ஆண்ட்ரியாவின் படத்தில் அஞ்சலி!



‘தரமணி’யின் டீஸர் வெளியாகி பரபரப்பு கூட்டியிருக்கிறது. இயக்குநர் ராம் வரிசையாக சிகரெட் புகைக்கிற ஆசுவாசத்தில் பேசுகிறார். ‘‘ஒரு கமென்ட் சொல்லியிருந்தேன், ‘அடங்க மறுக்கிற ஒரு நேர்மையான அரேபியக் குதிரையாய் ஆண்ட்ரியா’ என! அதற்கு எதிர்ப்பு கிளம்பிவிட்டது. அது உடலைக் குறித்தல்ல, மனதைக் குறித்த சொல். கொள்கைகள் கொண்ட, திடகாத்திரமான நம்பிக்கைகள் கொண்ட பெண் என்றுதான் அந்த வார்த்தை பொருளாகும். சரி, ‘தரமணி’ பார்க்கும்போது அது உடலைக் குறித்ததல்ல என்று புரிந்துவிடப் போகிறது!’’ - தடதடவெனப் பேசுகிறார் ராம். தமிழின் நம்பிக்கை தரும் இயக்குநர்களில் முக்கியமானவர்.



‘‘முழுதாகத் தயாரானபின் எப்படியிருக்கு ‘தரமணி’?’’
‘‘கொஞ்ச நாளைக்கு முன்பு நீர்நிலைகளோடு, நீர்ப்பறவைகளோடு இருந்த ஏரியா ‘தரமணி’. 2009 வரை கூட அப்படித்தான் இருந்தது. இந்த ஏழு வருஷத்திற்குள்ளாக மீனவர்களையும், நீர்ப்பறவைகளையும் காணவில்லை. செங்குத்தாக எழுந்த கட்டிடங்களில் வேலைகள் பெருகி, அதைத் தேடி மனிதர்கள் வந்தார்கள். இந்தியாவின் சாம்பிள் சிட்டியாக தரமணியைச் சொல்லிவிடலாம். நவீனமான யுவன், யுவதிகள் சேர்ந்து இருக்கிற இடமாகி விட்டது.

மாறிக்கொண்டு இருக்கிற ஆண்-பெண் உறவைப் பற்றியதுதான், ‘தரமணி’. இது ஏஜ் ஓல்டு ஸ்டோரிதான். சங்க காலத்திலிருந்து விடாமல் காதலைப் பேசி வருகிறோம். வாழ்க்கையை ஆச்சரியமாகப் பார்க்க வைக்கிறதும் காதல்தான்; அலுப்பா மாத்தறதும் காதல்தான். வாழ்க்கையைக் கொண்டாடச் சொல்வதும் காதல்தான். தொலைக்கச் செல்வதும் காதல்தான். இப்ப ஆண்-பெண் உறவு என்பது எமோஷனலா பிளாக்மெயில் செய்கிற காதலா மாறிக்கிட்டு இருக்கு. காமம் சார்ந்த, காதல் கலந்த இந்த உறவு என்பது பயங்கரமான கண்டிஷன்ஸ், நிறைய கட்டளைகள், அதிகபட்ச எதிர்பார்ப்புகள், ரொம்ப பொசஸிவ்னஸ் கூடியதாகிவிட்டது.

நம் ஆண்கள் துல்லியமாக இந்த ரிலேஷன்ஷிப்பை மெயின்டெயின் பண்றாங்க. இப்ப பெண்களுக்கான வாழ்க்கைச் சுதந்திரம் மாறிப் போச்சு. பணத் தேவைக்காக இன்னொருத்தரை சார்ந்து இருக்காத பெண்கள் பெருகி வந்தாச்சு. இந்தப் பெண்களை எப்படிப் புரிந்துகொள்வது என்பதில் ஆண்களுக்குப் பிரச்னை. காதலிக்கும் முன்பு ஒருவனாக இருப்பான். திருமணத்திற்குப் பின்பு அவனே வேறொருவன். கண்டிஷன்ஸ் மாறி, கட்டளைகளாக ஆகியிருக்கும். இந்த உறவுச்சிக்கல் பற்றி நான் சந்தித்த, அனுபவித்த, கேள்விப்பட்ட சம்பவங்களில் இருந்து தோன்றிய மையம்தான் இந்த ‘தரமணி’!’’



‘‘காதலோடு இளமையைச் சொல்கிற படமாக இருக்குமோ...’’
‘‘இதில் வயதைப் பொருட்படுத்தாத இளமை உண்டு, அடிக் கடலில் நீச்சலிடும் சாகசம் உண்டு, மலையிலிருந்து குதிக்கும் பைத்தியக்காரத்தனமும் உண்டு, அரவணைப்பும் உண்டு, அரக்கத்தனமான சண்டையும் உண்டு. அறம் தாண்டும் இச்சையும் பெரும் வன்மமும் கூட உண்டு. ஒரு வரியில் சொன்னால், இந்த நிஜம் நீங்கள் காதலித்தவரிடம் மன்னிப்பு கேட்கச் சொல்லும்; மன்றாடச் சொல்லும்; முத்தம் கொடுக்கச் சொல்லும்; கட்டிப் பிடித்து காமத்தைக் கடந்து போகச் சொல்லும். அடங்க மறுக்கிற பெண்ணாக ஆண்ட்ரியாவும் அவரைக் காதலிக்கிற சராசரி நோஞ்சான் வீரராக வசந்த் ரவியும் வருகிறார்கள்!’’

‘‘ஆண்ட்ரியா நடிப்பு இப்போதே பேசப்படுகிறதே..?’’
‘‘உண்மைதான். இதில் முக்கியமானவர் ஆண்ட்ரியா. ஆங்கிலோ இந்தியப் பெண்ணாக வருகிறார். அவர் பேசுகிற சில வார்த்தைகளை அசல் தமிழ்ப் பெண்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பது சந்தேகம். அதனால் சேஃபாக அவர் ஆங்கிலோ இந்தியப் பெண். அவரே தமிழ்ப் பெண்களின் மனநிலையைத்தான் முன் வைக்கிறார். இதில் வசந்த் ரவி கூவம் என்ற கிராமத்திலிருந்து கிளம்பி வந்த சராசரிப் பையன். இவர்களின் ப்ரியம், முரண், இச்சை, கோபம், வெறி, வன்மம்... இவை பற்றிப் பேசுவதே ‘தரமணி’.

16 முதல் 40 வயது வரை இருக்கும் அனைவரும் பயணப்பட்டு வரும் தினசரி வாழ்வுதான் இது. ஒரு பையன், ஒரு பெண்ணை லவ் பண்ணின மூணாவது நாள் கேட்கிறது, அந்தப் பெண்ணோட பாஸ்வேர்டைத்தான். இதில் அதை ஒரு காட்சியாகவே வச்சிருக்கேன். ‘இதுதான் என் பாஸ்வேர்டு, நோட் பண்ணிக்க’ எனக் கொடுப்பாள். ‘நான் கேட்கவே இல்லையே’ என சொல்வான். ‘நாலு நாள் கழிச்சு கேட்கத்தானே போறே’ என்பாள். இது முழுக்க ஆண் சார்பாகவோ பெண் சார்பாகவோ இருக்காது.

ஆனால், பார்க்கறதுக்கு ஒரு பொண்ணு பக்கத்துல இருந்து பேசுற மாதிரி தோணலாம். ஒரு படைப்பாளி நிச்சயம் ஒரு ஆணை சப்போர்ட் பண்ண முடியாது. பெண்கள் பக்கம்தான் அவன் சார்பு நிலை இருந்தாகணும். இதையெல்லாம் தாண்டி இந்த இரண்டு பேரும் எப்படிக் காதலிக்க முடியும் என்பதும், இதில் காதலைக் கண்டுபிடிப்பதும்தான் கதை!’’



‘‘மறுபடியும் அஞ்சலி...’’
‘‘அவருக்கு முக்கியமான கதாபாத்திரம். ‘கற்றது தமிழ்’ அறிமுகத்தை விட பலமடங்கு தூரம் வந்துட்டாங்க. தகப்பன் - மகள் உறவுதான் எங்களோடது. அடுத்து, ‘பேரன்பு’ படத்தில்கூட அவங்க நடிக்கிறாங்க. கதைக்கு உள்ளே புகுந்து உட்கார்ந்துகொள்ள அவரால் முடியும். இது ஆண்ட்ரியாவின் படம். வேறு வழியில்லாமல், அறிமுகப்படுத்தியவன் என்ற பாசத்திற்காக அஞ்சலி அருமையாக நடிச்சுக்கொடுத்திருக்காங்க!’’

‘‘யுவன் பாடல்களில் உங்களுக்குப் பெரிதும் கைகொடுப்பார்...’’
‘‘புது மகளுக்கு அப்பாவாகிவிட்டதால் முன்பைவிட அதீத அன்போடு உழைத்திருக்கிறார். கேட்கும்போதெல்லாம் அருமையான பாடல்களைத் தருகிற நா.முத்துக்குமார், இப்போதும் அப்படியே. தேனி ஈஸ்வர், ‘தங்கமீன்களு’க்கே ஒளிப்பதிவு செய்ய வேண்டியவர். உச்சபட்ச அழகியலோடு காட்சியோடு இழைந்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார்!’’

‘‘ ‘பேரன்பு’ மம்முட்டி எப்படியிருக்கார்?’’
‘‘ ‘பேரன்பு’ ஆரம்பித்தபோது எல்லோரும் பயமுறுத்தினாங்க. ‘எத்தனை படங்களில் நடிச்சிருக்கார்... அவர்கிட்ட இப்படித்தான் நடிப்பு வேணும்னு நெருக்கடி தரமுடியாது’னு சொன்னாங்க. 24 நாட்கள் எடுத்தோம். காலை 7 மணிக்கு வைக்கிற கேமரா கோணத்திற்கு காலை நாலரை மணிக்கு எழுந்து வரணும். சரியா டயத்திற்கு வந்து நிற்பார். முடிக்கிற வரைக்கும் இருப்பார். பாலுமகேந்திரா கூட இருக்கும்போது ஒரு கத்துக்கிற அம்சம் இருக்குமே... அது இவர்கிட்ட கிடைக்கும்.

சினிமாவுக்கு வரும்போதே அவர் ரசிகனா இருந்திருக்கேன். 358 படங்கள் நடிச்ச அனுபவம், உருவம், உயரம், அழகு, கல்யாண குணங்கள்னு பார்த்தால் கொஞ்சம் தள்ளி நிற்கத் தோணும். உள்ளங்காலே சும்மா ரோஜாப்பூ மாதிரியிருக்கும். அவரை வெறுந்தரையில வெறுங்காலால் நடக்க வச்சிருக்கேன். நிறைய அட்வைஸ் சொல்லுவார். ‘சிகரெட்டை நிறுத்தேன்’பார். ‘அடுத்த படம் எப்ப ஆரம்பிக்கலாம்’னு கேட்பார்.

‘உனக்கு என்ன கிஃப்ட் வேணும்’னு கேட்டுக்கிட்டே இருப்பார். கடைசியா, ‘உனக்கு ஒரு கேமரா வாங்கித் தர்றேன்’னு சொல்லியிருக்கார். தயாரிப்பாளர் தேனப்பனை மறக்க முடியாது. சொன்ன டைம்ல, என்ன வாக்குறுதி கொடுத்தாரோ அதைச் செய்வார். ஒரு இயக்குநருக்கான மரியாதை தருவார். ‘அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க’னு வள்ளுவர் சொல்வாரே... அதற்கு அவர்தான் உதாரணம்!’’

- நா.கதிர்வேலன்