ரகசிய வீதிகள்



அட்டகாசத் தொடர்

சுபா

ஓவியம்: அரஸ்

விஜய் திகைப்புடன் இன்ஸ்பெக்டரைப் பார்த்தான். “உங்க கேள்வி எனக்குப் புரியல... நான் சொல்றது எதுவுமே பொய்யில்ல. எல்லாமே உண்மைதான்!” என்றான். “அப்படியில்ல தம்பி... நீங்க மீடியாவுல இருக்கறவர்தானே? இதே கதைய நான் உங்ககிட்ட சொன்னா, நீங்க நம்புவீங்களா..?” என்றார் துரை அரசன், சற்றுக் கடுமையான குரலில். “நம்ப முடியாம என்ன சார் சொல்லிட்டேன்..?” “ஆளுங்களை ஃபாலோ பண்ணீங்க... மரத்து மேல ஏறி ஒளிஞ்சிருந்தீங்க... அதைக் கூட நம்பலாம். ஆனா, துப்பாக்கியோட ஒருத்தன் மெரட்டிட்டு நின்னான்... மரக்கிளை உடைஞ்சு அவன் மேல விழுந்துச்சு. அவன் தன்னைத்தானே சுட்டுக்கிட்டான்னு சொல்றீங்க பார்த்தீங்களா, அதை எப்படிங்க போலீஸ்காரன் நம்புவான்..?”



“சார்... ஆனா சத்தியமா அப்படித்தான் நடந்தது!” “நான் வந்தபோது பிஸ்டல் உங்க கையில இருந்தது... நீங்க ஏன் அவனைச் சுட்டிருக்கக் கூடாதுனுதான் நாங்க யோசிப்போம்!” அவர் சொல்வதில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொண்டு, விஜய் அவரைப் பரிதாபமாகப் பார்த்தான். “அவங்க ஆளுங்க வேற யாராவது வந்தா என்னைக் காப்பாத்திக்கணும்னு கைல துப்பாக்கியை வெச்சிருந்தேன் சார்! இவன் பேரு ஜார்ஜ். இவனைத் தேடி சின்னானு ஒருத்தன் வந்தான்.

அவன்கிட்டதான் இப்ப அந்த நடராஜர் சிலை இருக்கு... அதைக் கப்பலுக்கு எடுத்திட்டுப் போறதா அவன் சொன்னான்... இதுல எதுவுமே பொய் இல்ல! என் போனை அவன் சுட்டு சிதைக்காம இருந்திருந்தா, நான் சொன்னது எல்லாத்துக்கும் ஆதாரம் காட்டியிருப்பேன், சார். அதுல முழு வீடியோவே இருந்தது!” “இல்லாத ஆதாரத்தைப் பத்திப் பேச வேணாம்...” ”ஜார்ஜ் கார்ல ஒரு பை நெறைய டாலர் கெடைச்சிருக்கு... அதையாவது ஆதாரமா எடுத்துப்பீங்களா..?” “அநாமத்தா நிக்கற காரு, காருல கெடைச்ச பணம், நீங்க வெச்சிருந்த பிஸ்டல், போன்... இப்படி எல்லாத்தையும் நாங்க ஆராய்வோம். இதையெல்லாம் சம்பவ எடத்துல கெடைச்ச தடயங்களா போலீஸ் பாக்குமே தவிர, நீங்க சொன்னதுக்கு ஆதாரமா எப்படி எடுத்துக்க முடியும்..?”

“இவன் கண்ணைத் தொறப்பானா, தொறந்தாலும் உண்மையைச் சொல்வானான்னு தெரியல...” என்றான், விஜய் சலிப்பாக. “மொதல்ல ஹாஸ்பிடல்ல இவனை அட்மிட் பண்ணிட்டு, அப்புறம் நாம விவரமா பேசுவோம்...” என்றார் துரை அரசன். ஆம்புலன்ஸ் விரைந்தது. அரசாங்க மருத்துவமனை. ஜார்ஜ் ஸ்ட்ரெச்சரில் அவசரமாக உள்ளே எடுத்துச் செல்லப்பட்டான். இன்ஸ்பெக்டருடன் விஜய்யும் பொறுமையின்றி நின்றிருந்தான். சற்று நேரத்தில் மருத்துவர் வெளியே வந்தார்.

“ஆபத்தான நிலைமைலதான் கொண்டு வந்திருக்கீங்க... கழுத்துல ஒரு முக்கியமான நரம்பு கட் ஆகியிருக்கு. அவன் கண்ணு முழிப்பானா, மாட்டானானு உடனே சொல்ல முடியல!  மூளைக்குப் போற ரத்தம் கொறைஞ்சிருக்கலாம்... முழிச்சு எழுந்தாலும், அவனுக்கு எது ஞாபகம் இருக்கும், எது மறந்து போயிருக்கும்னு சொல்லத் தெரியல!”

“உயிர் பொழைப்பானா..? அவன்கிட்ட போலீஸ் கேக்க வேண்டிய முக்கியமான கேள்வியெல்லாம் இருக்கு...” என்றார், இன்ஸ்பெக்டர். “இப்போதைக்கு அவனை ஐ.சி.யூ.வுல வெச்சிருக்கோம். ஒரு ரெண்டு நாள் போகட்டும்... அவன் கண்ணு தொறக்கறானா, கோமாவுக்குப் போறானா பார்ப்போம்...” “அவன் கண்ணு முழிச்சா, உடனே எனக்குத் தகவல் கொடுக்கச் சொல்லுங்க...” இன்ஸ்பெக்டர் துரை அரசன் ஒரு கான்ஸ்டபிளை அழைத்தார். “நீ இங்கயே இருய்யா... டாக்டர், நர்ஸ் தவிர யாரையும் உள்ள விடாத!” “சரி, சார்..” என்று கான்ஸ்டபிள் சல்யூட் அடித்தார். காவல் நிலையம்.

இன்ஸ்பெக்டரைப் பார்த்ததும், காவலர்கள் அனைவரும் நிமிர்ந்து உட்கார்ந்ததிலேயே அவர் எவ்வளவு கண்டிப்பானவர் என்று விளங்கியது. அவருடைய அறையில், தேய்ந்த மர நாற்காலியில் அமர்ந்தான் விஜய். “அரவமணி நல்லூர்ல எங்க ஸ்டாஃப் கல்யாணியை வெட்டின வீடியோ இதுல இருக்கு, பாருங்க...” என்று விஜய் அந்த எஸ்.டி. கார்டைக் கொடுத்தான். “இதுலயே இன்னிக்கு எடுத்த ஒரு மேட்டரும் இருக்கு...” அவன் வீடியோவை ஓட விட்டுக் காட்ட, இன்ஸ்பெக்டர் துரை அரசன் அதை கவனித்துப் பார்த்தார்.

“அந்தக் கேஸுக்கு வேணா இந்த வீடியோ பயன்படும்... இன்னிக்கு நீ சவுக்குத் தோப்புல எடுத்திருக்கற வீடியோவுல உனக்குச் சாதகமா எந்த ஆதாரமும் இல்லியே? ரெண்டு பேர் செத்துக் கெடக்காங்க... ஒருத்தன் அடிபட்டுக் கெடக்கான்... எல்லாம் நடந்து முடிஞ்சப்புறம் எடுத்துக் காட்டினா, இதை வெச்சு என்ன முடிவுக்கு வர முடியும்..?” “இப்ப நான் என்ன சார் செய்யணும்..?” என்றான் விஜய், தோற்றுப் போனவனாக. “எதையும் மிஸ் பண்ணாம, முழுசா வாக்குமூலம் எழுதிக் கொடு... அதை மறந்துட்டேன், இதை மறந்துட்டேன்னு பின்னால எதையும் புதுசா சேர்க்க மாட்டியே..?”

“பொய் சொன்னாதான் சார் ஒவ்வொண்ணையும் ஞாபகம் வெச்சுக்கணும். நான் உண்மையைத்தான் சொல்றேன்...” என்றான் விஜய். அவனிடம் கொடுக்கப்பட்ட பழுப்பேறிய தாள்களில் ஸ்டேட்மென்ட் எழுதி, கையெழுத்திட்டு நீட்டினான். சம்பவ இடத்திலிருந்து அள்ளியெடுத்து வரப்பட்ட டாலர்கள் எண்ணப்பட்டு, ஒரு பிளாஸ்டிக் உறையில் போடப்பட்டன. அந்த உறைக்கு சீல் வைத்து, விஜய்யிடம் ஒரு சாட்சிக் கையெழுத்து வாங்கினார், இன்ஸ்பெக்டர் துரை அரசன். சற்று நேரத்தில் முரளிதரன், தொலைக்காட்சியின் ஆஸ்தான வக்கீலுடன் அங்கு வந்து சேர்ந்தார்.

“என்னப்பா விஜய், மேல மேல பிரச்னையில மாட்டிக்கற..?” என்றார். “எனக்கே புரியல சார்...” என்றான் விஜய். தன்னை அறிமுகம் செய்துகொண்ட வக்கீல், “உங்க விசாரணை முடிஞ்சிருச்சுன்னா, இவர் வீட்டுக்குப் போகலாம் இல்லையா..?” என்று கேட்டார். “போகலாம்! ஆனா, ஊரைவிட்டு எங்கயும் போகாதீங்க தம்பி...” என்றார், இன்ஸ்பெக்டர் துரை அரசன்.

காவல்துறையின் சடங்குகள் முடிந்து, விஜய் வக்கீலுடன் வெளியே வந்தபோது, உடலளவிலும், மனதளவிலும் மிகவும் களைத்திருந்தான். “சவுக்குத் தோப்பு கிட்ட என் பைக் நிக்குது சார்... அங்க என்னை விட்டிருங்க!” என்றான், முரளிதரனிடம். அவன் வீடு திரும்பியபோது, நேரம் நள்ளிரவைத் தாண்டியிருந்தது. பைக் சத்தம் கேட்டதும், அவனுடைய அம்மா மரகதமும், நந்தினியும் வாசலுக்கு ஓடிவந்தார்கள். மரகதத்தின் நெற்றியில் பட்டையாக விபூதி. அவனைப் பார்த்ததும், அவளுக்கு அழுகை பீறிட்டது.

“நந்தினி விவரமாச் சொன்னா... நீ முழுசாத் திரும்பி வரணுமேன்னு மூணு மணி நேரமா சாமி ரூம்லயே உட்கார்ந்திருந்தேன்டா..!” “எனக்கு ஒண்ணும் ஆகாதும்மா... பயப்படாத..!” “பாரு, டிரெஸ்லாம் எப்படிக் கிழிஞ்சு அழுக்காயிருக்கு... இனிமே இப்படிலாம் ரிஸ்க் எடுக்காத” என்று சொன்னபோது, நந்தினியின் குரலும் உடைந்தது. “ஏதாவது சாப்பிட்டியாடா..?” “இல்லம்மா... கொலைப் பசி. குளிச்சிட்டு வரேன். சூடா ஏதாவது கொடு...” குளித்து, சாப்பிட்டு முடிக்கும்வரை விஜய் எதுவுமே பேசவில்லை.

“இவளைக் கூட்டிப்போய் பத்திரமா அவங்க வீட்டுல விட்டுட்டு வரேம்மா...” என்று விஜய் சொன்னதும், அவன் அம்மா பதறினாள். “வேணாம்... வேணாம்... இந்த நேரத்துக்கு மேல நீ எங்கயும் வெளில போக வேணாம். புதுசா ஏதாவது பிரச்னையில மாட்டிக்கிட்டா வம்பு! நைட்டு அவ என் ரூம்ல என் கூட படுத்துத் தூங்கிட்டு, காலைல எழுந்து போகட்டும்...” விஜய் நந்தினியைத் திரும்பிப் பார்த்தான். அவள் ‘சம்மதம்’ என்று தலையசைத்தாள்.

“என்னதான் நடந்தது..? விவரமா சொல்லுடா...” என்றாள் மரகதம். கடற்கரையில் லியோவைப் பார்த்ததில் துவங்கி, சவுக்குத் தோப்பில் அவன் கண்முன் நேர்ந்த நிகழ்வுகளை, விஜய் ஒவ்வொரு காட்சியாக விவரித்துச் சொல்லச் சொல்ல, மரகதமும், நந்தினியும் கண் இமைக்காமல் கேட்டுக்கொண்டிருந்தார்கள். “எல்லாத்தையும் கெட்ட சொப்பனமா நெனைச்சு, மறந்துட்டு நிம்மதியாத் தூங்கு...” என்ற மரகதம், அவன் நெற்றி நிறைய திருநீறைப் பூசினாள்.

ஆனால், அன்றைக்கு இரவு அவன் தூங்கப் போவதில்லை என்று அவனுக்குத் தெரியும். “தினம் கனவுல நான் வந்துதான் நீ எழுந்துப்பேனு அம்மா சொன்னாங்க... நாளைக்கு உன்னை நேர்லயே எழுப்பறேன்!” என்று நந்தினி சொல்லிவிட்டு, அவன் முகத்தில் சிரிப்பைத் தேடினாள். விஜய் சிரிக்கும் மனநிலையில் இல்லை. அந்த அறையில் கனமான திரைகள் இழுக்கப்பட்டு, ஜன்னல்கள் சூரிய வெளிச்சத்தைத் தடை செய்திருந்தன. ஆனால், மரச் சட்டங்கள் அலங்கரித்த கூரையில் தொங்கிய மின் விளக்குகள் அறையைப் பிரகாசமாக்கி இருந்தன. தீபக் தர்மசேனா, தனக்கு எதிரில் அமர்ந்திருந்த சின்னதுரையைப் பார்த்தார். இருவருக்கும் நடுவில் அந்த நடராஜர் சிலை. அதைக் கையில் எடுத்துப் புரட்டிப் பார்த்தார். அவர் முகத்தில் முதன்முறையாக திருப்தியான புன்னகை வந்தது.

“அந்த விஜய் குறுக்க புகுந்து குழப்பாம இருந்தா, இது நேத்தே கப்பல்ல போயிருக்கும்! அடுத்த கப்பல் ரெண்டு மாசம் கழிச்சுதான் வரும்... அதுவரைக்கும் இதை பத்திரமா பார்த்துக்கற வேலை எனக்கு சேர்ந்து போச்சு..!” என்றார், சற்று எரிச்சலுடன். “ஜார்ஜ் இதுவரைக்கும் சொதப்பினதே இல்ல... இப்ப அவனே அடிபட்டு ஆஸ்பத்திரில கெடக்கான்!” என்றான், சின்னதுரை பணிவாக. “கண்ணு முழிக்காம அவன் அப்படியே செத்துப் போனா, நமக்குப் பிரச்னையில்ல... உயிர் பொழைச்சா, அவன் நமக்கு எதிரா எதுவும் பேசிடக்கூடாது!”

“அதை என் பொறுப்புல விடுங்க ஐயா...” “வேணாம்... வேணாம்... அதெல்லாம் நானே பார்த்துக்கறேன்! விஜய் உன் பேரையும் போலீஸ்ல சொல்லியிருப்பான். நீ கீழைக்கரைக்குப் போய், கொஞ்ச நாள் பதுங்கியிரு...” “சரிங்க ஐயா...” “போலீஸ்ல மாட்டாத...” ‘மாட்டினால், உயிரோடு விட்டு வைக்க மாட்டேன்’ என்ற எச்சரிக்கை அந்த வாக்கியத்தில் ஒளிந்திருந்ததை சின்னதுரை உணர்ந்திருந்தான். அடிவயிற்றில் கிலி புரள, “சரிங்க ஐயா!” என்று சொன்னான். கே.ஜி தொலைக்காட்சி நிறுவன அலுவலகம்.

விஜய் நுழைந்ததும், “எம்.டி உன்னை வரச் சொன்னாருப்பா...” என்றாள் ரிசப்ஷனிஸ்ட். லிஃப்ட் பிடித்து நேரடியாக அங்கே போனான். அவனைப் பார்த்ததும், எம்.டி.யின் உதவியாளர் செந்தாமரை பரபரப்பானார். அவனை உடனடியாக உள்ளே அனுமதித்தார். கிரிதர் அந்த பிரமாண்ட அறையில் தனியே அமர்ந்திருந்தார். அவனை உட்காரச் சொல்லி எதிரில் இருந்த நாற்காலியைக் காட்டினார். “உன் வாழ்க்கை ரொம்ப பரபரப்பா போயிட்டிருக்கு போல இருக்கு..?” என்றார். “உன் நிலைமை எனக்குப் புரியுது... ஆனா, அடிக்கடி போலீஸ் விசாரணைல நம்ம டி.வி பேர் அடிபட்டா, நல்லா இல்ல...” “ஸாரி சார்...”

“உன்னை விசாரிக்கணும்னு அவங்க அடிக்கடி இங்க வந்தா, அது தேவையில்லாத பிரச்னையைக் கொண்டுவரும். நீ ஒரு ரெண்டு, மூணு வாரம் லீவுல போ! எல்லாம் அடங்கினப்புறம் ஆபீஸ் வரலாம்...” அவனுக்கு இருந்த ஆதரவுகளில் ஒன்று நீக்கப்படுவதை விஜய் வலியுடன் உணர்ந்தான். அவன் மனதில் ஓடியதைப் படித்துவிட்டவர் போல், “உனக்கு நம்ம லீகல் டிபார்ட்மென்ட் ஆளுங்க எல்லா ஹெல்ப்பும் பண்ணுவாங்க... கவலைப் படாத!” என்றார்.

“சரி சார்...” என்றான். சப் இன்ஸ்பெக்டர் வணக்கம் வைத்ததும், இன்ஸ்பெக்டர் துரை அரசன், ‘‘சொல்லுய்யா... தரோவா விசாரிச்சியா..?” என்றார். “விசாரிச்சேன் சார். சவுக்குத் தோப்புல கெடைச்ச வோல்வோ காரு பாண்டிச்சேரியில பதிவாகியிருக்கு. ஓனர் பேரு ஜார்ஜ்தான். அவனுக்குச் சொந்த நாடு அமெரிக்கா. தமிழ் சூப்பரா பேசுவானாம். பாண்டிச்சேரியில தனியா வீடு வாடகைக்கு எடுத்திருக்கான். ஒத்தை ஆளாதான் தங்கியிருக்கான். அக்கம்பக்கத்துல நண்பர்கள் யாரும் இல்ல.

ஒண்ணாந்தேதி கரெக்டா வாடகை கொடுத்துருவானாம்! அடிக்கடி மகாபலிபுரத்துக்குப் போவான். வெளிநாட்டுலேர்ந்து வர்றவங்களுக்கு கைடா இருப்பான்னு சொன்னாங்க. எப்பவுமே கைல மெல்லிசா கிளவுஸ் போட்டுருப்பானாம். அவன் வீட்டுல நம்ப கோயிலுங்க பத்தி நிறைய புக்ஸ் கெடைச்சுது... அமெரிக்கால கொடுத்த பாஸ்போர்ட், ரெண்டாயிரம் டாலர் எல்லாம் மேஜை டிராயர்ல இருந்தது... லேப்டாப் ஒண்ணும் கெடைச்சிருக்கு...”

“வெரி குட்... லேப்டாப்பைத் திறந்து பாக்க முடிஞ்சுதா..?” “பாஸ்வேர்டு தெரியல சார்...” “சைபர் ஆளுங்ககிட்ட கொடுப்போம்...” “அவன் போன்லேர்ந்து அவுட்கோயிங், இன்கமிங் எல்லா நம்பர் பத்தியும் விவரம் கலெக்ட் பண்ணிட்டிருக்கோம் சார்...” அந்த நேரத்தில் மேஜை மீது இருந்த போன் ஒலித்தது. எடுத்தார். “ஜி.ஹெச்.லேர்ந்து பேசறோம்... ஜார்ஜ்னு பேஷன்ட் கண் முழிச்சா சொல்லச் சொன்னீங்களே... அவனுக்கு நெனைவு திரும்பியிருக்கு!” “இதோ வர்றேன்...” என்று துரை அரசன் பரபரப்பானார்.

(தொடரும்...)