நினைவோ ஒரு பறவை



நா.முத்துக்குமார்
ஓவியங்கள்: மனோகர்


‘க’ for கதை கேளு!

அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைத்தாலும் மறைமுகமான விதிகள் பல இருப்பதை மெல்ல அறிவீர்கள். திறமைக்கு ஒரு ஆள், உழைக்க ஒரு ஆள், ப்ரமோஷன் வாங்கும்போது புறக்கணிக்கப்படுவதை ஏஷியன் அமெரிக்கன் என்பதால் ஓரளவுக்கு உங்களால் உணர முடியும். அப்படி உயர்பதவி கிடைத்தாலும் க்யூபிக்கிள்ஸில் உட்கார வைத்து சம்பளம் கொடுப்பார்களே தவிர, முக்கியமான பணி தர மாட்டார்கள் என்பதை உணரும்போது உங்களுக்கு சுமார் முப்பத்தொன்பது, நாற்பது வயதாகியிருக்கும்.
- மறுபடியும் எழுத்தாளர் சுஜாதா



நியூயார்க் விமான நிலையத்திலிருந்து ஹரியின் வீடு இருந்த நியூஜெர்ஸியின் ‘மெட்டாச்சின்’ பகுதிக்கு காரில் சென்று கொண்டிருந்தோம். ‘‘பயணம் எப்படிடா இருந்தது?’’ என்றான் ஹரி. பாம்பே டாக்ஸி தில்லுமுல்லு தொடங்கி, பார்த்தசாரதியின் அட்டகாசம் வரை சொல்லி முடித்தேன். ‘‘நாங்களும் இப்படி நிறைய தடவை ஏமாந்திருக்கோம்!’’ என்றான் சுதாகர். ‘‘விட்றா... All Indians are our brothers and sisters... ஏமாத்துனாலும் அவனும் நம்ம சகோதரன்தான்!’’ என்றேன். இருவரும் திரும்பி என்னை முறைத்தார்கள். ‘அடங்குடா’ என்பது போல் இருந்தது அந்தப் பார்வை.

‘‘நியூயார்க் இமிக்ரேஷன்ல எதுவும் பிரச்னை இல்லையே?’’ என்றான் சுதாகர். ‘‘ரெண்டு, மூணு கேள்விதான் கேட்டாங்க. நான் கூட ‘டெர்மினல்’ படம் மாதிரி இருக்குமோனு பயந்துட்டே இருந்தேன்!’’ என்றேன். ‘‘அது என்னடா ‘டெர்மினல்’ படம்? நான் பார்க்கலையே... என்ன கதைடா?’’ - ஹரி கேட்டான். சாலையில் ஒரு மான் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து அவசரமாக பிரேக் போட்டான் சுதாகர். நியூயார்க் நகரிலிருந்து புறப்பட்ட பத்தாவது நிமிடமே இருபுறமும் மரங்கள் அடர்ந்த காடுகளும், தெளிந்த நீரோட்டம் கொண்ட நதிகளுமாக இயற்கை எழில் மிரட்டுகிறது. (எத்தனைக் காலம்தான் எழில் கொஞ்சிக் கொண்டிருக்கும்?)

தூய்மையான காற்று; அகன்ற சாலைகள்; மான்களும், முயல்களும் கடந்து செல்லும் மனிதர்களற்ற வனாந்திரம் என நியூயார்க் மட்டுமல்ல... நான் சென்ற அத்தனை அமெரிக்க மாகாணத்திலும் இக்காட்சியைக் காண முடிந்தது. ‘உலகின் பாதிக்கும் மேற்பட்ட நாடுகளைக் குப்பைத் தொட்டி ஆக்கிவிட்டு, தங்கள் நாட்டை மட்டும் அமெரிக்கர்கள் சுற்றுச்சூழல் கெடாமல் பாதுகாக்கிறார்களே’ என்று எண்ணிக்கொண்டேன். வண்டி மீண்டும் கிளம்பியதும், ‘‘நீ ‘டெர்மினல்’ படத்து கதை சொல்லுடா!’’ என்றான் ஹரி.

ஏதோ ஒரு கதையைக் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் அல்லது சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் என்கிற ஹரியின் ஆர்வம் கல்லூரிக் காலத்திலிருந்து அப்படியே தொடர்வதை அறிந்து எனக்கு ஆச்சரியம் வரவில்லை. இந்தியா கதைகளின் ேதசம். பல நூற்றாண்டுகளாக நாம் கதை சொல்லியே வாழ்ந்து வந்திருக்கிறோம். சரித்திரக் கதை, ஆன்மிகக் கதை, மன்னர்கள் கதை, மிருகங்களின் கதை என இந்தியாவில்தான் எத்தனை விதமான கதைகளின் விதைகள் ஊன்றி வளர்ந்திருக்கின்றன. ஒருவேளை கதைகளின் வெளியில் நடமாடும் நிழல்கள்தான் இந்திய மனமோ!

சிறுவயதில் ஆயாவின் மடியில் சாய்ந்தபடி நானும் நிறைய கதை கேட்டிருக்கிறேன். ஆயாவின் சேலையிலிருந்து வீசும் வியர்வை வாசம், சமையலறை புகை வாசம், விபூதி வாசம் எல்லாம் கலந்து அந்தக் கதைகளுக்கு ஒரு அமானுஷ்யத் தன்மையை அளித்திருக்கின்றன. அந்தக் காலத்தில் ‘இளவரசி வானத்தில் பறந்தாள்’, ‘இளவரசன் பள்ளத்தாக்கில் குதித்தான்’ என்கிற அதீத கற்பனைகளை எல்லாம் ஆயா சொன்னதற்காகவே நாங்கள் நம்பியிருக்கிறோம்.

ஆயாக்கள் தூங்குவதற்காக கதை சொல்வார்கள். நான் ஹரிக்கு தூங்கிக்கொண்டே கதை சொன்னேன். ‘டெர்மினல்’ ஸ்பீல்பெர்க் இயக்கிய படம். டாம் ஹாங்ஸ் கதாநாயகனாக நடித்திருப்பார். க்ரகோஷியா என்ற சிறு நாட்டிலிருந்து டாம் ஹாங்ஸ் நியூயார்க் விமான நிலையம் வந்திறங்குவார். அவர் பயணம் செய்து வந்த நேரத்தில் அவரது நாட்டில் உள்நாட்டுக் கலகம் நடக்க, அவரது நாட்டுக்கான அங்கீகாரத்தை அமெரிக்கா நீக்கி விடும்.

இந்த சம்பவம் ஏதும் தெரியாமல், நியூயார்க் இமிக்ரேஷனில் இவர் பாஸ்போர்ட்டை நீட்டியதும் ‘அப்படி ஒரு நாடே இல்லை’ என்று அனுமதிக்க மறுப்பார்கள். திடீரென நாடற்றவர் ஆகிவிட்டதால், அவரால் விமான நிலையத்தைத் தாண்டி நியூயார்க் நகருக்குள்ளும் செல்ல முடியாது; திரும்ப சொந்த தேசத்துக்கும் போக முடியாது. ஆங்கிலம் தெரியாத இவரை கஸ்டம்ஸ் அதிகாரி ஒருவர் பாடாய் படுத்துவார். இவர் எவ்வளவோ விவாதித்தும் அந்த அதிகாரி இவரை உள்ளே விடமாட்டார்.

இவரது பாஸ்போர்ட்டையும் விமான டிக்கெட்டையும் பறிமுதல் செய்துவிடுவார். இவருடன் கூடவே ஏழெட்டு பேர் அனுமதி மறுக்கப்பட்டு நின்றிருப்பார்கள். ஏதோ ஒரு மூலிகைத் தைலம் கொண்டு வந்ததற்காக ஆப்ரிக்கத் தம்பதிகள்; பெயர் காரணமாக ஒரு இஸ்லாமியர் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம். வேறு வழியின்றி டாம் ஹாங்ஸ் அதிகாரிகள் அறியாமல் விமான நிலையத்திலேயே தங்கி, விமான நிலைய கழிவறையில் குளித்து, அதையே தனது வீடாக்கிக் கொள்வார். இது அந்த அதிகாரிக்கு பெரும் தலைவலியாகிவிடும்.

எப்படியாவது இவரை விமான நிலையத்திலிருந்து வெளியேறச் செய்து, திருட்டுத்தனமாக அமெரிக்காவில் நுழைய முயன்றதாக குற்றம் சுமத்தி நாடு கடத்தி விடலாம் என திட்டங்கள் போடுவார். இதனிடையே விமான நிலையத்தில் ஒரு கடையில் வேலைக்குச் சேரும் டாம் ஹாங்ஸிற்கு லுப்தான்ஸா விமானப் பணிப்பெண் ஒருவருடன் காதல் தொடங்கும். தன்னை ஒரு தொழிலதிபர் என்றும், பல நாடுகளுக்கு பயணிப்பவன் என்றும் சொல்லி அந்த விமானப் பணிப்பெண்ணுடன் தன் நட்பைத் தொடர்வார்.

இவரது நல்ல குணமும் புன்னகைக்கும் முகமும் பழகும் தன்மையும் விமான நிலையத்தில் உள்ள அத்தனை தொழிலாளர்களுக்கும் பிடித்துவிடும். அவர்கள் அனைவரும் சேர்ந்து போராட்டம் நடத்தி ஒரு வழியாக அந்த அதிகாரி இவரை நியூயார்க் நகருக்குள் அனுமதிப்பார். விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும் டாம் ஹாங்ஸ் ஒரு டாக்ஸியைப் பிடித்து நியூயார்க் நகரிலிருக்கும் ஒரு ஹோட்டலுக்கு போகச் சொல்வார். அந்த விடுதியின் நடன அறையில் ஒருவர் சாக்ஸபோன் வாசித்துக் கொண்டிருப்பார்.

டாம் ஹாங்ஸ் அவரிடம் சென்று, ‘‘எங்க அப்பா உங்க இசைக்கு ரசிகர். உங்ககிட்ட ஆட்டோகிராஃப் வாங்கணும்னு சாகும்வரை சொல்லிக்கிட்டே இருந்தார். அவருக்காக ஒரு ஆட்டோகிராப் ப்ளீஸ்!’’ என்பார். ஆட்டோகிராஃப் வாங்கி முடித்ததும் வெளியே வந்து டாக்ஸியைப் பிடித்து ‘‘நியூயார்க் விமான நிலையம் போ!’’ என்பார். அவரது பயணத்தின் நோக்கமே அதுதான். அத்துடன் படம் முடியும். ‘‘செம படம்டா, உடனே பார்க்கணும்!’’ என்றான் ஹரி.



‘‘படம் பார்த்தின்னா எந்த ஏர்போர்ட்டுக்கும் போகமாட்டே... அவ்வளவு துல்லியமா காட்டியிருப்பார் ஸ்பீல்பெர்க்!’’ என்றேன். ஹரியின் வீடு வந்து சேர, வாசலுக்கே வந்து வரவேற்றார் ஹரியின் மனைவி உமா. ஹரியும், உமாவும் காதல் திருமணம் செய்தவர்கள். செங்கல்பட்டிலிருந்து சூளைமேட்டிற்கு தொடர்வண்டியில் வந்து நுங்கம்பாக்கத்தில் ஒரு கணிப்பொறி மையத்தில் உமா படிக்க, அதே மையத்தில் படித்த ஹரிக்கும், உமாவிற்கும் இடையே காதல் தன் சிக்குபுக்கு எஞ்சினுடன் ஓடிக்கொண்டிருந்த காலம் அது. இவர்களின் புகைவண்டி காதலுக்கு நானும் சில வேளைகளில் கடிதம் சுமந்திருக்கிறேன்.

உமா, பிராமணப் பெண் என்றாலும் எனக்காக ஏதேதோ புத்தகங்களைப் பார்த்து சிக்கன் சமைத்திருந்தார். ‘‘எங்க வீட்ல ஃபர்ஸ்ட் டைம் இப்பதான் நான்-வெஜ் சமைக்கிறோம். அதுவும் நீ வர்றேன்னு!’’ என்றான் ஹரி. ‘அய்யரு பொண்ணு மீன் வாங்க வந்தா லவ் மேரேஜுனு தெரிஞ்சிக்கோ’ என்று ‘ரன்’ படத்தின் ‘தேரடி வீதியில்’ பாடலில் நான் எழுதிய வரிகள் நினைவிற்கு வந்தன. ஹரியின் பிள்ளைகள் இருவரும் தமிழ் பேசினால் புரிந்துகொள்கிறார்கள்.

ஆனால், பதில் ஆங்கிலத்தில் வருகிறது. தாய்மொழியில் தடுமாற்றமுள்ள அடுத்த தலைமுறையை அமெரிக்கா முழுவதும் பார்க்க நேரிட்டது. உணவு மேஜையில் அமர்ந்ததும் ‘‘We don’t want Indian food’’ என்று அவர்கள் அடம்பிடித்ததைப் பார்க்கையில் கல்லூரிக் காலங்களில் கையில் இருக்கிற காசை அவ்வப்போது எண்ணிப் பார்த்துக்கொண்டே கையேந்தி பவன்களில் நானும், ஹரியும் சாப்பிட்ட பசித்த காலங்கள் நினைவிற்கு வந்தன.

உணவு முடிந்து, ‘‘முட்டு அங்கிள்! குட் நைட்’’ என்று அவர்கள் விடைபெறுகையில் ‘முத்து’ என்கிற என் பெயரை முட்டுச்சந்தில் முட்டிவிட்டார்களே இந்தப் பிள்ளைகள் என்று அவர்களுக்காக ஆதங்கப்பட்டேன். கலாசாரம் என்னும் ஊஞ்சல் எங்களுக்கிடையே இடைவெளியோடு ஆடிக் கொண்டிருந்தது. எனக்காக ஒதுக்கப்பட்ட அறையில் உறங்கப் போகையில் ஹரியிடம் சொன்னேன், ‘‘நானா எழுந்திருக்கிற வரை எழுப்பாதே! அவ்வளவு தூக்கம் கண்களில் மிச்சம் இருக்கு!’’

‘‘சரிடா!’’ என்றான். ஆனால் நள்ளிரவு ஒரு மணிக்கெல்லாம் விழிப்பு வந்துவிட்டது. வரவேற்பறையில் குரல் கேட்க, வெளியே வந்தேன். ஹரியும், சுதாகரும் பேசிக் கொண்டிருந்தார்கள். ‘‘என்னடா தூக்கம் வரலையா?’’ என்றான் சுதாகர். ‘‘ஆமாடா’’ என்றேன். ‘‘அதுக்குப் பேருதான் ஜெட்லாக். ரொம்ப பசிக்குமே! இரு, தோசை ஊத்தறேன்.

நீ எழுந்து வருவேன்னு தெரியும். அதனாலதான் முழிச்சிக்கிட்டிருந்தோம்!’’ என்றான் ஹரி. அடுத்த நாள் காலை அவர்களுடனும் அரைத் தூக்கத்துடனும் அமெரிக்காவைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினேன். ‘உலகின் பாதிக்கும் மேற்பட்ட நாடுகளைக் குப்பைத் தொட்டி ஆக்கி விட்டு, தங்கள் நாட்டை மட்டும் அமெரிக்கர்கள் சுற்றுச்சூழல் கெடாமல் பாதுகாக்கிறார்களே’ என்று எண்ணிக் கொண்டேன்.

(பறக்கலாம்...)