பொய்



-ஜெயா மணாளன்

‘‘வள்ளி, நீ கேட்டேனு உன் மகன் முத்து என்கிட்ட 200 ரூபாய் பணம் வாங்கிட்டுப் போனானே... பத்திரமா கொடுத்தானா?’’ பக்கத்து வீட்டு பங்கஜம் கேட்டதும் வள்ளிக்கு தூக்கி வாரிப் போட்டது. அவள் அப்படி பணம் எதுவும் கேட்டு அனுப்பவில்லை. ‘‘ஆமாம்! கொடுத்தான்...’’ என அங்கே சமாளித்துவிட்டு வீடு வந்தாள். வரட்டும் அந்தப் பய என கோபத்துடன் காத்திருந்தாள். சற்று நேரத்துக்கெல்லாம் வியர்த்துக் கொட்டியபடி வீட்டுக்குள் நுழைந்த முத்துவின் கையில் புத்தம்புது கிரிக்கெட் பேட்.



‘‘டேய்! பங்கஜத்துகிட்ட எதுக்குடா பொய் சொல்லி பணம் வாங்கினே? பொய் சொல்றது தப்பில்லையா? இதுமாதிரி எத்தனை பேர்கிட்ட என்னென்ன சொல்லியிருக்கே?’’ கோபம் கொப்பளிக்கக் கேட்டாள் வள்ளி. ‘‘நீயும் அப்பாவும் சொன்ன பொய்யை விடவா நான் பெரிசா சொல்லிட்டேன்?’’ - முத்து அலட்சியமாகச் சொன்னான். வள்ளியிடம் அதிர்ச்சி. ‘‘நாங்க எப்படா பொய் சொன்னோம்?’’

‘‘சொன்னீங்களே..! நீயும் அப்பாவும் ஆளுக்கு ஒரு ஓட்டுதான் போட முடியும். ஆனாலும், ஓட்டுக் கேட்க வந்த ஒவ்வொரு கட்சிக்காரங்ககிட்டயும், ‘உங்களுக்கே ஓட்டு போடறோம்!’னு பொய் சொல்லி எல்லார்கிட்டேயும் பணம் வாங்கியிருக்கீங்க! இது பொய்யில்லையா? தப்பில்லையா?’’ - மகனின் பேச்சு வள்ளியை வாயடைத்துப் போகச் செய்தது.