனசில்லாம நானும் கூட போனேன். நானும் அதையெல்லாம் கத்துக்கிட்டேன். கொஞ்சம் கொஞ்சமா என் பையனுக்கு ஆஸ்துமா பிரச்னை சரியாச்சு. விளையாடும்போது நுரையீரல் விரிவடைஞ்சு இன்னும் ஆழமா அவனால சுவாசிக்க முடிஞ்சது. அப்படியே எனக்கும் தம்பிக்கும் ஆஸ்துமா இல்லாமலே போச்சு.

என் எடையும் 78ல் இருந்து 61 கிலோவாச்சு. ஆனா, அப்ப கூட ‘அயன் ட்ரையத்லான்’னு ஒரு விளையாட்டு இருக்குறது எங்களுக்குத் தெரியாது!’’ என்கிற ஈஸ்வரி, ‘வேளச்சேரி வைப்ரன்ட்’ என்ற விளையாட்டுக் குழுவில் இணைந்துதான் அயன் ட்ரையத்லானில் கலந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறார். அதன் நிறுவனர் அனில் சர்மாதான் இந்தக் குடும்பத்துக்கே ட்ரையத்லான் குருவாம்!

ஈஸ்வரியோடு கைகோர்த்துப் பேசுகிறார் தம்பி ராமநாதன்...
‘‘அக்கா பையனுக்காகத்தான் எல்லா விளையாட்டுக்குமே போனோம். அவன், 2014ல சின்ன அளவு ட்ரையத்லான் விளையாட்டுல கலந்துக்கிட்டான். அக்கா ‘சென்னை ட்ரெக்கிங் கிளப்’ நடத்துற ஒலிம்பிக் ட்ரையத்லான்ல சேர்ந்தாங்க. 1.5 கி.மீ நீச்சல், 40 கி.மீ சைக்கிளிங், 10 கி.மீ ரன்னிங்னு இது சின்ன லெவல் ட்ரையத்லான்தான். அதுவே ஆரம்பத்துல அக்காவால முடியல. தொடர்ந்து கடுமையான பயிற்சி எடுத்துக்கிட்டு இப்ப முழு ட்ரையத்லான்லயே ஜெயிச்சு வந்திருக்கா.

சைக்கிளிங்லயும் நாங்க படிப்படியா பல போட்டிகள்ல கலந்துக்கிட்டு, இப்ப 600 கி.மீ வரை சாதிச்சிருக்கோம். அதாவது, சென்னையில இருந்து திருச்சி சமயபுரம் வரை போய் திரும்புற போட்டி. இதனால, 2019ல ஃப்ரான்ஸ்ல நடக்கிற சைக்கிளிங் ஈவென்ட்ல கலந்துக்குற வாய்ப்பு கிடைச்சிருக்கு. இப்ப நீங்க எங்க வீட்டுல பார்க்குற ஷீல்டு, மெடல் எல்லாம் அடுத்தடுத்த வருஷங்கள்ல பல மடங்கா பெருகிடும்!’’ என்கிறார் அவர் சந்தோஷமாக!

‘‘இந்தியா சார்பா ‘அயன் ட்ரையத்லான்’ல கலந்துக்குற அளவுக்கு இந்த விளையாட்டு வளர்ச்சியடையலை. அந்தந்த நகரங்கள்ல இருக்கிற கிளப்கள்தான் நடத்திட்டு வர்றாங்க. எனக்கு இதுவே போதும். ஆனா, பெண்கள் நிறைய பேர் இந்த கேம் ஆட முன்வரணும்ங்கிறது என்னோட ஆசை. அவங்களுக்கு உதவ தயாராகவும் இருக்கேன். இந்த விளையாட்டு உடலை மட்டுமல்ல... மனசையும் ஃப்ரெஷ்ஷாக்கும்!’’ என்கிறார் ஈஸ்வரி உறுதியான குரலில்!

‘‘பெண்கள் நிறையப் பேர் இந்த கேம் ஆட முன்வரணும். இந்த விளையாட்டு உடலை மட்டுமல்ல... மனசையும் ஃப்ரெஷ்ஷாக்கும்!’’

- பேராச்சி கண்ணன்
படங்கள்: கிருஷ்ணமூர்த்தி