நகல்



-சித்ரூபன்

அந்த வங்கிக் கிளையில் நான்தான் ஒரே கேஷியர். கூட்டம் ஓய்ந்திருந்த நேரம்... இரண்டு பேர் தலைக்கவசம் அணிந்தபடி  உள்ளே நுழைந்தார்கள். ஒருவன் வாசலிலேயே நின்றுகொள்ள, மற்றவன் என்னிடம் வந்து ஒரு  காகிதத்தை நீட்டினான். அதில், ‘‘எச்சரிக்கை! அபாய மணி பழுதாகியுள்ளது  எங்களுக்குத் தெரியும். கூச்சல் போடாமல் பணக் கட்டுகளைக்  கொடுத்துவிடு... என் கையில் இருப்பவை ஆசிட் பாக்கெட்டுகள்!’’ என்றிருந்ததை வாசித்ததும் என்  ரத்தக்கொதிப்பு அதிகமாயிற்று.



உச்சகட்ட பயத்தில் நான் டிராயரைத் திறந்து பணத்தை எடுப்பதற்குள், அவன் கண்ணாடித் தடுப்பு வழியே எட்டிப் பார்த்தான். மேசை  ஓரத்தில், திறந்திருந்த என் கைப்பையினுள் ஆயிரம் ரூபாய் நோட்டுகள். ‘‘அதை அப்படியே எடு!’’ என்று மிரட்ட, நான்  தயங்கினேன். ‘‘குட்றா...’’ என்று அதைப் பறித்துக் கொண்டு, அவனும் கூட்டாளியும் வேகமாக வெளியேறி மறைந்தனர்.

என் நண்பரான கலை இயக்குநருக்கு அவ்வப்போது நான் ‘செட் ப்ராபர்ட்டீஸ்’  கொடுத்து உதவுவதும், மறுநாள் வெளிப்புறப் படப்பிடிப்பிற்காக அவர் கேட்டிருந்த ஏராளமான டூப்ளிகேட் ரூபாய் நோட்டுகள் தான் என் கைப்பையில் இருந்தவை என்பதும் அந்தக்  கொள்ளையனுக்குத் தெரிய வாய்ப்பில்லை.