குட்டிச்சுவர் சிந்தனைகள்



ஆல்தோட்ட பூபதி

நாட்டுல பள்ளிக்கூட நேரத்த அதிகரிச்சா படிக்கிறவங்க அதிகமாகிடுவாங்கன்னு நம்புற மாதிரிதான், டாஸ்மாக் நேரத்தைக் குறைச்சா குடிக்கிறவங்க குறைஞ்சிடுவாங்கன்னு நம்பறதும்! இறைவன் நமக்கான கதவை சாத்தினாலும் ஜன்னலைத் திறப்பாரான்னு தெரியல; ஆனால் எப்ப கதவை சாத்தினாலும், அதற்கு அடுத்த நிமிடமே சைடுல ஜன்னலை திறக்கும் ஒரே கடவுள் டாஸ்மாக்தான். இத்தனை நாளா கடை மூடின பிறகு நைட் 12 மணி வரை ஷட்டருக்கு அடியில, ஜன்னல் வழியிலன்னு கையை விட்டு சரக்கு வாங்குனாங்க. இப்ப கடை திறக்கும் வரை - அதாவது பகல் 12 மணி வரை ப்ளாக்ல வாங்கணும்... அம்புட்டுதான் வித்தியாசம்.



நீங்க திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா விக்கற மாதிரி வேலை நேரம் மாலை 6 to 9 மட்டுமே கடைய திறந்தாலும், இல்ல அஜித் பட டிக்கெட் ரிசர்வேஷன் மாதிரி ஒரு மணி நேரம் வைத்தாலும், முந்தின வருஷ சேல்ஸ் ரெக்கார்ட அடுத்த  வருஷம் உடைக்கும் டாஸ்மாக். இவ்வளவு ஏன், மாவட்டத்துக்கு ஒரு கடையிலதான் மது விற்பனைன்னு சொன்னாலும்; அட, அதுக்கும் மேல போய், மாநிலத்துலயே ஒரே ஒரு கடையிலதான் மது விற்பனைன்னு சொன்னாலும், போன வருஷ இலக்கைத் தாண்டும் விற்பனை என்பதுதான் உண்மை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், எங்கேயோ முட்டுச்சந்துகளில் இருக்கும் 500 மதுக்கடைகளை மூடினால் பெரிய பயன் தராது. மதுவிலக்குதான் லட்சியம் என்றால், மாநிலத்திலேயே மிக அதிகமாக மது விற்பனையாகும் டாப் 500 டாஸ்மாக் கடைகளைப் பட்டியல் எடுத்து, அதையெல்லாம் மூடலாமே! ஒருத்தனுக்கு பசிச்சா மீனைத் தருவதை விட தூண்டில கொடுங்கன்னு சொல்வாங்க. அது போலதான்... மதுவிலக்கு கொண்டு வரணும்னா, மது விற்பனைக் கடைகளை குறைக்கிறதை விட, மது உற்பத்தி செய்யும் ஆலைகளைக் குறைங்க!

‘மாற்றத்தைக் கொண்டு வரும் அணி’ன்னுதான் அந்தக் கூட்டணியின் தலைவர்கள் சொன்னாங்க... அந்த மாற்றம் ‘முன்னேற்றம்’னு சிலபல பேர் நினைச்சாங்க! ‘இல்ல... இல்ல... நாங்க சொன்ன மாற்றம் என்பது ஏமாற்றம், தடுமாற்றம்’னு மக்களுக்குப் புரிய வச்சுட்டாங்க; சொல்லப் போனால் மக்கள்தான் அவங்களுக்குப் புரிய வச்சுட்டாங்க.

இந்த வருத்தப்படாத வாலிபர் சங்கத் தலைவர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்! சுனாமி வரும்போது ஸ்விம்மிங் அடிக்கிறேன்னு மெரினா பீச்சோரம் மெத்தனமா நிற்க வைங்க; ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் புரட்டிப் போடுற மாதிரி ஒரு பூகம்பம் வந்தாலும், பூப்பறிக்கப் போற மாதிரி பதற்றமில்லாம நிற்க வைங்க; பல நூறு கிலோமீட்டர் வேகத்துல புயல் அடிச்சாலும், வேட்டியை இறுக்கிக் கட்டிக்கிட்டு வீரன் வேலுத்தம்பி மாதிரி தெனாவெட்டா நிற்க வைங்க; நாலு ரோடு சந்திக்கிற இடத்துல, நல்லா நடுவுல, இந்த வெளுக்குற வெயில்ல வீரமா நிற்க வைங்க; மகாபலிபுரம் மணல்ல மத்தியான நேரத்துல மண்டையில துண்டில்லாம நிற்க வைங்க; குற்றாலம் கூட்டிப் போய் குளிக்க விடாம, க்யூவுலயே முழு நேரம் நிற்க வைங்க; காஷ்மீர் குளிர்ல, கதகதப்பு தர்ற கம்பளிக் கோட்டுகூட தராம நிற்க வைங்க; அனல் அடிக்கிற டீக்கடை பாய்லர் பக்கமா திரும்பி நிற்க வைங்க; நாகப்பட்டினம் மீன் மார்க்கெட் நடுவுல போய் விரும்பி நிற்க வைங்க. ஆனா யாரையும் தயவுசெய்து இனி தேர்தல்ல மட்டும் நிக்க வச்சுடாதீங்க.

கொம்புல புது பெயின்ட் அடிச்சு ரெண்டு மாடு ஒரு ஓரமா நிற்க, நல்ல தங்க நிறத்துல சூரியன் மிளிர, கோலம் வரையப்பட்ட பானையில பொங்கல் பொங்க, ரெண்டு சள்ளை கரும்பு வாழைப்பழம் தேங்காய் பூ வச்சு கை கூப்பி கும்பிடுற குடும்பப் படம் போட்ட மாதிரியான பொங்கல் வாழ்த்து அட்டைகள் நிறைய காணக் கிடைக்கும், அதெல்லாம் ஒரு 20 வருஷத்துக்கு முந்தைய சமாசாரம். குறுந்தகவல்களும் மின்னஞ்சல்களும் அவற்றை மொத்தமா வெட்டி சாகடிச்சிடுச்சு. இப்ப அதெல்லாமே வாட்ஸ்அப்கிட்ட வீழ்ந்துக்கிட்டு இருக்கு என்பது வேறு விஷயம்.

கிட்டத்தட்ட அந்த பொங்கல் வாழ்த்து அட்டைகள் அனுப்புற காலத்துலதான் இப்ப காதல் படம் எடுக்கிற டைக்டர்கள் பலரும் வாழ்ந்துக்கிட்டு இருக்காங்கன்னு நினைக்கிறேன். நிகழ்கால நிகழ்வுகளைக் கொண்டு, நிகழ்காலக் காதல்களை எடுக்கிறேன்னு, ஒரு பையன் ஒரே ஒரு பொண்ணை மட்டும் காதலிக்கிற மாதிரியும், ஒரு பொண்ணு ஒரே ஒரு பையனை மட்டும் காதலிக்கிற மாதிரியும் கதைகளையெல்லாம் கொண்டு வராதீங்க.

ஒரு காலத்துல காதல் தோல்வியடைஞ்சா கைய கிழிச்சுக்குவாங்க; கழுத்தை கிழிச்சுக்குவாங்க; அட, அட்லீஸ்ட் சட்டையையாவது கிழிச்சுக்குவாங்க. இப்பவெல்லாம், கண்டதை கிழிச்சுக்குறவங்க எங்க சார் இருக்காங்க? வெறுமனே மொபைல் கான்டாக்ட் லிஸ்ட்ல நம்பர அழிச்சுக்குறவங்கதான் இருக்காங்க. அப்பவெல்லாம் காதலுக்காக நாக்கை வெட்டிக்கிட்டானுங்க, மூக்கை வெட்டிக்கிட்டானுங்க, இப்பவெல்லாம் காதலிக்கிற புள்ளைகூட சேர்ந்து கேக்கை மட்டும்தான் வெட்டுறானுங்க.

அப்பவெல்லாம் காதல் தோல்வியடைஞ்சா வாடிப் போய் வேறு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க; காதல் தோல்வியடையக் கூடாதேன்னு ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க; நல்லா கவனிச்சுப் பார்த்தா, இப்பவெல்லாம் ஓடிப் போய் கல்யாணம் பண்றவங்க எண்ணிக்கை ரொம்பவே குறைஞ்சு போயிடுச்சு; ஆனா கல்யாணம் பண்ணிக்கிட்டு தொல்லை தாங்கலடான்னு ஓடிப் போறவங்க எண்ணிக்கை அதிகமாயிடுச்சு.

ஐயா இயக்குனர்களே! காதல் படம் எடுக்கிறப்ப, எதை மறந்தாலும், எதைத் துறந்தாலும், ஒரே ஒரு விஷயத்தை மட்டும் எப்பவும் ஞாபகம் வச்சுக்கங்க! அந்தக் காலத்துல ‘காதல் வெற்றியடையும், காதலிக்கிறவங்களையே கல்யாணம் பண்ணிக்கலாம்’ என்ற நம்பிக்கையில் காதலிச்சாங்க. இப்பவெல்லாம் ‘எப்படியும் நம்ம காதல் புட்டுக்கும், காதலிக்கிறவங்களையே கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்க நேராது’ என்ற நம்பிக்கையில்தான் காதலிக்கிறாங்க.                

ஓவியங்கள்: அரஸ்