முகங்களின் தேசம்



ஜெயமோகன்
ஓவியம் : ராஜா


அஞ்சாமை என்பது... தீவிரவாதத் தாக்குதல்களால் இப்போதும் எப்போதும் செய்தியாகும் மாநிலம், மணிப்பூர். நாகாலாந்தின் கோஹிமாவிலிருந்து 2015 பிப்ரவரியில் நீண்ட கொடும்பயணம் வழியாக மணிப்பூருக்குள் நுழைந்தோம். நாகாலாந்து முழுக்க கடுமையான ராணுவக் காவல் இருந்தது. எங்கும் கண்காணிக்கும் விழிகளை முதுகில் உணர்ந்துகொண்டே இருந்தோம். ஆனால் கூடவே ஒருவகை செல்வச் செழிப்பையும் காணமுடிந்தது.  ஏனென்றால், நாகாலாந்து அதன் கிறிஸ்தவப் பின்னணி காரணமாக ஏராளமான சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கிறது. பலவகையான மிஷன் நடவடிக்கைகள் வழியாக அன்னிய நிதி உள்ளே வந்துகொண்டிருக்கிறது.



ஆனால் மணிப்பூரில் ராணுவக் காவல் மட்டும்தான் இருந்தது, செல்வச் செழிப்பு இல்லை. மணிப்பூர் எல்லையில் எங்கள் வண்டியை நிறுத்தி விரிவாகச் சோதனையிட்டார்கள். அனுமதிச்சீட்டு வாங்கியிருந்ததைப் பரிசீலித்தார்கள். ஓட்டுநரை தனியாக அழைத்துச் சென்று அரை மணி நேரம் கேள்விகளாகக் கேட்டனர். ஒருவர் கேள்விகள் கேட்கும்போது இன்னொருவர் கூர்ந்து நோக்கிக்கொண்டிருப்பார். பிறர் என்றால் பதறி விடுவார்கள். ஆனால் எங்கள் ஓட்டுநர் தயங்காமல் பதில் சொல்லிக்கொண்டிருந்தார்.

எங்கள் எல்லைப்புறப் பயணங்களில் கூட வந்த ஓட்டுநர்களை ஊர் திரும்பிய பின் பரிதாபமாக எண்ணிக்கொள்வோம்.  ‘எள் காய்வது எண்ணெய்க்காக, எலிப்புழுக்கை என்னத்துக்குக் காயவேண்டும்’ என்று ஒரு பழமொழி உண்டு. நாங்கள் அறிதலின் பொருட்டும் சாகசத்தில் உள்ள உற்சாகத்தின் பொருட்டும் எல்லைப் பகுதிகளின் அபாயகரமான இடங்களுக்கெல்லாம் செல்கிறோம். ஓட்டுநர்களுக்கு அதெல்லாம் இல்லை. இருந்தாலும் அவர்களும் வருகிறார்கள். காரணம், பிழைப்புதான்!

ஏனென்றால் தீவிரவாதம் போன்ற பிரச்னைகள் உள்ள இடங்களில் முதல் அடி விழுவது சுற்றுலாவில்தான். அடுத்ததாக சிறுவணிகத்தில். இரண்டுமே போக்குவரத்தை இல்லாமல் ஆக்குகின்றன. வாகன ஓட்டிகளுக்கு பயணிகள் கிடைப்பதே அபூர்வம். கடும்போட்டி அதில் நிலவுவதனால், அத்தனை அபாயகரமான பயணத்திற்கு அடிமட்டக் கட்டணத்திற்கு பேரம் பேசி முடிக்க முடியும் எங்கள் ஓட்டுநர் அசாமில் உள்ள ஷிவ்சாகரைச் சேர்ந்தவர்.

முப்பது வயதான திரேன் பார்ப்பதற்கு சிறுவன் போலிருந்தார். எங்கள் தோளுக்குக் கீழ்தான் உயரம். ஆங்கிலம் ஓரிரு சொற்களே தெரியும். ஆனால் உண்மையில் அவர் ஒரு பன்மொழி அறிஞர். அசாமி, மணிப்புரி, நாகா மொழி என எட்டு மொழிகள் பேசத் தெரியும். மிகத்தேர்ந்த ஓட்டுநர். வடகிழக்கில் தேர்ந்த ஓட்டுநர்கள் மட்டுமே பணியாற்றமுடியும். அனேகமாக பேச்சே கிடையாது. வாய் என்பது சாப்பிடுவதற்கும்  பான்பராக் மெல்வதற்கும் மட்டும்தான்.

மணிப்பூரின் சாலைகள் பெரும்பாலும் வெறிச்சிட்டே கிடந்தன. பல ஆண்டுகளுக்குப் பின் அப்போதுதான் சாலை போட ஆரம்பித்திருந்தனர். ஆகவே குண்டும் குழியுமான சாலை. பல இடங்களில் ஆழமாகத் தோண்டிப் போட்டிருந்தனர். அங்கே சேறும் புழுதியும் மண்டிக் கிடந்தன. கார் படகு போல, சில சமயம் ரங்கராட்டினம் போல, சில சமயம் அபாயக்கிணறு போல சென்றது. நானும் சொந்தமாக கார் வைத்திருப்பவன். என் காரை ஒருபோதும் அத்தகைய சாலையில் ஓட்ட மாட்டேன். கார் என்னும் வாகனம், அத்தகைய பயணத்திற்கு உரியதே அல்ல!



மணிப்பூரில் 37 ஆயுதம் தாங்கிய சிறிய தீவிரவாதக் குழுக்கள் உள்ளன. அத்தனை பேருக்கும் சாலைதான் வேட்டைக்களம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு இனக்குழுவுக்கு உரியது. ஒவ்வொன்றிலும் அதிகம் போனால் நூறு உறுப்பினர்கள் வரை உள்ளனர். அவர்களிடம் பர்மாவில் வாங்கப்பட்ட ரஷ்ய ஆயுதங்கள் உள்ளன. சீனாவும் அவர்களுக்கு ஆயுதம் அளிக்கிறது. அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்கிறார்கள். கூடவே வழிப்பறி, ஆள்கடத்தல் மற்றும் கொள்ளையில் ஈடுபடுகிறார்கள்.

ஆகவே அங்கே இரவு ஏழு மணிக்கு மேல் மக்கள் நடமாட்டம் என்பதே இல்லை. கடைகள் மூடப்பட்டு விடும். வீடுகளிலும் விளக்குகளை அணைத்துவிடுவார்கள். சாலைகளில் அறிவிப்புகள் இல்லை. கூகுள் திசைகாட்டியை அரசே நிறுத்தி வைத்திருக்கிறது. ஆகவே பயணம் என்பது ஓட்டுநரின் உள்ளுணர்வை நம்பியே செய்யப்படுகிறது, ஒரு தியானப் பயணம் போல! துரதிர்ஷ்டவசமாக நாங்கள் மணிப்பூர் எல்லையைக் கடந்தபோதே மணி மாலை ஐந்து. இருட்டு கவிந்துகொண்டிருந்தது. ஐம்பது கிலோமீட்டருக்கு அப்பால்தான் நாங்கள் தங்க வாய்ப்புள்ள ஒரே ஊரான இம்பால் இருந்தது.  சாலையில் நடந்துசெல்லும் வேகத்தில் சென்றோம்.

ஒரு காட்டின் எல்லையில் இருந்த ராணுவ முகாமில் எங்களை நிறுத்தி முகாம் அருகே அழைத்துச் சென்றனர். கோட்டை போன்ற அமைப்புக்குள் இருந்து எங்களை ஏ.கே. 47 முனைகள் குறிநோக்கின. எங்களை விசாரித்த காவலதிகாரி, ‘நாங்கள் செல்லவேண்டிய ஐம்பது கி.மீ. தூரம்தான் மிகமிக அபாயகரமானது’ என்றார். ‘‘இந்த வழியினூடாக எப்படிச் செல்ல முடியும்? யார் வழி சொன்னது?’’ எனக் கேட்டார். ‘‘யாரும் வழி சொல்லவில்லை. நாங்களே வந்தோம்’’ என்றோம். பயணங்களில் நம்மை ஆட்டுவிக்கும் மாயை அது. தொலைவு என்பது செல்லும் வாகனத்தாலும் சாலையாலும்தான் தீர்மானிக்கப்படுகிறது.

நம்மூர் நான்கு வழிச்சாலையில் ஐம்பது கிலோமீட்டர் என்பது அரை மணி நேரப் பயணம். மணிப்பூரில் அது ஒரு முழு இரவுப் பயணம். ‘‘சரி! நாங்கள் திரும்பிச்செல்கிறோம்’’ என்றோம். ‘‘அதற்கும் இதே அளவு தொலைவு செல்லவேண்டும்’’ என்றார்கள். ‘‘இங்கே எங்காவது தங்கமுடியுமா?’’ என்றோம். ‘‘இம்பால் அன்றி எங்குமே இடமில்லை. இம்பாலிலும் வாய்ப்பு குறைவுதான்’’ என்றார் அவர். வேறுவழியில்லை. ஓட்டுநருக்கு ஆணைகளையும் ஆலோசனைகளையும் சொல்லத் தொடங்கினார். ‘‘எங்கும் நிறுத்த வேண்டாம். குறைந்த அளவு முகவெளிச்சம் போதும். காட்டுக்குள் பேசிக்கொள்ள வேண்டாம். எவரேனும் கை காட்டினால் நிறுத்த வேண்டாம். ஆனால் இரண்டு மூன்று பேர் என்றால் உடனே நிறுத்தி விடு. அவர்கள் சுடக்கூடும்’’ என்றார்.

‘‘எங்களிடம் மதிப்புமிக்க ஒன்றும் இல்லையே’’ என்றோம். ‘‘இங்கே மதிப்புமிக்க பொருளே கார்தான். உங்களை சுட்டுத் தள்ளிவிட்டு காருடன் சென்றுவிடுவார்கள். பர்மாவுக்குள் சென்றுவிட்டால் கணுக்கணுவாக கழற்றி விற்று விடலாம்’’ என்றார் அதிகாரி. ‘‘சமீபகாலமாக பெரிய நிகழ்ச்சிகளேதும் இல்லை. தைரியமாகப் போங்கள்’’ என்றார் இன்னொருவர். கோட்டையின் துளை வழியாக எட்டிப் பார்த்த  திருவனந்தபுரத்துக்காரரான ஒரு மலையாளி  வீரர், ‘‘இம்பால் செல்லும்வரை சாப்பிட எதுவுமே கிடைக்காது’’ என்றார்.



ராணுவ வீரர்கள் ஓட்டுநருக்கு, அவசரத்தில்  அழைக்கவேண்டிய எண்களை அளித்தனர். போதுமான அளவுக்கு நாங்கள் அஞ்சியபின் கிளம்பினோம். திரேன் மேலும் இரண்டு பான் பராக் உறைகளைக் கிழித்து வாய்க்குள் போட்டுக்கொண்டார். உறுமியபடி வண்டி கிளம்பியது. சினிமாக்களில் வருவது போல ஒரு திகில் பயணம். சாலை என ஏதும் இல்லை. சேறு மண்டிய வழியில் மேலிருந்து கற்கள் உருண்டு கிடந்தன. அலைகளில் படகு போல கார் அலைந்து சென்றது. பெரும் புழுதிப் படலம் எழுந்து முக வெளிச்சத்தில் செந்நிறமான திரை போலத் தெரிந்தது. எங்கள் காரின் ஓசை அன்றி, வேறெந்த ஓசையும் இல்லை. சுழன்றுவந்த காரின் வெளிச்சம் பட்டு சில பறவைகள் கலைந்து எழுப்பிய ஒலி மட்டும்தான்!

முழுமையான தனிமை. இரு பக்கமும் அடர்ந்த காட்டின் அமைதிக்குள் ஏதாவது சிறிய ஒலி கேட்கும்போது எங்கள் உடல் அச்சத்தால் சிலிர்த்தது. ஒருமுறை தொலைவில் ஓர் ஒளி தெரிந்ததும் உறைந்து விட்டோம். அது எங்கள் காரின் ஒளி அங்கிருந்த பழைய இரும்புப்பொருள் ஒன்றில் பிரதிபலித்ததால் வந்தது என உணர்ந்ததும் நிம்மதியானோம். முனகி முனகி  மிக மெல்லத்தான் செல்ல முடிந்தது. புதிய டவேரா கார். ஏதேனும் காரணத்தால் கார் ஓடாமல் ஆகிவிட்டிருந்தால் பெரிய சிக்கல். அச்சமும் கூடவே ஒரு மனக்கிளர்ச்சியும் எங்களுக்குள் ஓடிக்கொண்டிருந்தது.

எக்கணமும் துப்பாக்கியுடன் இருவர் வந்து மறிக்கக்கூடும். கொல்லாமலிருந்தால்கூட, அந்தக் காட்டில் குடிநீரும் உணவும் இன்றி நிர்க்கதியாக இறக்கிவிட்டால் என்ன செய்வோம்? இத்தனைக்கும் அது இரு மாநிலங்களின் தலைநகர்களுக்கு இடையே உள்ள ஒரே சாலை! இரவு ஒன்பது மணிக்கு இம்பால் சென்று சேர்ந்தோம். ஐம்பது கிலோ மீட்டரை மூன்று மணி நேரத்தில் கடந்திருந்தோம். ஆனால் அது ஒரு பெரிய சாதனை. திரேன் போன்ற அற்புதமான ஓட்டுநர் மட்டுமே அதைச் செய்ய முடியும். ஒரு சொல் பேசாமல், சலிப்பொலி எழுப்பாமல், கண்ணும் கையும் ஒருங்கிணைய அவர் வண்டியை ஓட்டியது ஒரு தவம் போல் இருந்தது.

நகரத்தின் கார்களைப் பார்த்த பின்னர்தான் பெருமூச்சு வந்தது. ஒரு விடுதியில் அறை எடுத்தோம். வழக்கம் போல நாங்கள் மிகமிகக் குறைவான செலவில்தான் அறை எடுத்துக்கொண்டோம். மேலும் அந்த வேளையில் இரண்டே விடுதிகள்தான் முகப்பில் ஒளியுடன் இருந்தன. அந்த விடுதியில் எங்களைத் தவிர எவரும் அறை போட்டிருக்கவில்லை. உரிமையாளரின் மகிழ்ச்சியைக் காண ஆச்சரியமாக இருக்கவில்லை. விடுதியில் கார் நிறுத்த இடமில்லை. சாலையில் காரை நிறுத்தலாம் என்றோம். ‘‘எங்களோடு உள்ளே படுத்துக்கொள்ளுங்கள்’’ என்று சொன்னபோது திரேன் பிறிதொரு முகத்தைக் காட்டினார்.

‘‘எக்காரணம் கொண்டும் காரை சாலையில் நிறுத்தமாட்டேன். நானும் அதில்தான் படுப்பேன்’’ என்றார். ‘‘ஆனால் சாலையில் காரை நிறுத்தக்கூடாது என்று என்னிடம் ராணுவ அதிகாரி சொன்னார். எனக்கு வேறு வழியில்லை!’’ எனச் சொன்னார். ஓட்டுநரையும் காரையும் தன் வீட்டில் நிறுத்திக்கொள்ள உரிமையாளர் ஒப்புக்கொண்டார். அதுவும் அபாயமானது. அவரது வீட்டில் அசாமிய எண் கொண்ட ஒரு கார் இரவில் நின்றது எனத் தெரிந்தால் எப்போது வேண்டுமென்றாலும் விசாரணை வரலாம், அரசிடமிருந்தும் தீவிரவாதிகளிடமிருந்தும்!

‘‘பரவாயில்லை. உங்கள் அடையாளங்களை எழுதி வைத்துக்கொள்கிறேன்’’ என்றார். திரேன் அவருடன் காரில் சென்றார். இரவில் நகரம் முழுமையாகவே அடங்கியது. மொத்த நகரமும் ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குச் சென்றது. இரவில் இடியுடன் மழை பெய்தது. தகரக்கூரை ஓலமிட்டதனால் விழித்துக்கொண்டேன். ஜன்னல் வழியாகப் பார்த்தால், அந்தக் கடும் குளிரிலும் சாலையில் ராணுவ வீரர்கள் காவலிருந்தனர். ஜன்னல் திறக்கப்பட்டபோது டார்ச் அடித்துப் பார்த்தனர். டார்ச் ஒளியைப் பாய்ச்சியபடி சுற்றிச் சுற்றி வந்தனர். அந்த ராணுவ வீரராக என்னைக் கற்பனை செய்துகொண்டபோது வருத்தமாகவே இருந்தது.

மீண்டும் ஷிவ்சாகர் வந்து பயணத்தை முடித்தபோது திரேன் சிரிப்பதைக் காணும் வாய்ப்பு பெற்றோம். கண்களை மூடி வாய் திறந்து ஒரு சீனத்துச் சிரிப்பு. அவர் உரிமையாளரும் வந்து சேர்ந்துகொண்டார். திரேனுடன் ஒரு படம் எடுத்துக்கொண்டோம். உரிமையாளருடனும் படம் எடுத்துக்கொண்டோம். ‘‘எத்தனை அபாயங்கள் வழியாக வண்டி சென்றிருக்கிறது என்று தெரிந்தால் தொழிலையே விட்டுவிடுவீர்கள்’’ என உரிமையாளரிடம் சொன்னேன். அவர் சிரித்தபடி, ‘‘ஒவ்வொரு நாளும் நிகழ்வதுதான் சார். வேறுவழியில்லை. எல்லாம் பழகிவிட்டது. வயிற்றை நினைத்தால் பயம் போய்விடும்’’ என்றார்.

எவரேனும் கை காட்டினால் நிறுத்த வேண்டாம். ஆனால் இரண்டு மூன்று பேர் என்றால் உடனே நிறுத்தி விடு. அவர்கள் சுடக்கூடும்! முழுமையான தனிமை. இரு பக்கமும் அடர்ந்த காட்டின் அமைதிக்குள் ஏதாவது சிறிய ஒலி கேட்கும்போது எங்கள் உடல் அச்சத்தால் சிலிர்த்தது. ஒருமுறை தொலைவில் ஓர் ஒளி தெரிந்ததும் உறைந்து விட்டோம்.

முழுமையான தனிமை. இரு பக்கமும் அடர்ந்த காட்டின் அமைதிக்குள் ஏதாவது சிறிய ஒலி கேட்கும்போது எங்கள் உடல் அச்சத்தால் சிலிர்த்தது. ஒருமுறை தொலைவில்  ஓர் ஒளி தெரிந்ததும் உறைந்து விட்டோம்.

(தரிசிக்கலாம்...)