ஷாப்பிங் போன லேடி லக்!



சீதை இல்லாத ராமன் போல, சி.எஸ்.கே இல்லாத ஐ.பி.எல் கொஞ்சம் சிரமப்பட்டுத்தான் போனது. கூடவே, வட மாநிலங்களில் வறட்சி, சில மாநிலங்களில் தேர்தல் என டி.ஆர்.பி ரேட்டிங் சற்றே அடி வாங்கியது. இருந்தும் கோஹ்லியின் விஸ்வரூபமும், தோனியின் அவுட் ஆஃப் ஃபார்மும், தமிழ், தெலுங்கு கமென்ட்ரி முயற்சியும் இந்த வருடத்தின் ஹைலைட்ஸாக அமைய, ஐ.பி.எல் ஆரவாரப் புயல் வெற்றிகரமாகவே கரையைக் கடந்திருக்கிறது.



‘ரன் மெஷின்’ என்பதற்கும் மேலாக ஒரு வார்த்தையைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் விராட் கோஹ்லிக்கு. அவர் பேட் பிடிக்க வந்தாலே ‘100 லட்சியம்... 50 நிச்சயம்’ என்றாகிவிட்டது. அதிலும் குஜராத் லயன்ஸுக்கு எதிராக கோஹ்லி, டிவில்லியர்ஸ் இருவருமே செஞ்சுரி போட்டு ஸ்கோரை 248க்கு கொண்டு வந்து நிறுத்தியதெல்லாம் ஆல்ரவுண்ட் அசுரத்தனம்.

தோனிதான் பாவம். புலி பூனை ஆனது போல, அவர் புனே அணியில்! கெவின் பீட்டர்சன், ஸ்டீவ் ஸ்மித், டூப்ளஸ்ஸி, மிட்செல் மார்ஷ் என முதல் மேட்ச்சில் புனேவின் லைன் அப் மிரட்டத்தான் செய்தது. அந்த ஆட்டத்தில் மும்பையை புனே 9 விக்கெட் வித்தியாசத்தில் துவம்சமும் செய்தது. ஆனால், காயம் காரணமாக மேற்படி நால்வருமே அடுத்தடுத்து கிளம்பிவிட, திருவிழாவில் தொலைந்த குழந்தை போல திணறியது புனே. ‘யார் இல்லாட்டாலும் சிங்கம் சிங்கிளா நின்னு அடிக்கும்டா’ என தோனி மீது மக்கள் வைத்த நம்பிக்கையும் பொடிப்பொடியானது.

‘கால் கிட்ட போடாதே... பவுன்சர் தூக்காதே’ என அவர் அடிக்கக் கூடிய பந்துகளை சரியாக அடையாளம் கண்டுவிட்டார்கள் பவுலர்கள். இதனால் அவர் நாட் அவுட்டாய் நின்றும் சில டைட் மேட்சுகளை ஜெயிக்க முடியாமல் போனது. 14 ஆட்டத்தில் 9 தோல்வி என்பது தோனி தலைமை தாங்கும் அணிக்கு அவமானமே!



இன்னொரு பக்கம், சென்னை அணியில் பாகப் பிரிவினை செய்து கொண்டு போன ரெய்னா கலக்கிவிட்டார். தொட்டதெல்லாம் வெற்றி என பழைய சி.எஸ்.கே ஸ்டைலில் முதல் ஆளாக ப்ளே ஆஃப் தகுதியை உறுதி செய்தது அவரின் குஜராத் லயன்ஸ்தான். மெக்கல்லம், ஃபின்ச், ட்வைன் ஸ்மித், ஃபாக்னர் என இந்த அணி உள்ளூர் குஸ்தியில் ராக்கை இறக்கிவிட்ட மாதிரி இருந்தது. பிரவீன் குமாரின் ஸ்விங் பால்களும் பிராவோவின் கடைசி ஓவர்களும் குஜராத்தை முதல் சீஸனிலேயே முத்திரை பதிக்க வைத்திருக்கிறது.

மகாராஷ்டிர வறட்சியால் அதிகம் பாதிக்கப்பட்டது மும்பையும் புனேவும்தான். மைதானத்தை தயார் செய்வதற்கே அங்கு எதிர்ப்பு. சரி, அங்கேதான் வறட்சி என்று விசாகப்பட்டினத்துக்கு ஜாகை மாறினால், அங்கே மழை. மலிங்கா இல்லாமலே களம் இறங்கிய மும்பையை இந்த முறை ரோஹித்தும் பொலார்டும் ராயுடுவும் சற்றுத் தூக்கி நிறுத்தினார்கள். ஆனால் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும் அளவுக்கு இல்லை.

பஞ்சாப் அணியின் அக்சர் படேல் குஜராத்துக்கு எதிராக எடுத்த ஹாட்ரிக்கும் புனேவின் ஆடம் ஜம்பா ஒரே மேட்ச்சில் வீழ்த்திய ஆறு விக்கெட்டும் இந்த சீஸனின் பவுலிங் ஹைலைட்ஸ். கேட்ச்சைப் பொறுத்தவரை ஸ்லிப்பில் ரெய்னா, சூர்யகுமார் யாதவின் கேட்ச்சை எகிறிப் பிடித்தது கண்ணிலேயே நிற்கிறது. 37 பந்துகளில் 86 ரன் அடித்த மும்பையின் க்ருனால் பாண்ட்யாவும், 36 பந்துகளில் 70 ரன் அடித்த அதே மும்பை வீரர் நிதேஷ் ராணாவும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்கள்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி டி20 வரலாற்றில் செம பவுலிங் டீமாக ஃபார்ம் ஆகிவிட்டது. டேவிட் வார்னர் - ஷிகார் தவான் ஓபனிங் ஜோடியுடன் யுவராஜ் சிங் ஃபார்முக்குத் திரும்பியதும் பெரிய ஆறுதல்! புவனேஸ்வர் குமார், ஸ்ரன், முஸ்தஃபிசுர் ரஹ்மான் என பவுலிங் பலமே பிளே ஆஃப் சுற்றுக்கு ஐதராபாத்தை அசத்தலாக வழிநடத்திச் சென்றது.

சி.எஸ்.கே ஆடாத சீஸனில்தானா தமிழில் கமென்ட்ரி வைக்க வேண்டும்?! சடகோபன் ரமேஷ், ஹேமங் பதானி, பட்டாபிராமன், சந்திரசேகர், சத்யநாராயணன் என தமிழ் வர்ணனைக் குழு பலரின் வரவேற்பையும் சிலரின் கிண்டல் மீம்ஸையும் பெற்றது. ஆங்காங்கே தென்படும் அக்ரஹாரத் தமிழ் குறைந்தாலும், சி.எஸ்.கே மீண்டு வந்தாலும், இதன் உண்மையான வெயிட் தெரியும்.

எது எப்படியோ... ஒட்டுமொத்தமாய் இந்த சீஸன் ஐ.பி.எல் ஒரு விஷயத்தை பூடகமாக உணர்த்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் வானில் தோனி என்ற கொடி மெல்ல இறக்கப்பட்டு கோஹ்லி கொடி ஏற்றப்படுவதே அது. தோனியின் சூப்பர் கேப்டன்தனங்களை இப்போது நண்டு சிண்டு எல்லாம் தெரிந்து கொண்டு செயல்படுத்துகிறது. கீப்பிங் பேட்ஸ்மேனாக ராகுல் போன்றவர்கள் முளைத்து வருகிறார்கள். நல்ல ஃபினிஷர் எல்லாம் தேவையில்லை எனும் அளவுக்கு கோஹ்லியே மேட்ச்சுக்கு மேட்ச் கடைசி வரை நிற்கிறார். இப்படியொரு இக்கட்டு நிலையில் தோனியின் அந்த லேடி லக் எங்கே ஷாப்பிங் போயிருக்கிறாளோ தெரியவில்லை!

- நவநீதன்