மருது விமர்சனம்



பாட்டிக்கும், பேரனுக்கும் இடையிலான பேரன்பின் பிரதிபலிப்பே ‘மருது’. மிகப் பெரிய தாதா ராதாரவி... அவரின் அடிப்பொடி ஆர்.கே.சுரேஷ்... இரண்டு பேரும் இணைந்தே நகரின் பல அடிதடிகள், காலித்தனங்களை செய்கிறார்கள். அதே ஊரில் மூட்டை தூக்குகிற தொழிலாளி விஷால். சொந்தக்காரர்களை சந்திக்கிறாரோ இல்லையோ, ஊரின் பிரபல ரவுடிகளோடு எப்போதும் அரிவாள் சுழற்றுகிறார். உயிராக நினைக்கும் அப்பத்தாவிடமே ரவுடியின் ஆட்கள் சீண்ட, கண் சிவந்து மண் சிவக்க வைக்கிறார் விஷால். அப்பத்தாவைக் கொன்றவர்களை விஷால் பழி தீர்ப்பதே க்ளைமேக்ஸ்.



மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியாகவே மாறிவிட்டார் விஷால். ஓங்குதாங்காக அரை டிரவுசரும், மூட்டாத லுங்கியும், அழுக்கு பனியனுமாக அச்சு அசல் வார்ப்பு. கொஞ்சமும் சதைத்திரட்சி தெரியாமல் இறுகும் திமிறும் அதிரும் உடல்கட்டு. அப்பத்தாவிடம் செல்லம் கொஞ்சுவதும், நண்பன் சூரியிடம் கலாட்டா செய்வதும், திவ்யாவிடம் உருகுவதுமாக கொடுத்த வேலையில் சூப்பர்! அடர்த்தியும், அழுத்தமும் பெர்ஃபார்மன்ஸும் தேவைப்படும் இடத்தில் விஷாலின் நடிப்பு... அருமை!

வேகமும், கோபமும், சண்டையும் தட்டுப்படும் இடங்களில் எல்லாம் படத்தை அநாயாசமாகத் தூக்கி நிறுத்தும் காமெடி பில்லர் - ஃபில்லர் வேலை சூரிக்கு. ‘‘மருது இனத்துல சிங்கம், குணத்துல புலி!’’, ‘ஆம்பிளை துணைசாமி, பொம்பளை முதல்சாமி’ என வரிசையாக பன்ச் அடித்தபடி அவர் செய்யும் அலப்பறைகள்தான் படத்தின் மிகப் பெரிய ஆறுதல். காமெடியிலும் அவ்வப்போது தேற்றிக் கொண்டு, க்ளைமேக்ஸில் அருமையான குணச்சித்திர நடிகராகவும் மாறிவிடுகிறார் சூரி.

அவ்வப்போது ஹீரோயிசம் தலை காட்டினாலும் தரை டிக்கெட் வரை இறங்கி அடித்திருக்கிறார் விஷால். அதற்கு ஈடுகொடுத்து வில்லன் ஆர்.கே.சுரேஷும் பின்னி எடுக்கிறார். அவர் திரையில் தோன்றும்போதெல்லாம் பயம் பற்றிக்கொள்கிறது. எதிரிகளுக்கு அவர் தருகிற தண்டனைகள் உச்சபட்ச பயங்கரம். என்னவோ தெரியவில்லை, திவ்யாவிடம் அந்த துறுதுறு மிஸ்ஸிங். ஆனாலும் விஷாலுக்கு வாழ்க்கைப்பட்டு வந்த இடத்தில் எல்லாம் பார்க்கவும், பேசவும் அவ்வளவு பதவிசு. அதனால் அவருக்குப் போடலாம் பல ஸ்மைலி.

அப்பத்தா கொளப்புலி லீலா ‘ஏ’ கிளாஸ். ஆனால் பேரனுக்கு வரிந்து கட்டும் இடங்களில் எல்லாம் அவருடைய டப்பிங் வசன உச்சரிப்பு அநியாயத்திற்கு காலை வாரி விடுகிறது. ராதாரவி இப்பொழுதெல்லாம் உறுமலைக் குறைத்து, நடிப்பில் நயம் காட்டிக்கொண்டே இருக்கிறார். டைரக்டர் முத்தையா கதையம்சத்தில் பல இடங்களை அவரது முந்தைய படங்களிலிருந்தே எடுத்துக் கொண்டுவிட்டார். எனவே காப்பிரைட் கவலை இல்லை!

ஒவ்வொரு காட்சியும் அடுத்து வரும் காட்சியை அடையாளம் காட்டிக்கொண்டே செல்கிறது. சில காட்சிகளில் ஜாதி வர்ணம் சேர்த்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம். அப்பத்தா லீலா முதற்கொண்டு சூரி வரை ஆளாளுக்கு பன்ச் வசனம் பேசுவதைத் தவிர்த்து இன்னும் கொஞ்சம் இயல்பு காட்டியிருக்கலாம். இந்த தடவை எழுந்துவிட்டார் இமான். ‘சூறாவளிதான்’, ‘ஒத்த ஜடை ரோஜா’, ‘அக்கா பெத்த ஜக்கா வண்டி’ பாடல்கள் துறுதுறு விறுவிறு.

பரபரப்பு நிமிடங்களில் வேகமும், விவேகமுமாய் பயணிக்கிறது பின்னணி இசை. பதற்றத்தில், வேகத்தில் கிராமத்தோடு  பயணிக்கும் கேமரா மூலம் ஒவ்வொரு காட்சிக்கும் ஓவிய நேர்த்தி கொடுத்திருக்கிறார் வேல்ராஜ். பார்த்துப் பழகிய கதையென்றாலும் பாசத்தில் நெகிழ்த்துகிறது படம்!

- குங்குமம் விமர்சனக் குழு